Skip to content

தேனீ வளர்ப்பு பகுதி – 7

 தேனீக்களின் பருவகால மேலாண்மை

தேனீ நிர்வாகத்தின் கொள்கைகள்

தேனீக்களுக்கு தேன் மற்றும் மகரந்தம் ஆண்டு முழுவதும் கிடைக்காது. இருப்பினும், ஆண்டின் சில பகுதிகளில் உபரி உணவு (surplus food) கிடைக்கிறது, மற்ற காலங்களில் சிறிய மற்றும் வாழ்வாதார உணவு கிடைக்கிறது, அதேசமயம் தேனீக்கள் ஆண்டின் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை காலத்தை சந்திக்க நேரிடும். ஒரு வருடத்தில் வெவ்வேறு பருவங்கள் உள்ளன, அவை மிகவும் மாறுபட்ட வானிலையை கொண்டுள்ளன, சில நேரங்களில் வானிலை ஆனது தேனீக்களுக்கு மிகவும் கடினமாக இருக்கலாம். ஒரு தேனீ வளர்ப்பவர் தனது தேனீக்களை (அ) தேனீ பெட்டிகளை வரவிருக்கும் தேன் மிகுந்த காலத்திற்கு (honey flow period) நன்கு தயார் செய்தல், தேனீக்களின் பஞ்ச காலத்தை (dearth period) வெற்றிகரமாக சுருக்குதல், மற்றும் கடுமையான வானிலை இடர்பாடுகளின் விளைவைக் குறைப்பது ஆகியவற்றில் திறமையாக செயல்பட வேண்டும். தேன் அளவு மற்றும் வானிலை நிலைமைகள் இடத்திற்கு இடம் மாறுபடுவதால், மேலாண்மை நடைமுறைகள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. இருப்பினும், அடிப்படைக் கொள்கைகள் ஒரே மாதிரியானவை.  அவற்றை தேனீ வளர்ப்பவர் இடத்திற்கு தகுந்தவாறு மாற்ற வேண்டும். இந்தியாவில் பருவகால மேலாண்மை குறித்த பொதுவான கருத்துக்கள் மட்டுமே வெளியிடப்படுகின்றன.

தேன் மிகுந்த காலத்தில் (honey flow) மேலாண்மை

தேன் மிகுந்த காலம் தமிழ்நாட்டில் முக்கியமாக ஜனவரி முதல் மே  வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் தேனீ பெட்டிகள் வாரத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்யப்பட்ட வேண்டும்.

தேனீக்களின் எண்ணிக்கை அதிகமாக இல்லாத பலவீனமான பெட்டிகள் வலுவானவையுடன் சேர்க்க (அ) வலுவான பெட்டிகள் இரண்டு மூண்றாக பிரிக்கப்பட வேண்டும்.

இந்த காலகட்டத்தில், தேனீக்கள் தேனை உபரி அளவு அதாவது தேவைக்கு அதிகமாக சேகரித்து, மெழுகினைக் கொண்டு மூடி பாதுகாத்து தேன் அறையில் சேமித்து வைக்கின்றன. இந்த தேனானது,  அவ்வப்போது தேன் பிரித்தெடுப்பான் (Honey extractor) மூலம் மெழுகு அடுக்கினை (Wax layer) நீக்கிய பின் பிரித்தெடுக்கப்படுகின்றன. தேனீக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான (சீல் செய்யப்பட்ட பிரேம்களில் மூன்றில் ஒரு பங்கு) அளவு தேன் அறுவடை செய்யப்படாமல்  பெட்டியில் விடப்படுகின்றன.

தேனீக்களின் கட்டமைப்பு காலம்

சிறந்த, தீவிரமான மற்றும் அதிக உற்பத்தி திறன் கொண்ட  ராணி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுவாக ஒரு ராணியானது, அதிகமாக மற்றும் தொடர்ந்து முட்டையிடும் திறன் கொண்டிருத்தல் வேண்டும். இதன் மூலம் தேனீக்களின் எண்ணிக்கை உயரும்.

குறைவான மக்கள்தொகை (adult) மற்றும் குறைவான இளம் பருவம் (brood) உள்ள பெட்டிகளில் உள்ள ராணிக்களை மாற்றுவதன் மூலம் தோல்வியைத் தவிர்க்கலாம். இவை ராணி தேனீயின் இயலாமையைக் குறிக்கிறது.

தேனீக்களை நோய் மற்றும் பிற பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

பெட்டிகளில் குறைந்த தேன் சேகரிப்பு இருந்தால், அவற்றிற்கு செயற்கை உணவினை வழங்க வேண்டும். செயற்கை உணவானது, ஒரு பகுதி கொதிக்கும் நீரில் 2 பகுதி சர்க்கரை கலந்து தயாரிக்கப்படுகிறது. இதில் படிகமாவதைத் தவிர்ப்பதற்காக, 50 கிலோ சர்க்கரைக்கு 1 டேபிள் ஸ்பூன் டார்டாரிக் அமிலம் சேர்க்கப்படுகிறது. தயாரிக்கப்படும் இந்த கனமான கரைசல் தேனீக்களுக்குப் பரிமாறப்படுகிறது.

முன்னெச்சரிக்கை: பிற பூச்சிகளால் உணவு கொள்ளையடிப்பதைத் தவிர்க்க, மாலையில் மட்டுமே உணவளிக்க வேண்டும்.

தொடரும்

கட்டுரையாளர்: பா. பத்மபிரியா, முதுநிலை வேளாண் மாணவி, பூச்சியியல் துறை,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். மின்னஞ்சல்: priyabaluagri@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news