Skip to content

கரும்பில் கரிப்பூட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

கரும்பைத் தாக்கும் நோய்களில் கரிப்பூட்டை நோயும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஜாவா, பார்மோசா, பிலிப்பைன்ஸ், தென் ஆப்ரிக்கா, மொரிசியஸ், ஆஸ்திரேலியா, இத்தாலி, இந்தியா போன்ற கரும்பு அதிகம் பயிரிடப்படும் நாடுகளில் காணப்படுகிறது. இந்தியாவில் இந்நோய் 1906 – ம் ஆண்டில் தோன்றியது. இந்நோய் எல்லாக் கரும்பு இரகங்களையும் தாக்கக் கூடியது. கரும்பைத் தவிர கான்ஸ் புல் போன்ற சில புற்களையும் தாக்கக் கூடியது.

நோய்க்காரணி

இந்நோயானது யுஸ்டிலாகோ சிகடாமினியே என்ற பூஞ்சையால் உண்டாக்கப்படுகிறது. இப்பூசணத்தின் இழைகள் ஊண்வழங்கியின் திசுக்களுக்கு இடையேக் காணப்படும் இழைகளிலிருந்து தோன்றும், உறிஞ்சும் உறுப்புகள் திசுவறைகளுக்குள் சென்று பூசணத்திற்கு வேண்டிய உணவுப் பொருட்களைக் கிரகித்துக் கொள்கின்றன.

நோயின் அறிகுறிகள்

இந்நோயானது கருஞ்சாட்டை நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நோயின் முக்கியமான அறிகுறி நோயுற்றக் கரும்பின் நுனியில் கருமை நிறச்சாட்டை போன்ற அமைப்புத் தோன்றும். இந்த கருப்பு நிறச் சாட்டையானது 1.5 – 2.0 மீட்டர் நீளம் வரையிலும் காணப்படும். அது வளைந்தும், சுருண்டும் தென்படும். பொதுவாக இச்சாட்டை முதன்மைத் தூரிலிருந்து வெளிவரும். சாட்டை வளர்ச்சியடையும் போது, சவ்வு கிழிந்து சாட்டையின் மேற்ப்பரப்பைச் சுற்றிலுமிருந்து ஏராளமான பூசண வித்துக்கள், கரிப்பொடி போல் வெளிவரும். இந்த வித்துக்கள் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு நோயைப் பரப்பக் கூடியவை.

விதைக் கரணைகளில் காணப்படும் பூசண இழைகள், மொட்டுக்கள் முளைத்துத் தோன்றும் இளஞ்செடிகளைத் தாக்கி நோயைத் தோற்றுவிக்கும். இளஞ்செடியின் தண்டிலுள்ள மொட்டுக்களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு, பக்கக் கிளைகள் தோன்றி, அவற்றிலிருந்தும் சாட்டைகள் வெளிவரும். முதன்மைத்தூரின் நுனிப்பகுதி வெட்டப்பட்டாலோ அல்லது பூச்சி, புழுக்களின் தாக்குதலினால் அழிக்கப்பட்டு விட்டாலோ, அந்தச் செடிகளிலிருந்தும் பக்கக் கிளைகள் தோன்றி அவற்றிலிருந்தும் சாட்டைகள் வெளிவரும். தாக்கப்பட்டச் செடிகளின் தண்டுப்பாகம் சிறுத்தும், நலிந்தும் காணப்படும். கரிப்பூட்டை வித்துக்கள் சாட்டையின் மேற்ப்பரப்பில் மாத்திரம் காணப்படும். உட்புறத்திலுள்ள திசுக்கள், சாதாரணமான தண்டுப்பாகத்திலுள்ள திசுக்களைப் போல் காணப்படும்.

நோய்ப் பரவும் விதமும் பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும்

இப்பூசணத்தின் டீலியோ வித்துக்கள் முளைப்பதற்கு ஏற்ற வெப்பநிலை 25-300 செ.கி – ம், ஈரப்பதம் 100 சதமுமாகும். ஈரப்பதம் 90 சதத்திற்குக் குறைவாக இருக்கும் போது வித்துக்கள் முளைப்பதில்லை. ஆனால் ஈரப்பதம் அதிகம் உள்ள காலங்களில் 3 வாரத்திற்கு மேல் வித்துக்கள் உயிருடன் இருப்பதில்லை. நோய்த் தோன்றுவதற்கு முக்கியக் காரணம் நோய்த் தாக்கியப் பயிரில் இருந்துத் தேர்வு செய்து நடவுக்குப் பயன்படுத்தப்படும் கரணைகள். கரணைகளிலுள்ள மொட்டுக்களில் காணப்படும் பூசண இழைகள் மற்றும் பூசண வித்துக்கள் மூலமாகவும் நோய்ப் பரவக்கூடும். காற்றின் மூலம் எளிதில் அடித்துச் செல்லப்படும் வித்துக்கள், வயலில் நிற்கும் பயிரிலுள்ள மொட்டுக்களின் மீது விழுந்தும், நோயை உண்டாக்கும். நோய்த் தாக்கியப் பயிரை மறுதாம்புப் பயிருக்காக விடும்போது, நோய் அதிகளவில் தோன்றவும், பரவவும் செய்யும்.

நோய்க்கட்டுப்பாடு

உழவியல் முறைகள்  : (i) நோய்த் தாக்கியப் பயிரின் சாட்டைகளிளிருந்து தோன்றும் கோடிக்கணக்கான டீலியோ வித்துக்கள், நோய் உண்டாகக் காரணமாக இருப்பதால், சாட்டைகளை வித்துக்கள் சிதறாமல் வெட்டி எடுத்து எரித்து விட வேண்டும். இதற்கு சாட்டையின் மேல் ஒட்டியிருக்கும் சவ்வு கிழியுமுன்னரே, ஒரு காகிதப் பையால் மூடி, பின்னர் வெட்டி எடுத்து எரித்து விட வேண்டும். (ii) இந்நோய் விதைக் கரணைகளின் மூலமாகப் பெரும்பாலும் பரவுவதால், நோயுற்ற கரும்பிலிருந்து கரணைகளை விதைக்காகத் தேர்ந்தெடுக்கக்கூடாது. (iii) நோய்த் தாக்கியப் பயிர்களை மறுதாம்புப்பயிருக்கு விடக்கூடாது. (iv) நோய்த் தாக்கியப் பயிரை அறுவடைச் செய்தப் பின்னர், மறுபடியும் அதே நிலத்தில் கரும்புப் பயிரிடாமல், பயிர்ச் சுழற்சி செய்ய வேண்டும்.

விதைச்  சிகிச்சை :

நடுவதற்கு முன்னர் கரணைகளை கரிமப் பாதரச மருந்துகளான அரிட்டான் – 0.25% ( 100 லிட்டர் தண்ணீரில், 250 கிராம் மருந்து ) அல்லது அகல்லால் – 0.5% (100 லிட்டர் தண்ணீரில், 500 கிராம் மருந்து) என்ற அளவில் கலந்து ஒரு ஏக்கர் நடவுக்கான விதைக் கரணைகளை 15 நிமிடங்கள் அமிழ்த்து வைத்திருந்துப் பின்னர் நடுவதன் மூலம் கரணைகள், கணுக்கள், மொட்டுகள் ஆகியவற்றின் மேற்ப்பரப்பில் ஒட்டிக்கொண்டிருக்கும் பூசண வித்துக்களை அழிக்கலாம்.

நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்கள்

கோ.க.671, கோ.க.771, கோ.க.772, கோ.கு.773, கோ.சி.86071, கோ.62198,  கோ.க.91061  போன்ற இரகங்களை இந்நோய்த் தாக்குவதில்லை.

கட்டுரையாளர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news