Skip to content

விவசாய நூல் – மூன்றாம் அதிகாரம்

விவசாயத்திற்குரிய காலதேச நிலைமைகள்:

மாரியல்லது காரியமில்லை.’

விவசாயி தொழில்களை நிர்ணயிக்கின்ற முக்கியமான நிலைமைகள் மூன்று. அவை மண்ணின் குணாகுணம், சீதோஷ்ணஸ்திதி, நிலத்தின் ஸ்தானம். அதாவது தானியங்கள் வெகுவாய் விற்பனையாகும் சந்தையைநோக்கி எவ்வாறு நிலம் இருக்கின்றது என்பது. ஆயினும், இவ்வதிகாரத்தின் தலைப்பிற கூறிய பழமொழிபோன்ற மற்ற பழமொழி வசனங்களால் மழையின் பெருமையும் தெளிவாகும்.

பண்ணை இருக்கும் இடத்தைக் குறித்துச் சொல்லுங்கால் ஏற்கனவே முகவுரையில் விவரித்தபடி பெரிய நகர்களின் அருகே தோட்டக் விவசாயமும் பாற் விவசாயமும் சாதாரணமாய் லாபகரமானவை, ஜனத்தொகை குறைந்து தரிசுநிலம் ஏராளமாயிருக்கும் இடங்களிலே பிராணிவிவசாயம் அதிக லாபகரமானது. பொதுவாய்ப்பேசுமிடத்து விவசாயி சாதாரண பயிர்விவசாயம் செய்து தானிருக்கு மிடத்திற்குத் தகுந்தபடி எது அதிக லாபத்தைக் கொடுக்குமோ அதை அநுபவத்தாலறிந்துகொண்டு எளிதில் தகுந்த விலைக்கு விற்கக்கூடிய பயிர்வகைகளைப் பயிர்செய்து, தன் தொழிலை நடத்திவர வேண்டும். நல்ல சந்தைப் பக்கத்திலிருப்பது மிக்க அநுகூலம். அதனால் குடியானவன் அதிக காலதாமதமன்றியில் தன் மகசூலை விற்பனை செய்யக்கூடும். இத்துடன் சந்தைக்கு மகசூலை வண்டியி லேற்றிக்கொண்டு போவதற்குத் தகுந்த பாதைகள் இருப்பது விசேஷம். தான் பயிரிடவேண்டிய பயிர்களை நிச்சயிக்கையில் விவசாயி அவற்றின் மகசூல்கள் பிறகு எப்படிச் செலவாகும் என்பதைக் கவனிக்கவேண்டும்.

ஏனெனில் நல்ல பயிர்களை விளைவிப்பதற்குப் பூசாரம் குறையுபடாம லிருக்கவேண்டுமானால் நிலத்திலிருந்து விளையும் மகசூல்கள் எவ்வளவுக் கெவ்வளவு விற்கப்படுகின்றனவோ அவ்வளவுக் கவ்வளவு நிலத்திற்கு எரு சேர்த்து உரமாக்கவேண்டும்.

பயிர் வளர்ச்சியின் வேறுபாட்டிற்கு சீதம், உஷ்ணம், மாரி இவையே முக்கிய காரணங்களாம். மிதமான குளிர்ச்சியும், காலாகாலத்தில் தவறாமல் பெய்யும் தகுந்த மழையும் சாதாரணமாய் விவசாயத்திற்கு மிக அநுகூலமானவை, மிகுந்த குளிர்ச்சியும் வெப்பமுமில்லாத சீதோஷ்ணம் மிதமாயுள்ள நாடுகளில், மற்ற இடங்களைக்காட்டிலும் அநேகவிதப் பயிர்களை, நல்ல பலனைத் தரும்படியாய்ப் பயிரிடக்கூடும். அந்நிலைமையுள்ள நாடுகளில் வேறு இடங்களைப்போல பயிர்களுக்கு அவ்வளவு தண்ணீர் பாய்ச்ச வேண்டுவதில்லை. எல்லாவிதப் பிராணிகளும் செழிப்பாய் வளர்கின்றன. மேலும் கொஞ்சங் குளிர்ச்சியாயுள்ள பிரதேசங்களில்தான் பட்டுப்பூச்சிக் விவசாயம் செழித்து வருகின்றதென்று நாம் ஒருவாறு சொல்லக்கூடும்.

ஒர்நாட்டின் சீதோஷ்ண நிலைமை முக்கியமாய் அந்நாடு பூமியின் சமரேகைக்கு அப்பால் இருக்கும் தூரத்தினாலும் ஸ்தானத்தினாலேயும் சமுத்திர மட்டத்துக்கு மேலுள்ள உயரத்தினாலேயும் நிர்ணயிக்கப்படுகின்றது. ஆயினும் இவ்விஷயத்தில் அந்த ஸ்தலத்தின் இயற்கை அமைப்புகளை நாம் பின்வருமாறு யோசிக்கவேண்டியிருக்கிறது. அந்நாடு உள்நாடா, கடற்கரையடுத்த நாடா? மரங்கள் அடர்ந்துள்ளதா? அல்லது வெட்டவெளியாயும் முக்கியமாய் மணற்பாங்காயுமுள்ள நிலங்களுக்கு அருகிலுள்ளதா? மேலும் அது நீர்வளமுள்ளதா? அல்லது பாலைநிலமா? என்று கவனிக்கவேண்டும். மரங்களடர்ந்த பெருங்காட்டிற்கு அருகிலேயுள்ள இடங்களிலும் அல்லது மரங்களும் தோப்புத்துரவுகளும் நிறைந்து நதிகளாலும், ஏரி, வாய்க்கால், குளம் முதலிய பாசனங்களாலும் நீர்வளம் பெற்றதுமான கடற்கரையடுத்த நாட்டிலும் சீதோஷ்ணம் மிதமாயிருக்கும்; மரங்கள் அதிகமாயிராமல் பாலைவனத்திற்குச் சமீபமாயும் கடற்கரைக்குத் தூரமாயுமுள்ள உள்நாட்டிலே வெயில்காலத்தில் அதிக உக்கிரமாயும் குளிர்காலத்தில் கடுங்குளிர்ச்சியாகவு மிருக்கும்.

சீதோஷ்ணஸ்திதியைச் சமப்படுத்த இந்நாட்டின் அநேக இடங்களில் சில முயற்சிகள் செய்யலாம். மரங்களையும், காடுகளையும் அழிப்பதால் சீதோஷ்ணத்தின் நிலைமை உஷ்ணமாயும், வறட்சியாயும் மாறக்கூடம். சில இடங்களில் மரங்கள் யோசனையில்லாமல் வெட்டப்பட்டு அவைகள் இருந்த நிலங்கள் வெட்டவெளியாய்ப் பெரும்பாலும் சாகுபடியன்றியில் தரிசாய்க் கிடக்கிறபடியால், அதிக தீமைகள் விளைந்திருக்கின்றன. மரங்களை வெட்டுமுன், நாம் ஒருநாளில் வெட்டக்கூடிய மரத்தை வளர்ப்பதற்கு மனிதர்களுக்குக் கிடைத்த நீடித்த ஆயுளைவிட அதிககாலம் பிடித்திருப்பதாக, நாம் எப்போதும் யோசனை செய்யவேண்டும். மரங்களால் அநேகம் பிரயோசனங்கள் உண்டு. அவைகள் மனிதனையும் கால்நடைகளையும் வெயிலினின்றும் கொடுங்காற்றினின்றும் கடுமழையினின்றும் காப்பாற்றுகின்றன. மேலும், அவைகள் கோடைகாலத்தில் மண்ணினின்றும் ஈரம் வெளியே ஆவியாய்ச் செல்லாதபடித் தடுத்து, ஆகாயத்தைக் குளிர்ச்சியாயும் நமிர்ப்பாகவும் செய்கின்றன. இதுகாரணத்தால், ஒர் இடமுழுவதும் ஆயிரக்கணக்கான மரங்கள் நடப்பட்டால் அவைகள் அவ்விடத்தின் வெப்பத்தைத தணித்து சீதோஷ்ணஸ்திதியைச் சமப்படுத்தும். மரங்கள் புசிப்பதற்குத் தகுத்த காய்கறி பழவர்க்கங்களைக் கொடுப்பதினாலும் மற்ற வேலைகளுக்கு உதவுகிறதினாலும் அதிக மதிப்பு அடைந்திருக்கின்றன. உத்திரங்கள் வீடு கட்டுவதற்கும், கலப்பை, வண்டிகள் முதலியன செய்வதற்கும் அதிக அநுகூலமானவை; விறகு அடுப்பு எரிப்பதற்கும் செங்கல்களையும் ஒடுகளையும் சுடுவதற்கும் இன்னும் வேறு விஷயங்களுக்கும் பிரயோஜனமாகிறது. தவிர, மரத்தின் இலைகளும், ஒன்றாய்ச் சேர்க்கப்பட்டு ஆடுமாடுகள் படுப்பதற்கும் பூமிக்கு நேராய் எருவாகவும் உதவுகிறபடியால் மரத்தின் மற்ற பாகங்களைப் போலவே பிரயோஜனமாகின்றன.

மரங்களை வெட்டி, வனாந்தரங்களை அழித்து, ஒரு நாடு வெட்ட வெளியாக்கப்பட்டால் அதன் சீதோஷ்ணஸ்திதி அடிக்கடி முன்னிலும் அதிகமாய் மாறுகின்றது. மிக வறட்சியும், ஜலப்பெருக்கமும், கொடிய வெப்பமும், கடும் குளிரும் அந்நாட்டில் வெகு சாதாரணமா யுண்டாகின்றன. மழை தாரைதாரையாய்ப் பொழிந்து, வெகு சீக்கிரத்தில் ஒடிவிடுகின்றது, விவசாயி விவசாயத்திற்கு வேண்டுகிற மிதமான மழை பெய்கிறதில்லை, காற்று மிகக் கொடுமையாய் வீசி, அந்நாடு முழுவதுக்கும் கெடுதி உண்டாக்குகின்றது. வாழை, சோளம் இவைபோன்ற உயர்ந்தோங்கி வளரும் பயிர்களைக் கீழே தள்ளிவிடுகிறபடியால் மிக்க கொடுங்காற்று, விவசாயத்திற்கு எப்போதும் கெடுதியானது. அக்காற்று வறட்சியாயும் உஷ்ணமாயுமிருந்தால் மண்ணிலுள்ள ஈரத்தையும் ஆறு குளங்களிலுள்ள ஜலத்தையும் வெகுவிரைவில் உறிஞ்சிப் பயிர்களை வாடச்செய்து, இன்னும் அதிகக் கெடுதியை விளைவிக்கின்றது. மிகவும் குளிரான வறட்சிக்காற்றும் மேற்குறித்த தீங்குகளை விளைத்துப் பயிர்வகைகளின் வளர்ச்சிக்கும், கால்நடைகளின் செளக்கியத்திற்கும் மிக விரோதமாயிருக்கின்றது.

மரங்கள் நெருங்கி அடர்ந்துள்ள நிலத்தில் விவசாயம் செய்ய முடியாதாதலால் முதலில் அதிலுள்ள மரங்களையும் புதர்களையும் வெட்டி, அழிக்கவேண்டுவது அவசியம். ஆயினும் இவ்வாறு செய்கையில் நிலத்தில் சரியாய்ச் சாகுபடி செய்வதற்குத் தடையாயிருக்கும் மரங்களை மாத்திரம் வெட்டி நீக்கவேண்டும்.

பயிர்விளையும் நிலங்களில் மரங்களிருந்தால் அப்பயிர் நன்றாய் விளையாமல் கெட்டுப்போகும். நிலத்தைப் பண்படுத்துவதற்கும் அதிகபணம் செலவாகும். மேய்ச்சல் நிலங்களில் சில மரங்கள் நிற்பதினால் யாதொருபாதகமும் இல்லை; அவை ஆடுமாடுகளுக்கு மத்தியான வெயிலில் நிழலைக் கொடுப்பதற்கு உபயோகமாகின்றன. உழமுடியாத பூமியின் பாகங்களில் மரங்களை எப்போதும் நடலாம். வாய்க்கால்களின் ஓரங்களிலும், பாதைகளின் இருபுறங்களிலும், வீட்டைச்சுற்றியும், இன்னும் வேறு இடங்களிலேயும் மேற்சொல்லிய (உழமுடியாத) நிலம் எப்போதும் காணப்படும். மரங்களை ஒருதரம் நட்டுவிட்டால் சிறு பருவத்தில் ஆடு, மாடு, வெள்ளாடு முதலியனவற்றால் தீங்கு விளையாதபடிக் காப்பாற்றுவதுதைத் தவிர அவைகளுக்கு வேறு பராமரிப்பு வேண்டியதில்லை, ஆயினும் அநேக இடங்களில் அவைகளுக்கு நன்றாய் எருவிட்டு, முக்கியமாய் அவைகள் சிறு பிராயத்திலுள்ளபோது, கோடைகாலத்தில் நீர்ப்பாய்ச்சினால் லாபம் கிடைக்கும், மரம் நட்டு வளர்ப்பதினால் அடையக்கூடிய பலன்களில் சிலவற்றை, முன் அதிகாரத்தில் குறித்தபடி விவசாயி தன் பட்டா நிலத்தைச் சுற்றிலுமாவது அல்லது அதிலுள்ள புலன்களைச் சுற்றிலுமாவது வளரும் செடிகளால் ஆகிய வேலியை நடுவதினால் அடையலாம்.

இந்தியாவில் பெய்யும் மழையின் பெரும்பாகம் இந்து மகா சமுத்திரத்தின்வழியாய் வந்து வீசுகிற தென் மேற்குப் பருவக்காற்று * (South-West Monsoon) என்று சொல்லப்படும் ஒர் பெருங்காற்றால் கொண்டு வரப்படுகின்றது. இக்காற்று மேமாதத்துக் கடைசியிலாவது ஜீன்மாச ஆரம்பத்திலாவது மலையாளக்கரையில் வழக்கமாய் அடிக்க ஆரம்பித்து முதலில் தென்பாகத்திலும் பிறகு கடற்கரைவழியாய் மேலே சென்று உள்நாட்டில் பிரவேசித்தும் தான் போகுமிடங்களிலெல்லாம் வெவ்வேறு அளவாய் மழை பொழிந்து செல்லுகின்றது. இக்காற்று அக்டோபர் மாதம்வரையில் அடிக்கிறது. அது வீசுங்காலந்தான் வழக்கமாயுள்ள மாரிகாலம். ஆயினும் தென்மேற்குப் பருவக்காற்றை (South-West Monsoon) விட கொஞ்ச பாகங்களில் தான் தகுந்த மழையைப் பொழிந்து வீசிவருகின்ற வடகிழக்குப் பருவக்காற்று (North-east Monsoon) ஆரம்பிப்பதால் சில இடங்களில் மழைப்பருவம் வருடத்தின் அந்தியகாலம்வரையில் நீடித்திருக்கின்றது. கோடை மழை பெய்யுங்காலங்களில் சீதோஷ்ணத்தின் நிலைமை சாதாரணமாய் உஷ்ணமாயிருக்கின்றது. அக்காலந்தான் கோடை தானியங்களை விதைப்பதற்குத் தகுந்தகாலம். கோடைக்காற்று அடித்து நின்றவுடன், ஆகாயம் வழக்கமாய் அதிக குளிர்ச்சியடைகிறது. அப்போது குளிர்காலப் பருவதானியங்கள் அல்லது காலப்பயிர்கள் விதைக்கப்படுகின்றன.

தென்மேற்குக் காற்றால் கொண்டுவரப்படுகின்ற மேகத்தின் பெரும்பாகம் மேற்குக் கணவாய்களிலே தடுக்கப்படுகிறபடியால் இந்தியாவின் மேற்குக்கரையில் கடற்கரையடுத்த நாட்டில் அதிக மழை பெய்கின்றது. ஈரமான நாடு ஆடுமாடுகள் வளர்ச்சிக்குச் சரிப்படாததால் அந்நாட்டில் வளரும் கால்நடைகள் பெரும்பாலும் மிகத் தாழ்ந்த ஜாதிகளாகவும் சிறிதாகவும் இருக்கின்றன.

  • [இதைப் பருவ மழைக்காற்று என்றும் கோடைக்காற்றென்றும் சொல்லுவது வழக்கம்.]

அப்பால் உள்ள உள்நாட்டுப் பிராந்தியங்களிலே மழை சில இடங்களில் மிதமாயும் வேறு இடங்களிலே அதிகக் குறைவாயும் பெய்கின்றது. மழை எப்படி பெய்வது அநுகூலமென்றால், அளவில் மிதமாயும் குணத்தில் சிலாக்கியமாகவும் இருக்கவேண்டும். அதாவது மழை அடிக்கடி அமைதியான தாரைகளுடன் மிதமாகப் பொழியவேண்டும். திருஷ்டாந்தமாக ஒர் இடத்தில் 80 அங்குலம் மழை பெய்திருக்கலாம். இவ்வளவு மழை அதிகமென்று தோன்றுகிறது. ஆயினும் எத்தருணத்தில் எவ்வாறு பெய்ததென்று தெரிந்தாலொழிய அவ்விடத்தின் சீதோஷ்ண நிலைமையை எளிதில் தப்பிதமில்லாமல் நிச்சயிக்க முடியாது.

  • [முழுவதும் சமமான தரையில் வெளியே வடிந்து ஒடிச் செல்லாமலும், தரைக்குள் உட்பு ஆகாமலும், ஆவியாகப் போகாமலும் தடுக்கப்பட்டு தேக்கப்பட்டிருக்கும் மழைத்தண்ணீர் ஒர் இடத்தில் பெய்த மழையின் பரிமாணத்தைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. மேற்சொல்லிய தண்ணீர் ஒரு அங்குலம் ஆழமிருக்குமானால் ஒரு அங்குலம் மழை பெய்திருப்பதாகக் கூறுகிறார்கள். பெய்யும் மழையைச் சேகரித்து அளப்பதற்கு மழை அளவு கருவிகள் செய்யக்கூடும், அவை பெரும்பாலும் வட்டமாய் உலோகத்தால் செய்யப்பட்டிருக்கும் புனல்கள் அல்லது குழல்கள், அப்புனலில் விழும் மழைத்தண்ணீர் அப்புனல்களுக்கு அடியில் உள்ள ஒரு துவாரத்தின் வழியாய்ச் சென்று ஒர் சீசாவிலோ வேறு பாத்திரத்திலோ போய்ச் சேருகிறது. இவ்வாறு சேர்ந்துள்ள ஜலத்தின் பரிமாணம் சரியாய்த் தெரிந்துள்ள பாத்திரத்தில் கொட்டி அளக்கலாம். புனலின் மேற்புறம் முழவதும் சமமாயிருக்கும்படி மட்டமாய் நிறுத்தி, வீடு, சுவர், மரங்கள் இவைகளினின்றும் வெகு தூரத்திற்கு அப்பால் வைக்கப்படவேண்டும். ஒரு ஏகராவில் பெய்த மழையை எடைபோட்டால் சுமார் 227,000 பவுன் அல்லது ஏறக்குறைய 100 டன் ஆகிறது. ஒரு கன அடி ஜலத்தின் எடை 1,000 அவுன்ஸ் அதாவது 62 ½ பவுன். ஒரு ஏகராவில் விழும் ஒரு அங்குல மழையின் கன அளவு 3,630 கன அடி ஆகிறது, ஆகவே அதன் எடை 3630*62 ½ அல்லது 226,875 பவுன், இதைவிட சரியான அல்லது உண்மைக்கு நெருங்கின வழி யாதெனில், ஒரு கன கஜம் ஜலம் ¾ டன் நிறையுள்ளது. ஆகவே ஒரு ஏகராவில் ஒரு அங்குல மழை 1/30*4840*3/4 அல்லது 100.83 டன் ஆகிறது, [உண்மையான எடை 100.9 டன்]

இவ்வளவு மழையும் மிகச் சொற்ப தினங்களில் வெகு காலம் இடைவிட்டுப் பெய்திருக்கலாம். ஆகையால் அதிக மழை பெய்திருந்தபோதிலும் அவ்விடம் அதிக வறட்சியாலும் ஜலம் பெருக்கத்தாலும் வருத்தப்பட்டிருக்கலாம். ஆகவே ஒரு இடத்தில் மழை எவ்வளவு நாள் பெய்கிறதென்றும் ஒவ்வொரு வாரத்திலும் பக்ஷத்திலும் பெய்த மழையின் பரிமாணம் இவ்வளவு என்றும் அறிந்துகொள்வது அவசியம். விவசாயத்திற்கு வேண்டிய தென்னவென்றால் உழவுதொழில் ஆரம்பிப்பதற்கு நிலம் நன்றாய் நனைந்து ஈரமாகும்படி போதுமான மழை பருவத்தின் ஆரம்பித்தில் பொழியவேண்டும். பிறகு பருவமுழுவதும் பயிர் வளர்வதற்குக் தகுந்த மெல்லிய தூற்றல்கள் அடிக்கடி நிலத்தில் விழவேண்டும். ஏப்ரல், மே மாதங்களில் ஆகாயமும் நிலமும் உஷ்ணமாயும் வறட்சியாயுமிருக்கும்போது அநேகதடவைகளில் பொழியும் ஒர் அங்குல மழையால் சாகுபடிக்குப் பிரயோ ஜனமில்லை, ஜீலை துவக்கத்தில் அநேக அங்குலம் பரிமாணமுள்ள ஒரே மழை கனமாய்ப் பெய்து, பிறகு இரண்டு மூன்று வாரங்களுக்குக் கொஞ்சங்கூட பெய்யாமலிருந்தால் விவசாயத்திற்கு அதனாலும் அநுகூலம் ஒன்றுமில்லை. மழை அதிக சொற்பமாயாவது அல்லது வெகு கனமாயாவது பெய்யக்கூடாது. மிகச் சொற்பமாயிருந்தால் வெகுவாய் வெயில் உக்கிரமாயிருக்கும்போது கீழே விழுந்தவுடன் வறட்சியடைகிறது. அதிக கன மழை பெய்தாலோ, மழைஜலம் தரைக்குள் ஊறிப்போய் அதை நனைப்பதற்கு நேரமில்லாமல் வெளியே வழிந்து ஒடி வளப்பமுள்ள மண்ணைக் கொஞ்சம் அடித்துக்கொண்டும் நிலத்தை அநேக கால்வாய்களாக அறுத்தும் செல்லுகிறது. பெருமழைத் தண்ணீர் தரையின் மண்ணை நெருக்கி, ஈரம் காய்ந்தவுடன் தரையை இறுகச் செய்கிறது. ஆயினும் இப்படிப்பட்ட ஒரே மழையில் பாய்ச்சலிக்குரிய ஏரி, குளங்கள் சீக்கிரத்தில் நிரம்பி விடுகிறதுபோல் மிதமாகப் பெய்யுமழையினால் நிரம்புகிறதில்லை. பயிர்கள் புஷ்பிக்கும்போதும் மணிகள் பால் பிடிக்குந் தருணத்திலும் பிறகு அறுவடை காலத்திலும்மழை பெய்யாமலிருப்பதையே கோரவேண்டும். அதாவது மழை கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news