Skip to content

மண் மற்றும் சுற்றுசூழலை காக்கும் பேணுகை வேளாண்மை!!

அனைத்து உயிரினங்களும் மண்ணை சார்ந்தே வாழ்கின்றன. மண்ணின்றி வாழ்வில்லை; வாழ்வின்றி மண்ணில்லை. மண் வளம் காத்திட தேசிய அளவிலான ‘மண் வள அட்டை வழங்கல்’ திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தபோது, ”நலமான மண்ணே பசுமையான பண்ணைக்கு வழிவகுக்கும்,” என்றார். வேளாண்மையில் தாவர வளர்ச்சிக்கு மண் ஒரு மிக முக்கியமான ஊடகமாகவும், உயிரினங்களின் நலத்திற்கு வளமான மண்ணே அடிப்படை ஆதாரமாகவும் அமைகிறது. மண் வளத்தை காப்பதற்கு வகுத்துள்ள உக்திகளில் ஒன்று பேணுகை வேளாண்மை. பேணுகை வேளாண்மையில் மூன்று முக்கிய கோட்பாடுகளை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும்.

பேணுகை உழவு

குறைந்த உழவு/பேணுகை உழவின் மூலம் மேல் மண் மற்றும் அடிமண் இறுக்கம் தடுக்கப் படுவதோடு மட்டுமின்றி மண்ணின் கட்டமைப்பும் மேம்படுகிறது. மண்ணின் அங்கக பொருட்களில் எரியூட்டும் தன்மை பெருமளவு குறைக்கப்படுகிறது. நீர் பிடிமானம் மற்றும் நீர் தேக்கி வைக்கும் தன்மை அதிகரித்து மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது. மண்ணில் உறங்கும் நிலையில் உள்ள களை விதைகளின் முளைப்புத் திறனை குறைக்கச் செய்து களைகளின் தாக்கத்தை வெகுவாக குறைக்கிறது.

பேணுகை வேளாண்மையில் பூஜ்ய உழவு / குறைந்த உழவினையே (zero tillage or minimum tillage) நடைமுறைப் படுத்துவதால், களை நிர்வாகத்தில் குறிப்பாக கோரை மற்றும் புல் வகைகளைக் கட்டுப்படுத்த பெரும்பாலும் ரசாயன களைக்கொல்லிகளை நம்பி இருக்க வேண்டியுள்ளது. எனவே தரமான களைக்கொல்லிகளை சரியான அளவில் சரியான தருணத்தில் போதிய ஈரப்பதம் இருக்கும் பொழுது பயன்படுத்தினால் மண்ணின் வளத்தை பாதுகாப்பதோடு மட்டுமின்றி களைகளை சிறப்பாக கட்டுப்படுத்தலாம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஆழ்சால் அகலபாத்தி

இயந்திரங்களை கொண்டு ஆழ்சால் அகல பாத்தியை ஒரு மீட்டர் அளவு என்ற வீதத்தில் அமைத்து படுக்கையில் பயிர்களை நடவு/விதைக்கும் முறையானது தற்போது வளர்ந்துவரும் ஒரு தொழில்நுட்பமாகும்.  குறைந்த வேலையாட்களைக் கொண்டு மேட்டுப்பாத்தி மற்றும் வாய்க்கால்களை அமைக்கலாம். படுக்கை நடவு/விதைப்பு முறைக்கு மிகக் குறைந்த விதையளவு மற்றும் நாற்றுகளே தேவைப்படுகின்றன. படுக்கை நடவில் களைக் கொல்லிகளின் திறன் அதிகரிப்பதோடு மட்டுமின்றி களைகளை இயந்திரங்களை கொண்டு மிகச் சுலபமாக கட்டுப்படுத்திட வழிவகுக்கிறது. கடுமையான வறட்சி காலத்தில் பயிர்களைக் காப்பதோடு மட்டுமில்லாமல் மழைக் காலங்களில் அதிகப்படியான நீரினை வெளியேற்ற வழிவகை செய்கிறது.  அடியுரம் மற்றும் மேல் உரத்தை சரியான அளவில் சரியான இடத்தில் பயிர்களுக்கு இட ஏதுவாக அமைகிறது. அதிகப்படியான சூரிய ஒளியை பயிர்களுக்கு கிடைக்கச் செய்து திரட்சியான பயிர் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகிறது; பயிர்களின் வேர் பிடிமானம் அதிகரித்து மழைக்காலங்களில் பயிர்கள் சாய்ந்து விழும் தன்மையைக்  கட்டுப்படுத்துகிறது.

மண் மூடாக்கு

தற்போது நிலவிவரும் குறைந்த பயிர் உற்பத்திக்கு மண்ணின் அங்கக பொருட்களின் அளவு, மண்ணின் வளம் மற்றும் மண்ணில் உள்ள சத்துக்கள் மிகப்பெரும் காரணிகளாக விளங்குகின்றன. இவற்றை மேம்படுத்த அதிகப்படியான இயற்கை உரங்கள் மற்றும் தொழு உரங்களை பயன்படுத்துவது அவசியமாகும். ஆனால் குறைந்து வரும் கால்நடைகளின் எண்ணிக்கை, இயற்கை உரங்களின் பற்றாக்குறை மற்றும் முறையற்ற பயிர்க்கழிவு நிர்வாகம் ஆகியவை இதற்கு பெரும் சவாலாக விளங்குகின்றன. இச்சூழலில் அதிக சத்துக்களை கொண்ட பயிர்கழிவுகளை நாம் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். பொதுவாக விவசாயிகள் பயிர் கழிவுகள் மற்றும் பயிர்த்தாள்களை தீவனமாகவும், கால்நடை மற்றும் கோழியினங்களுக்கு படுக்கைகளாகவும், காளான் உற்பத்திக்கும் சிலர் சாண எரிவாயு உற்பத்திக்கும் பயன்படுத்துகின்றனர். சிலர் வயல் வரப்புகளில் அப்படியே குவித்தும், மண்ணில் மடக்கி உழுதும், வயல்களிலேயே எரித்தும் மக்கிய குப்பையாக மாற்றி என பல்வேறு முறைகளில் நிர்வகிக்கின்றனர்.

பயறு வகைப்பயிர்களை பயிர் சுழற்சி முறையில் சாகுபடி செய்தல்

சம்பா நெல்லுக்கு பிறகு விவசாயிகள் கட்டாயம் ஏதாவதொரு குறைந்த வயதுடைய பயறு வகைப் பயிர்களான உளுந்து, பச்சைப்பயறு, துவரை, தட்டைப்பயறு, கடலை, பசுந்தாள் உரப்பயிர்கள் மற்றும் சோயா ஆகியவற்றை சாகுபடி செய்யும் பொழுது மண்ணின் வளம், அங்ககப் பொருட்களின் அளவு மற்றும் சத்துக்கள் மேம்படுத்தப்படுவது மட்டுமின்றி களைகளின் தாக்கத்தையும் வெகுவாக குறைக்கின்றது. மேலும் கோடைக்கு பிறகு சாகுபடி செய்யப்படும் பயிர்களில் பூச்சி மற்றும் நோய்களின் தாக்கத்தை குறைத்து பயிர்களின் விளைச்சலை பெருக்க வழிவகை செய்கின்றது.

இந்த மூன்று பேணுகை வேளாண்மை கோட்பாடுகளையும் பின்பற்றி மண் வளத்தை மேம்படுத்தி நாம் வருங்கால சந்ததியருக்கு குறைவில்லா மண் வளத்தை பரிசாக அளிக்கலாம்.

கட்டுரையாளர்கள்:

மு .உமா மகேஸ்வரி மற்றும் **மொ. பா.கவிதா

*உதவி ஆசிரியர், உழவியல், ** உதவி பேராசிரியர், உழவியல், தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,பெரியகுளம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news