Skip to content

ஆவி பிடித்தால் கொரோனா வைரஸ் போகாது : மரு.ஃபரூக் அப்துல்லா

சீனாவின் வூஹானில் வாழும் ஒரு இந்திய வர்த்தகர்
ஹிந்தியில் ஒரு மெசேஜ் போட்டிருப்பதாகவும் அதை தமிழில் மொழிபெயர்ப்பதாகவும் ஒரு வாட்சப் ஆடியோ / வீடியோ சுற்றுகிறது.

அதில் கூறப்படுவது யாதெனில் தினமும் மூன்று அல்லது நான்கு முறை
வேது பிடிப்பது/ ஆவி பிடிப்பது கொரோனா வந்தவர்களிடம் தொண்டையில் மூக்கில் இருக்கும் கொரோனாவை கொல்லும் என்று கூறுகின்றது

இது உண்மையா? பொய்யா ?

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

சந்தேகமே தேவையில்லை

மேற்சொன்ன மெசேஜ் சத்தியமான பொய் மட்டுமே 

அந்த பொய்யை யாரும் பரப்பி விட வேண்டாம் சகோதரர்களே

சரி. இப்போது அறிவியலுக்குள் செல்வோம்.

ஆவி பிடிப்பது எதற்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது?

மேல் சுவாசப்பாதையில் மூக்கடைப்பு/ பின் நாசி துவாரம் அடைப்பு / சைனஸ் பிரச்சனைகளுக்கு ஆவி/ வேது பிடிப்பது பரிந்துரைக்கப்படுகிறது

இவற்றால் மூக்கடைப்பு சரியாகும். சைனஸ் பிரச்சனையில் ஏற்படும் அடைப்பு சரியாகி தலைவலி கொஞ்சம் ரிலாக்சாகும்.

ஆனால் ஒரு வைரஸ் கிருமி சுவாசப்பாதையில் இருக்கும் போது அவற்றை ஆவி பிடிப்பது/ வேது பிடிப்பது/ வெந்நீர் குடிப்பது போன்றவற்றால் கொல்ல முடியுமா?

நிச்சயம் முடியாது.

காரணம்

கொரோனா வைரஸ் 60 முதல் 90 டிகிரி வெப்பத்தில் 30 நிமிடங்களில் மரணமடையும்

ஆனால் நாம் வேது பிடிக்கும் போது அதிகபட்சம் ஒரு மணிநேரம் வேது வேதுபிடித்தால் அடையும் வெப்பம் 42 டிகிரி மட்டுமே

இதை பின்வரும் ஆராய்ச்சி கூறுகிறது.

மேலும் வேது பிடிப்பதால் வைரஸ் கிருமியால் ஏற்படும் தும்மல் / மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகள் கூட சரியாவதில்லை என்று ஆய்வுகள் சான்று பகர்கின்றன

( ஆதாரம்
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/8151854

https://www.ncbi.nlm.nih.gov/pubmed/16855975)

பலரது நினைப்பு என்னவென்றால் சூடாக ஒன்றை குடிப்பதாலும்
ஆவியாக்கி வேது பிடிப்பதாலும் அந்த வைரஸை சூடு வைத்து கொல்கிறோம் என்று

அந்த எண்ணமே தவறு காரணம்

வைரஸ் என்பது தனியாக நமது
சுவாசப்பாதையில் ஒட்டிக்கொண்டிருக்காது.
அது சுவாசப்பாதையில் உள்ள செல்களில் புகுந்து அந்த செல்களின் டிஎன்ஏ எனும் மரபணுவை ஹேக் செய்து அதனுடைய ஆர்.என்.ஏ மரபணு எனும் ரெட் சிப்பை சொருகி விடும்.

எனவே நாம் வைரஸை அழிக்கும் போரில் நமது சுவாசப்பாதை செல்களையும் சேர்த்து அழிக்க வேண்டும்.

மேலும், 40 முதல் 45 டிகிரி வெப்பம் மட்டுமே நம்மால் பாதுகாப்பாக வேது பிடிக்க முடிந்த வெப்பமாகும்.
ஆனால் கொரோனா வைரஸை கொல்வதற்கு தேவையான வெப்பம் 60 முதல் 90 டிகிரியாகவும் அதில் 30 நிமிடம் இருக்க வேண்டும்.

அத்தகைய அதிகமான வெப்பத்தில் 30 நிமிடம் வேது பிடிப்பது என்பது அசாத்தியமானது. மேலும் நமது சுவாசப்பாதையையும் நுரையீரலையும் ஊறு செய்யும்.

குழந்தைகள்
பெரியவர்கள்
ஆஸ்துமா நோயாளிகள்
புகை பிடிப்பவர்கள்
நாள்பட்ட நுரையீரல் நோய் இருப்பவர்கள்
அலர்ஜி இருப்பவர்கள்
அனைவருக்கும் ஏற்கனவே சுவாசப்பாதை மற்றும் நுரையீரல் பலகீனமாக இருக்கும்.

இது போன்ற அறிவியலுக்கு புறம்பான கதைகளை நம்பி தினமும் நான்கு வேளை வேதுபிடிப்பதாலோ?
வெந்நீர் குடிப்பதாலோ கொரோனா வைரஸைக் கொல்ல முடியாது.

கொதிக்க வைத்த வெந்நீர் குடிப்பதால் அந்த நீரில் கொரோனா வைரஸ் இருந்தால் அவை கொல்லப்படும். ( காரணம் – தண்ணீர் கொதிக்கும் போது 100 டிகிரியை எட்டும்)
இருப்பினும் அந்த நீரை அப்படியே நம்மால் குடிக்க முடியாது. மனிதனால் குடிக்க முடிந்த வெப்பம் என்பது அதிகபட்சம் 42 டிகிரி மட்டும்.

மேலும் மற்றொரு ஆய்வில்
16 டிகிரி வெப்பத்தில் குடிக்கப்படும் நீரினால் நீர்சத்து உடலில் நன்றாக சேர்கிறது என்றும்
நீர் குடிப்பது சார்ந்த வேர்த்தல் குறைவாக நிகழ்கிறது என்றும் தெரிவிக்கிறது

(https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3762624/)

எனவே கொதிக்க வைத்த நீராக இருப்பினும்
அதை அரை வெப்பத்திற்கு குளிர வைத்து குடிப்பது சிறந்தது.

கொதி நீரை அப்படியே வெப்பத்துடன் குடிப்பது சிறந்ததல்ல.

மேலும் இது போன்ற அதிக வெப்பத்தில் நீரை வைத்து அனைவரும் சிறியவர் பெரியவர் பேதமின்றி ஆவி புடிக்கும் போது
அந்த கொதி நீர் மேலே பட்டு பல வீடுகளில் தீக்காயங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். முக்கியமாக குழந்தைகள் இந்த தீக்காயங்களில் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே
இது போன்ற அறிவியல் ஆதாரமற்ற வதந்திகளை நம்பிக்கொண்டு வேது/ ஆவி பிடிக்க ஆரம்பிக்காதீர்கள் சகோதரர்களே.

தனித்திருங்கள்
வீட்டிலிருங்கள்

நன்றி

Dr.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj