32°C

தேவாங்கு பாதுகாப்பு மைய ஒப்பந்தப் பணி: 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

Editor Tamilnadu Published: November 14, 2026 2 நிமிட வாசிப்பு செய்திகள்
எழுத்து அளவு:

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் தேவாங்கு (Slender Loris) பாதுகாப்பு மையம் அமைக்கும் பணி தொடர்பாக, வனத்துறை அதிகாரிகள் மீது ஒப்பந்ததாரர் அளித்த லஞ்சப் புகாரை விசாரித்து, மூன்று மாதங்களுக்குள் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஈரோட்டைச் சேர்ந்த தேவநாதன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தாங்கள் அரசு ஒப்பந்ததாரராகப் பதிவு செய்து, தமிழக அரசின் பல்வேறு கட்டுமானப் பணிகளைச் செய்து வருவதாகவும், ஜூன் 2024-ல் முறையான ஒப்பந்த ஒதுக்கீட்டு நடைமுறை மூலம் சுமார் ரூ.16 கோடி மதிப்பிலான தேவாங்கு பாதுகாப்பு மையப் பணி தங்களுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பணிகளுக்குத் தேவையான வரைபடங்கள், விரிவான அளவுப் பட்டியல் உள்ளிட்ட தொழில்நுட்ப விவரங்களை வழங்குமாறு மாவட்ட வன அலுவலரிடம் 13 முறை எழுத்துப்பூர்வமாகவும் நேரிலும் கோரியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட வன அலுவலர் நாக சதீஷ் கிடிஜாலா, வனச்சரக அலுவலர் முருகேசன் ஆகியோர் தங்கள் நிறுவன நிர்வாக அதிகாரி ஆதித்யனிடம் பெருந்தொகை லஞ்சம் கேட்டதாக மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
அதற்கு நிறுவனம் உடன்படாததால், சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான பணிகளுக்கான வரைபடங்களும் விவரங்களும் வழங்கப்படவில்லை என்றும், பணி தாமதம் எனக் காரணம் காட்டித் தொழிலாளர்கள் பணித்தளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், கார்த்தி, முரளி உள்ளிட்டோர் மூலம் தொழிலாளர்கள் தாக்கப்பட்டு மிரட்டப்பட்டதாகவும், ஏற்கெனவே செய்த பணிகள் சேதப்படுத்தப்பட்டதாகவும், பின்னர் அதே பணி வேறொருவருக்கு வழங்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அய்யலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் மீது விசாரணை நிலுவையில் உள்ளதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், மாவட்ட துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர் ஆகியோருக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை என்றும் கூறி, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரினார்.
நீதிபதி முருகன் முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் இதே கோரிக்கையை முன்வைத்தார். இதைப் பதிவு செய்த நீதிபதி, மனுதாரரின் புகார் மீது உரிய விசாரணை நடத்தி மூன்று மாதங்களுக்குள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க