fbpx
மானியங்கள்

அரசை அதிரவைத்த கர்நாடக விவசாயிகள்!

          கடந்த சில ஆண்டுகளாக, தென்னை மற்றும் பாக்கு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து வந்தது. யார் கண் பட்டதோ தெரியவில்லை, இந்த ஆண்டு மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதையாக விலை வீழ்ச்சி என்ற சனி பிடித்துவிட்டது. சென்ற ஆண்டு, உச்சபட்சமாக ஒரு தேங்காய் 18 ரூபாய் வரை விற்றது. இன்றைக்கு விலை 10 ரூபாய்க்கு 4 தேங்காய் என மலிந்துவிட்டது. பாக்கு விலையும் தரைமட்டமாகிவிட்டது. மற்ற பயிர்களைப் போல, விலை இல்லாவிட்டால் அடுத்த பயிருக்கு மாறுவதற்கு, தென்னையும், பாக்கும் வருட வேளாண்மையல்ல… அவை 100 ஆண்டு காலப் பயிர்.

        பருத்தி விவசாயிகளின் கதவைத் தட்டிய எமன் தென்னை, பாக்கு விவசாயிகளின் கதவைத் தட்டுவதற்கு முன்பு விழித்துக் கொண்டார்கள் கர்நாடக விவசாயிகள். தென்னையில், பல ரகங்கள் இருந்தாலும், ‘கர்நாடக டிப்டூர்’ ரகத்துக்கு இன்றும் தனி மவுசு இருக்கிறது. எனவே, 10.08.2016 அன்று, டிப்டூரில் உணர்ச்சி பிழம்பாக ஒன்றுக்கூடிய தென்னை, பாக்கு விவசாயிகள்,145 கிலோ மீட்டர் தூரம் நடப்பயணமாக சென்று, பெங்களூரில் உள்ள சட்டசபையை முற்றுகையிட திட்டமிட்டு, புறப்பட்டனர்.

        சில நூறு நபர்களுடன் துவங்கிய பேரணி… இரண்டு நாட்களில் பல ஆயிரங்களைத் தாண்டி, பெரும் படையாகத் திரள, அதிர்ந்து போனது அரசு. முற்றிலுமாக முடங்கியது போக்குவரத்து. அலறியது அரசு இயந்திரம். அதற்குக் காரணம் இருக்கிறது, சில மாதங்களுக்கு முன்பு, அரசு இயந்திரம் அசந்து தூங்கிக்கொண்டிருந்த போது, ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களை ஓட்டிச் சென்று பெங்களூரு மாநகரில் உள்ள சாலைகளை முற்றுகையிட்டனர். ஒட்டுமொத்த பெங்களூரும் ஸ்தம்பித்து போனது. 600-க்கும் மேற்பட்ட விமானப் பயணிகளின் பயணம் ரத்தானது. போராட்டத்தின் உக்கிரத்தை உணர்ந்த அரசு, விவசாயிகளை அழைத்துப் பேசி, பிரச்னைக்கு முடிவு கண்டது.

      அந்த அச்சம் காரணமாக, விவசாயிகள் பயணம் புறப்பட்டதும், உஷாரானது அரசு. வரிசையாக… அரசுத் துறை செயலர்கள், மந்திரிகள் மற்றும் தேவகவுடா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும், நேரடியாக வந்து விவசாயிகளை சமாதானம் செய்ய முயற்சித்தும் பயனில்லை. வீறுகொண்டு எழுந்த விவசாயிகள் படை, போர் பரணி பாடிப் புறப்பட, மகனை இழந்த சோகத்தையும் மறைத்துக்கொண்டு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். பேரணியை கைவிட்டு, நேரடியாக சட்டசபை வாருங்கள்” என அழைப்புவிட, ஒருவழியாக பேரணி நிறுத்தப்பட்டது.

      கொடுத்த வாக்குறுதிப்படி, முதல்வர் சித்தராமையா, மத்திய அமைச்சர் அனந்தகுமார், எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, மதசார்பற்ற ஜனதாதன தலைவர் குமாரசாமி உட்பட, அனைவரும் விவசாய சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசினார்கள். ‘விவசாயிகளுக்கான இழப்பு அதிகம். மாநில அரசு எவ்வளவு முயன்றாலும் விவசாயிகள் பிரச்சனையை முழுமையாகத் தீர்க்க முடியாது. இந்தக் கூட்டத்துடன் டெல்லி நோக்கி படையெடுப்போம்.

       அரசே, தனது செலவில் விவசாயிகளை டெல்லிக்கு அழைத்துச் செல்லும். பிரதம மந்திரியைச் சந்தித்து, விவசாயிகள் படும் துயரங்களை எடுத்துரைப்போம். பேரிடர் நிதியிலிருந்து பெரும் தொகை ஒதுக்கச் சொல்லி வற்புறுத்துவோம். ஒருவேளை மத்திய அரசு மறுத்தால், டெல்லியிலேயே தர்ணா போராட்டம் நடத்துவோம்’ என முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவானது.

       கர்நாடக விவசாயிகள் கொடுத்து வைத்தவர்கள். அவர்கள் பிரச்னைகளைக் கவனிக்க, காது கொடுத்துக் கேட்க அங்கு ஒரு அரசு இருக்கிறது. ஆனால், இங்கும் இருக்கிறதே ஒருஅரசு… சசிகலா புஷ்பாவை கதற வைப்பதில்தான் அரசின் முழு கவனமும் இருக்கிறது.

      அழுத பிள்ளைக்குத்தான் பால் என்பது போல, கர்நாடக விவசாயிகள் விழித்துக் கொண்டார்கள். தங்கள் மாநில அரசை, தங்களுக்குச் சாதகமான முடிவுகளை எடுக்க வைக்கிறார்கள்.

ஆனால், நாம் எப்பொழுது விழிக்கப் போகிறோம்?

நன்றி

பசுமை விகடன்

1 Comment

1 Comment

  1. Manogaran

    July 21, 2018 at 7:45 am

    eanaka loan venum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படிக்கப்பட்டவை

To Top