Skip to content

விவசாய நூல் – நான்காம் அதிகாரம்.

பயிரின் வளர்ச்சியும் ஊட்டமும்.

    விவசாயி தொழில்களை நிர்ணயிக்கின்ற பொதுவான நிலைமைகளை முன் அதிகாரத்தில் விவரித்தோம். ஆயினும் விவசாயத் தொழிலுக்குரிய அநேக சங்கதிகளின் முகாந்தரங்களைத் தீர அறிந்துகொள்ளுவதற்குப் பயிர்வகைகள் எவ்விதமாய் வளர்கின்றன என்றும் அவைகளின் மூலப்பொருள்கள் யாவை என்றும் கொஞ்சம் தெரிந்துகொள்ளுவது அவசியம்.

     குடியானவன் நிலத்தில் விதை விதைத்தபிறகு தானியத்தையும் இதர மகசூலையும் தகுந்த பிரதிபலனாக ஏரளாமாய் அடையும்பொருட்டு, பூமியில் முளைக்கிற பயிர்கள் மிக்க வீரியத்துடனும் செழிப்பாயும் வளரச்செய்வது அவன் கருத்தாயிருக்கிறது. இவ்வெண்ணம் நிறை வேறுவதற்குக் காலதேச வர்த்தமானங்களை உத்தேசித்து அநுகூலமான காலங்களில் விதை விதைக்க வேண்டும். பயிர்களை வளரும் காலங்களில் சரியாய்ப் போஷிக்கவேண்டும்.

     மண்ணில் நட்ட விதை சீக்கிரத்தில் தன் வேர்களைக் கீழே செலுத்தித் தண்டையும் இலைகளையும் தரையின் மேலே கிளப்புவதற்கு ஆரம்பிக்கிறது. அதாவது, விதை முளைத்துப் பயிர் வளர யத்தனிக்கிறது. ஆயினும் போதுமான உஷ்ணமும், மண்ணில் ஏறக்குறைய தகுந்த ஈரமும் இருந்தால்தான் இப்படிச் சம்பவிக்கும். ஏனெனில், எல்லாவற்றிலும் முதன்மையாக வித்து ஈரத்தைத் தன்னுள் கிரகிக்கவேண்டியது அவசியம். மேலும் தண்டு மேலே கிளம்பாதபடி வித்து மண்ணுக்குள் அதிக ஆழத்தில் விதைக்கப்பட்டால், பயிர் வெளிச்சத்தை யடையாமல் உள்ளேயே மட்கிப்போகும்; தவிர வேர்கள் அடியிலே நுழையாதபடி கீழ்மண் அழுத்தமாயிருந்தாலும் பயிர் தகுந்த ஊட்டத்தைக் கிரகிக்க முடியாமல் அழிந்துபோகும்.

     ஆகையால் பயிர்களின் வளர்ச்சிக்கு ஈரம். உஷ்ணம், வெளிச்சம், ஊட்டம் இவை இன்றியமையாதவை. வளரும்போது ஒரு செடிக்கு வேர்களும், தாளும், இலைகளும் விருத்தியாய்ச் சிறிதுநாள் கழித்து அது புஷ்பித்துக் காய்க்கின்றது. பயிருக்கு அதன் ஒவ்வோர் பாகத்தாலும் தனித்தனி பிரயோஜனம் உண்டு, வேர் மண்ணிற்குள் பிரவேசித்துப் பயிரை நிலை நிறுத்துகிறது. இன்னும் அவ்வேர் அநேகம் சிறு கிளைவேர்களாய்ப் பிரிவதால் அவைகளின் மூலமாய்ப் பயிர் மண்ணிலிருந்து தனக்கு வேண்டிய ஜலம், ஆகாரம் முதலியவற்றைக் கிரகிக்கிறது. தாள், இலை இவ்விரண்டிற்கும் மிக நெருங்கின சம்பந்தம் உண்டு. ஆதலால் அவ்விரண்டும் சிறு கிளையைப் போல ஒரேவிதம் கட்டமைப்பென்று பெரும்பான்மையாக கருதப்படும். ஆயினும், தண்டுதான் வழக்கமாய் ஆகாயத்திற் கிளம்பி இலைகளையும், தன் விலாவிலிருந்து சிற்சமயங்களில், கிளைகளையும் உண்டாக்கிக் கடைசியில் புஷ்பங்களைப் போஷிப்பதற்கு ஆதாரமாகின்றது. தாளின் வழியாகப் பயிருணவு வேர்களிலிருந்து இலைகளுக்குக் கொண்டுபோகப்படுகிறது. கொழுந்தின் வளர் முனையில்தான் இலைகள் எப்போதும் உண்டாகின்றன. அவ்விலைகளிலே பயிருணவு சீரணிக்கப்பட்டுப் பயிரின் கூற்றை அல்லது கட்டடத்தை அமைப்பதற்குந் தகுந்த நிலைமையில் கொண்டு வரப்படுகின்றது. மேலும் இலைகளின் வழியாகத்தான் பயிர்கள் தங்கள் ஆகாரத்தின் ஒரு பகுதியை உட்கொண்டு இனி, தங்களுக்கு வேண்டாத ஜலமும் இன்னும் வேறு சில பொருள்களையும் வெளியே விடுகின்றன.

      வளரும் பயிர்களின் சகல பாகங்களிலும் ஏராளமான தண்ணீர் இருக்கின்றது. இந்த ஜலத்தை வெளியே நீக்கிவிடலாம். பின் தங்கியிருக்கும் உலர்ந்த பாகத்தில் அநேகவித கலப்புப்பொருள்கள் இருக்கின்றன. அவைகளில் சிலது சர்க்கரை, மாவு, தைலம் போன்றன, இக்கலப்புபொருள்கள் எல்லாம் சில தனிப்பொருள்களால் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. பயிரின் ஜலம் நீங்கி உலர்ந்த பாகத்தை எரித்து விட்டால், அதன் பெரும் பகுதி ஆகாயத்தில் மறைந்துபோய் மற்ற சிலபாகம் சுத்தமான வெள்ளைப் பொடி அல்லது சாம்பலாகப் பின் தங்கிவிடும். செடியின் சாம்பலாகிய தாதுப்பொருளுக்கு அநிந்திரவஸ்து என்று கூறுவார்கள். அவ்வஸ்துவைச் செடி மண்ணிலிருந்து கிரகித்திருக்கின்றது. மறைந்துசெல்லும் மற்ற பாகத்திற்கு இந்திரவஸ்து என்பார்கள். அது முதலில் ஆகாயத்திலிருந்து கிரகிக்கப்பட்டது. பயிர்களில் காணப்படும் தாதுப்பொருள்கள் அப்பயிருக்குள் அநேகம் வேறுபாடுகளைச் செய்து, பயிர்களுள் விசேஷமாய் அடங்கியுள்ள இந்திரக் கலப்புப்பொருள்களை உண்டாக்குவதில் முக்கிய பிரயோஜனமாகின்றன, ஆகையால் இந்திரவஸ்து அல்லது அநிந்திரவஸ்து இவைகளாலாகிய சகல பொருள்களும் பயிரின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானவை, இவ்வின்றியமையாப் பொருள்களைப் பயிருணவு என்பார்கள். அவைகளில் சிலது ஆகாயத்திலிருந்தும் வேறு சிலது மண்ணிலிருந்தும் அடையப்படுகின்றன.

     ஜலம் ஆகாயத்திலிருந்து கிரகிக்கப்படும் முக்கிய பயிருணவுகளில் ஒன்று. தண்ணீரன்றியில் செடிகள் வளரவே மாட்டா. அதுவே பயிரைப் போஷிப்பதற்கு ஒர் உணவாவதுமன்றியில் பின்னால் கூறப்படும் ஒரு பொருளைத்தவிர மற்ற சகல பயிர் உணவுகளையும் கரைத்துப் பயிருக்குள் செலுத்துவதற்கும் பிரயோஜனமாகின்றது. இப்பொருள்கள் வேர்கள் மூலமாய் உட்சென்று அவ்வேர்களிலிருந்து பயிர்ச்சாரத் தண்ணீரால் இலைகளுக்குக் கொண்டுபோகப்பட்டுப் பயிரின் கூறை அமைப்பதற்கு உபயோகப்படும் முன் அடையவேண்டிய சில மாறுதல்களை அடைகின்றன.

     தாவரங்கள் தண்ணீரை முக்கியமாய் மழைரூபமாகவாவது, பனிரூபமாகவாவது அடைகின்றன. மழையினால் நதி, குளம், கிணறு இவைகளுக்கு ஜலம் வருகிறது.

[மண்ணில் அடங்கிய தாதுப்பொருள் தாவரப்பொருள் இவைகளின் அணுக்கள் எப்போதும் இளக்கமாய்ச் சேர்க்கப்பட்டிருக்கின்றன, ஆதலால் மண்ணிற்குள் தண்ணீர் ஏறத்தாழ இலகுவாய்ச் செல்லுகிறது. ஆயினும், அது மண் அணுக்களுக்கு நடுவேயுள்ள இடை வெளிகளை அவசியமாய் நிரப்புகிறதில்லை. உண்மையாக ஜலம் அப்படி நிறைந்து கோத்துக்கொள்ளாமல் தடுப்பதே குடியானவன் நோக்கங்களில் ஒன்றாய் இருக்கிறது. ஏனெனில், இடைவெளிகள் நிரம்பிவிட்டால் வேர் தனக்குரிய தொழிலைச் சீராக நடத்துவதற்கு அவசியமான காற்றை மண்ணிற்குள் அடையாமல் தீமைக்கு உள்ளாகும். சீராய் வடிகட்டின தரையில் நடப்ப தென்னவென்றால், தண்ணீருக்குள் அமிழ்த்தி வெளியே எடுக்கப்பட்ட ஒரு விரல் நனைந்ததுபோல், ஒவ்வொரு அணுவையும் கவர்ந்துள்ள நுட்பமான படலத்தை (நீர்த்திவலையை) மட்டும் தங்கவிட்டு ஜலம் தரையின்வழியாய் இலகுவாய் வெளியே வழிந்தோடிவிடும்.

     இம்மெல்லிய திவலையிலிருந்துதான் வேர்கள் தங்களுக்கு வேண்டிய ஜலத்தை உறிஞ்சுகின்றன. ஒவ்வொரு வேரின் முனையும் மெல்லிய அணுக்களிடத்து அவை மிக நெருங்கி அதிக உறுதியாய் ஒட்டுகின்றன. அவை அவ்வளவு உறுதியாய் ஒட்டுவதால்தான் பயிர் வளர்கின்ற மண்ணிலிருந்து ஜாக்கிரதையாய் ஒரு செடியைப்பிடுங்கினால் வேர்களில் மண் அணுக்கள் ஒட்டியிருப்பதைப் பார்ப்போம். இவ்விதமாக வேர்க்கேசங்கள் நீர்த்துளிகளுடன் நெருங்கி ஒட்டியிருப்பதால், அவற்றினுள் தண்ணீரும் அதில் கரைந்துள்ள உணவுப்பொருள்களும் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிரவேசித்துக்கடைசியில் பயிரில் வந்து சேருகின்றன.]

      வெவ்வேறு பயிர்களிலுள்ள ஜலம் பரிமாணத்தில் வித்தியாசப்படுவதும்தவிர, ஒரே பயிரில் வெவ்வேறு அங்கங்களிலேயும் வெவ்வேறு காலங்களிலேயும் ஜலத்தின் அளவு வித்தியாசப்படுகிறது. இளம் நாற்றில் அதன் முழுமையில் 8ல் 7 பங்குக்கு அதிகமாகவும், பருவம் வந்த பயிரில் 4ல் 3 பங்குக்குக் கொஞ்சம் குறைவாகவும், முற்றின வித்தில் 8ல் 1 பங்கு அளவுக்கும் அதிக சொற்பமாகவும் ஜலம் இருக்கலாம். மற்ற விதப் பயிர் உணவுகள் மண்ணிலிருந்து உட்கொள்ளப்பட்டு இலைகளுக்கு செல்லுவதற்குத் தண்ணீர் மூலகருவியாக இருப்பதினாலேயும் ஒர் செடியின் அதிக பாகம் தண்ணீராய் இருப்பதினாலேயும் வேர்கள் மூலமாய் ஜலம் இடைவிடாமல் கிரகிக்கப்படவேண்டு மென்பது நிதர்சனமாகிறது. இலைகள் பகல் வெளிச்சத்தில் தங்கள் புறங்களிலுள்ள சிறு துவாரங்கள்வழியாய் ஏராளமான தண்ணீரை ஆவியாக வெளிவிடுகின்றன.

[பயிர் வளரும் பருவங்களில் இலைகள்மூலமாய் வெளிவருகின்ற தண்ணீர் சில சமயங்களில் பயிரைவிட அதிகமடங்கு எடையுள்ளதாயிருக்கிறது. ஆதலால் இலைகளினின்று வெளியேபோகும் நீரை நிரப்புவதற்கு வெகு சீக்கிரமாய் ஒயாமல் தண்ணீர் வேர்களிலிருந்து மேல்ஓடிச் செல்லவேண்டும். இல்லாவிடில் பயிர் வாடி வதங்கிப்போகும். இவ்வுண்மை நாற்று நடவால் தெளிவாகும். இதில் ஜலத்தைப் பயிர்க்குள் உறிஞ்சும் வேர்க்கேசங்கள் போக்கடிக்கப்படுகின்றன. அவை மறுபடியும் உண்டாவதற்குப் புதுமண்ணில் பயிர் நட்டபிறகு சிலகாலம் செல்லும். மத்தியகாலத்தில் இலைகள், காற்று, வெப்பம் முதலானவை படும்படி வெளியே விடப்பட்டிருப்பதால் அவைகளிலிருந்து நீர் முன்போலவே ஆவிரூபமாக வெளியே போய்விடுகிறது. இதற்குப் பதிலாக வேறு நீரை நிரப்புவதற்கு வேர்களால் முடியாமலிருப்பதால், பயிர்கள் சீக்கிரம் வாடிப்போகின்றன. நாற்று நட்டபிறகு வேர்க்கேசங்கள் முளைத்து, அவைகளினால் சூரிய வெளிச்சத்தில் இலைகள்மூலமாய் வெளிவருகின்ற தண்ணீரை நிரப்புவதற்குப் பயிர்க்கு ஒர் வலிமை உண்டாக்கும் பொருட்டு மாலைப்பொழுதில் நாற்று நடுதலை வெகுவாய் அப்பியசிக்கப்படுகின்றது.]

      இத்துவாரங்கள் இலையின் கீழ்ப்புறத்தில் முக்கியமாய்க் காணப்படும். அவை இலையின் உட்கூறுடன் சம்பந்தப்பட்டு, வெளிச்சத்தில் திறந்துகொண்டும், இருட்டில் மூடிக்கொண்டும் இருக்கின்றன. ஆகையினால் இலைகளிலிருந்து வெளியே வருகின்ற ஜலத்தின் பரிமாணம் வெப்பமும் வறட்சியும் மிகுந்தகாலத்தில் அதிகரிக்கின்றது. இந்தியாவில் மழை, கனத்த தாரைகளாக அதிககாலம் இடைவிட்டுப் பொழிகிறதினாலும், அம்மழை பெய்யாத நீடித்த இடைநாட்களில் ஆகாயம் உஷ்ணமாயும், வறட்சியாயு மிருப்பது சாதாரணமாகையினாலும் தரையில் விழும் மழைத்தண்ணீரைச் சேகரித்தும் பூரணமாய் உபயோகப்படுத்துவதற்கு வேண்டிய மார்க்கங்களனைத்தையும் போதுமானவரையில் அநுசரிக்கவேண்டும். மழை ஜலத்துடன் அடித்து வருகின்ற சில சிரேஷ்டமான பொருள்களை, மண் கிரகிக்கும்பொருட்டுத் தரை ஊறி நனைவதற்கு வேண்டிய ஏராளமான ஜலத்தைக் கூடியவரையில் விவசாயி சேகரித்துக்கொள்வது சிலாக்கியம். இவ்வெண்ணங்களை நிறைவேற்றுவதற்குக் விவசாயி நிலத்தைச் சீராய் உழுது, தன்னால் இயலும்வரை இந்திரவஸ்துக்களை எருவாக்கி, அதைக் கொழுமைப்படுத்தவேண்டும். நிலம் இவ்வாறு சீர்திருத்தப்பட்டால் இரவில் பெய்கிற பனியாலும், அது அதிக பிரயோஜனத்தை அடைகிறது.

     ஆகாயத்திலிருந்து பயிர்கள் தங்கள் ஊட்டத்தின் பெரும் பகுதியை அடைந்தபோதிலும் அதிலிருந்து நேராய்க் கிரகிக்கப்படும் பயிருணவு கரியமிலவாயு ஒன்றுதான். இவ்வாறு, ஜலம் ஆவியாக வெளியே வருகின்ற இலைகளின் வெளிப்புறத்திலுள்ள சிறுதுவாரங்கள் மூலமாகச் செடிகளால் உட்கொள்ளப்படுகின்றது. கரியமிலவாயு ஆகாயத்தில் எப்போதும் உள்ள ஒர் காற்று. பகல் வெளிச்சத்தில் பசுமை நிறமுள்ள செடிகளால் அது ஆகாயத்திலிருந்து இடைவிடாமல் உட்கொள்ளப்படுகிறது. ஜீவப்பிராணிகள் வெளிவிடும் மூச்சினாலும், நெருப்பு எரிவதினாலும், பிராணி தாவரம் இவைகளுக்குச் சம்பந்தப்பட்ட வஸ்துக்கள் அழிவதினாலும் அது உண்டாகி, ஆகாயத்தில் இடைவிடாமல் சேர்கிறது. இவ்வாயு செடிகளின் இலைகளால் உறிஞ்சப்பட்டபிறகு சூரிய வெளிச்சத்தின் உதவியால் இரண்டு தனிப்பொருளாகப் பிரிகிறது. அப்பொருள்களில் ஒன்று பிராணவாயு. அது திரும் பவும் ஆகாயத்தில் போய்ச் சேர்கிறது. மற்றொன்றுகரியணு (அதாவது தாவரப்பொருளைப் பாதி எரித்த பிறகு குளிரப்படுத்தினால் பின்னே விடப்படும் கருப்புப் பொருளாகிய சாதாரண கரிதான்). இக்கரியணு பயிரின் கூறு அமைவதற்கு இன்றியமையாப் பொருள்களாக மாற்றப்படுகின்றது. இம்மாறுதல்களை உண்டாக்குவதற்குப் பயிர்க்குப் பசுமை நிறத்தைக் கொடுக்கும் பொருள், பயிரில் இருப்பது அத்தியாவசியம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கரியமிலவாயுவை உட்கொள்ளுதலும், பிராணவாயுவை வெளிவிடுதலுமாகிய இருவகைத் தொழில்களும் இருட்டில் பூர்த்தியாய் நின்றுவிடுகின்றன. வெவ்வேறு பயிர்களுக்குத் தகுந்த போதுமான உயர்ந்த சீதோஷ்ண நிலைமையும் மேற்குறித்த செயல்களுக்கு அவசியமாயிருக்கின்றது. ஒருவாறு கூறுமிடத்துச் செடிகளின் ஊட்டத்திகுரிய உணவுகள், இலைகளில் உண்டாகிறபடியால் அவைகள் பயிர் வளர்ச்சிப் பருவத்தின் துவக்கத்தில் உபயோகமாகும்பொருட்டா வது வித்திலும், திரண்ட மூலங்களிலும் (அதாவது காம்புகளிலும்), வேர்களிலும், கிழங்குகளிலும் போய்ப் படியும்படி பயிர்ச்சாரத்தின் மூலமாய்க் கொண்டுபோகப்படுகின்றன.

     ஜலமும், கரியமிலவாயுவும் தவிர செடிகள் ஆகாயத்திலிருந்து வேறொரு பொருளையும் அடைகின்றன. அப்பொருளுக்கு உப்புவாயு என்று பெயர். அது கரியமிலவாயுவைப்போல சுத்தமான தன்மையிலிருக்கும்போது, கண்ணுக்குப் புலப்படாத ஒர் காற்று, அது ஆகாயத்தில் சுமார் 5ல் 4 பங்கு இருந்தபோதிலும் அந்நிலைமையில் பயிர்களுக்கு நேராய் உபயோகப்படமாட்டாது. பயிர்களுக்குப் பிரயோஜனமாகும் பொருட்டு இந்த உப்புவாயு அதிக கலப்பில்லாத தன்மையில் நவாச்சாரத்தில் காணப்படும். உப்புவாயு பயிர்களுக்கு இன்றியமையாப் பொருள். அது இல்லாவிடில் தாவரங்கள் பிழையா.

[கொஞ்சம் நவாச்சாரத்தோடு புதிய சுட்ட சுண்ணாம்பைக் கலந்து அம்மிச்ரமத்தில் தண்ணீர் ஊற்றினால் ஒர் விதமான வாசனை தோன்றுகிறது, மஞ்சள் சாயமேற்றின ஒர் துணியை அம்மிச்ரமத்தின்மேல் விரித்தால் அது ஊதா நிறமாகிறது, அவ்வாசனையும், நிறம் மாறுதலும். அம்மிச்ரமத்திலிருந்து வெளியேவரும் ஒர் பொருளாகிர நவாரச்சார வாயுவினால்தான், ஜலம், கரியமிலவாயு, நவாச்சாரவாயு ஆகிய ஒவ்வொன்றும் கலப்புப்பொருள்கள். அதாவது அவைகள் வேறு பாகங்களாக பிரிக்கப்பட்டும் கலந்துள்ள இதர பொருள்களால் உண்டாக்கப்பட்டிருப்பதாகவும் காணப்படும். பின்குறித்த பொருள்களுக்குத் தனிப்பொருள்களாகப் பிரிக்கப்படமாட்டா அத்தனிப்பொருள்கள் நான்கு மேல்குறித்த மூன்று கலப்புப்பொருள்களும் கீழ்வருமாறு உண்டாக்கப்பட்டிருக்கின்றன:

தண்ணீர், பிராணவாயுவும் ஜலவாயுவும் சேர்ந்தபொருள்

கரியமிலவாயு, பிராணவாயுவும் கரியணுவும் சேர்ந்தபொருள்.

நவாச்சாரவாயு, உப்புவாயுவும் ஜலவாயுவும் சேர்ந்தபொருள்.

    கரியணு ஒர் கனத்தபொருள், பிராணவாயு, உப்புவாயு, ஜலவாயு ஆகிய இவை காற்றுகள், பயிர்களுக்குக் கரியமிலவாயுவிலுள்ள கரியணுவும், நவாச்சாரத்திலுள்ள உப்புவாயுவும், தண்ணீரும் ஆசாரமாக வேண்டியிருக்கின்றன, முதலில் குறித்த இருபொருள்களும் கரியமிலவாயு நவாச்சாரவாயு மூலமாகப் பயிர்க்கூறு அமைவதற்கு உபயோகமாகின்றன.

     பயிர்கள் தங்களுக்கு வேண்டிய உப்புவாயுவை வேர் மூலமாகவும் அடைகின்றன. ஆயினும், நவாச்சாரவாயு மிக எளிதில் அறியகூடிய அதிக கலப்பற்ற பொருள். இதர பொருள்களை அவ்வளவு]

     மேலும் ஜீவராசிகளைப் போஷிப்பதற்குத் தாவரங்கள் சக்தியற்றவைகளாகும். நவாச்சாரவாயு ஆகாயத்தில் எப்போதும் கொஞ்சமளவு இருந்துகொண்டேயிருக்கிறது, அதன் பரிமாணம் உஷ்ணமும் வறட்சியுமானகாலத்தில் அதிகரிக்கிறது, மழை பெய்யும் போது அது ஆகாயத்திலுள்ள இந்த நவாச்சாரவாயுவை அடித்துக்கொண்டு பூமியிலுள்ள மண்ணில் செலுத்துகின்றது. முதலில் பெய்யும் மழைகள் பின்னால் பெய்வதைவிட நவாச்சாரவாயுவை அதிகமாய்க் கொண்டுவருகின்றன, மேலும் மண்ணில் இந்திரவஸ்துக்கள் அழியும்போதெல்லாம் நவாச்சாரவாயு உண்டாகிறது.

      ஆயினும், அது பயிர்களைப் போஷிப்பதற்கு வேண்டிய பொருள்களுள் மிகவும் அருமையாயும், வேண்டிய அளவு சேகரிப்பதற்குப் பிரயாசமுள்ளதாயு மிருக்கிறது. ஆகாயத்தில் தப்பிச் செல்லக்கூடியதாகவும், பயிர்களின் வேர்களுக்கு எட்டமுடியாவண்ணம் மண்ணிற்குள் வெகு ஆழம் அடித்துக்கொண்டு போகப்படும் தன்மையுள்ளதாயு மிருக்கிறது. ஆகையால் குடியானவன்

[சுலபமாய் விவரிக்க முடியாது. ஆனாலும் அவைகளில் முக்கியமானவை அக்கினித் திரவமும் இதர வஸ்துக்களுடன் சேர்ந்து உண்டாகும் பொட்லுப்புப்போன்ற கலப்புப்பொருள்கள், இந்தப் பொட்லுப்பு, அக்கினித்திராவகமும் சாம்பல் காரசத்தும் சேர்ந்துள்ள பொருள், மேற்குறித்த கலப்புப்பொருள்களுக்கு சம்பந்தமான உப்புகள் பயிர்களைப் போஷிப்பதற்கு மிகப் பிரயோஜனமாகின்றன, அப்பொருள்களிலிருந்தும் நவாச்சாரவாயுவிலிருந்தும் பயிர்கள் தங்களுக்கு வேண்டிய உப்புவாயுவை கிரகிக்கின்றன, நவாச்சாரவாயு தானே பயிர்க்குவேண்டிய உப்புவாயுவைக் கொடுப்பதற்கு முக்கிய ஆதாரப் பொருளாகமாட்டாது, ஆயினும், அது இச்சிரேஷ்டப்பொருளாகிய உப்புவாயுவைக் கொடுக்கும் ஆதாரப்பொருள்களுக்கு ஒர் திருஷ்டாந்திமாயிருப்பதாலும் வெகு எளிதில் விவரிக்கக்கூடியதாலும் இங்கு அதைப்பற்றிச் சொன்னோம் மேலும் மண்ணில் கிடைக்கும் நவாச்சாரவாயு அவ்வளவும் தரையில் எப்போதும் உள்ள சில நுட்பமான புல் பூண்டுகளால் வெகு சீக்கிரத்தில் வேறு உப்புப்பொருள்களாக (nitrates) சாமானியமாய் மாறுபடுகின்றது.

      அந்நஷ்டத்தினின்று தன்னைக் காப்பாற்றிக்கொள்ளுவதற்கு எப்போதும், கவனமுள்ளவனா யிருக்கவேண்டும். ஆயினும், விவசாயிக்கு அநுகூலமான நவாச்சாரவாயுவின் முக்கிய பகுதியை நஷ்டமன்றியில் வெகுவாகக் கிரகித்துத் தங்கட்குள் தேக்கிக்கொள்வதற்குச் சில செடிகளுக்கும் பயிர்களுக்கும் ஒர் விசேஷ சக்தியிருக்கின்றது, இப்பயிர்களைப் பயிரிடுவதால் அதிக நஷ்டத்தினின்றும் காப்பாற்றிக்கொள்ளலாம்.

      ஒரு செடியைப்பிடுங்கி எரித்தவுடன் மிகவும் சொற்பமான சாம்பல் பின்னால் தங்கினபோதிலும் இச்சாம்பல் மிகவும் விசேஷமுள்ளதாயிருக்கிறது. அது மண்ணிலிருந்தே கிரகிக்கப்பட்டுப் பின்பு தண்ணீரில் கரைந்து பயிரால் உட்கொள்ளப்பட்டது. அதில் அநேகவிதப் பொருள்கள் அடங்கியிருக்கின்றன. அவைகளில் சாமானியமானவை இரும்பு, சுண்ணாம்பு, சிக்கி முக்கிக்கல் அல்லது மணல், கந்தகம் முதலியன. செடிகளுக்கு ஊட்டத்தைக் கொடுக்க இப்பொருள்களில் ஒவ்வொன்றிலும் சிலபாகம் தேவையாயிருக்கிறது. ஆயினும் செடிகளின் சாம்பலில் சிரேஷ்டமான இதரப் பொருள்களும் காணப்படுகின்றன. அவை அவ்வளவு சாமானியமானவை அல்ல. ஆதலால் மிகவும் அருமையுள்ளவையா யிருக்கின்றன. இப்பொருள்களில் மிகச் சிரேஷ்டமானது பிரகாசதம் (Phosphorus). சாதாரண நெருப்புக்குச்சிகள் நுனியில் தடவப்பட்டிருக்கும் சிவப்புப்பொருள் பிரகாசதந்தான். அப்பொருளின் ஒருவித ஸ்வரூபம் நெருப்புக்குச்சிகள் செய்வதற்கு இவ்வாறு உபயோகப்படுத்தப்படுகிறபடியால் அது எவரும் அறிந்த வஸ்துவாயிருக்கிறது. மேற்குறித்த நெருப்புக்குச்சிகள் செய்வதற்குப் பிராணிகளின் எலும்பிலிருந்து திமிர்பாஷாணத்தை (Phosphorus) எடுக்கிறார்கள். எலும்புகளி லிருப்பதுபோலவே பிராணிகளின் இதரபாகங்களிலும் அது காணப்படும். ஜீவராசிகள் தாங்கள் உண்ணும் பயிர்வகை உணவிலிருந்து இப்பொருளைக் கிரகிக்கின்றன. பயிர் வகைகளோ, தாங்கள் வளரும் மண்ணிலிருந்து அதை அடைகின்றன. பிரகாசதமன்றியில் பயிர்கள் வளரமாட்டா. மேலும் அது நவாச்சார வாயுவுக்கு அடுத்தாற்போல் பயிர்வகை உணவுகளில் அதிக சிரேஷ்டமானது.

      பயிர் உணவுகளில் மற்றோர் சிரேஷ்டமான பொருள் சாம்பல் காரசத்து (Potash). அது புகையிலை இன்னும் சிலவகை மரங்களின் சாம்பல்களில் ஏராளமாய் இருக்கின்றது. அக்கினித் திராவகத்துடன் கலந்தால் பொட்லுப்பாகிறது. அப்பொருள் பிரகாசதத்தைவிட அதிக சாமானியமாய்த் தோன்றியபோதிலும் ஒர் சிரேஷ்டமான பயிருணவாகிறது. இன்னும் பயிர்களின் சாம்பலில் அகப்படும் மற்றோர் பாகம் இலவணசாரம் (Soda). இதுதான் நெருப்பு, விளக்கு முதலியவை எரியும்போது சுடருக்கு நிறத்தைக் கொடுக்கிறது. இது நாம் சாப்பிடும் சாதாரண உப்பிலும் வேறு அநேக பொருள்களிலும் கிடைக்கிறது. வாஸ்தவத்தில் இப்பொருள் மிகவும் எராளமாய் அகப்படுகிறது. சாதாரணமாய் உள்நாட்டுப் பயிர்களில் சாம்பல் காரசத்தும், கடற்கரை பயிர்களில் இலவணகாரமும் அதிகமாய்க் கிடைக்கின்றன. சுண்ணாம்பு எல்லா பயிர்களில் சிற்சில அளவு இருக்கின்றது. ஆயினும், சில பயிர்களுக்குத்தான் அதன் ஊட்டம் அதிகமாய் வேண்டியிருக்கிறது. மேலும் அப்பொருள் மண்ணில் போதுமான அளவு ஏராளமாய் எப்போதும் அகப்படும்.

      சிக்கிமுக்கி அல்லது சிலிகா என்று கூறப்படும் மணலும், மூங்கிலில் அழுத்தமாயும் மிருதுவாயுமிருக் கப்பட்ட வெளிப்பக்கங்களிலும் தானியப்பயிர்களின் வைக்கோலிலும் ஏராளமாய் இருக்கின்றது. இது சாதாரணமாய் எவ்விடங்களிலும் அதிகமாய் அகப்படும். பயிர்வகைகள் வளர்வதற்கு இரும்பும் கொஞ்சம் வேண்டியிருக்கிறது. அது மண்ணில் இல்லாவிடில், பயிர்கள் பசுமையாற்றுப்போகும். சரியாய் வளரமாட்டா. கந்தகமும் சொற்ப அளவு தேவையாயிருக்கிறது. இப்பொருளின் சம்பந்தத்தால்தான் வெங்காயம்.உள்ளிப்பூண்டு, கடுகு, முள்ளங்கி முதலானவைகளுக்குரிய விசேஷ வாசனைகள் உண்டாகின்றன.

      பயிர்வகைகளின் போஷிப்புக்கு வேண்டிய தாது அல்லது அநிந்திர வஸ்துக்களனைத்தும் மண்ணில் கிடைக்கின்றன. தண்ணீர் தரைக்குள் பாய்ந்து செல்லும்போது ஜலத்தை உப்பின்மேல் ஊற்றினால் உப்பு, ஜலத்துடன் கரைந்து மறைந்துபோகிறதுபோல் தாதுப் பொருளின் சிலவற்றைக் கரையச்செய்கிறது.

      நவாச்சாரவாயு, உப்புவாயு இவைகள் சம்பந்தப்பட்ட பொருள்களும் (Nitrates), கரியமிலவாயுவும் தண்ணீரில் கொஞ்சமளவு இருக்கின்றன. இப்பொருள்கள் நன்றாய்க் கரைந்தால் வேர்களிலிருந்து பிரிந்துவருகிற சிறு வேர் குழல்கள் மூலமாயாவது, வேர்க்கேசங்கள் மூலமாயாவது பயிர்களின் வேர்களுள் பிரவேசிக்கின்றன.

     சகல பயிர்களும் ஒரேவிதமாகத் தாதுப்பொருள்களை உட்கொள்ளுகிறதில்லை. மேலும் ஒரேநிலத்தில் பயிரிடப்பட்டாலும் அவைகள் தாதுப்பொருள்கள் ஒவ்வொன்றையும் ஒரே அளவாகவும் கிரகிக்கிறதில்லை. சிறந்த மகசூலை அடைவதற்குப் பயிரிடப்படும் வெவ்வேறு பயிர்களுக்குத் தேவையானவை எவையோ அவைகளைக் விவசாயி முறையாக தெரிந்துகொள்ளுவது அவசியம்.

தொடரும்….

1 thought on “விவசாய நூல் – நான்காம் அதிகாரம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news