fbpx
கால்நடை

நாட்டுக் கோழிகளுக்கும் நாட்டு மருத்துவம்!

நாட்டுக்கோழிகளுக்கு வரும் நோய்கள் மற்றும் அவற்றுக்கான கைவைத்தியம் ஆகியவை குறித்து முன்னோடிப் பண்ணையாளர் ‘காட்டுப்புத்தூர்’ பாலு சில விஷயங்களைக் பகிர்ந்துகொண்டார்.

“நாட்டுக்கோழிகளுக்கு வெளில், காற்று, பனி, மழை என ஒவ்வொரு பருவநிலை மாறும் போதும் நோய்த்தாக்குதல் ஏற்படும். கோழிகளை அதிகளவில் தாக்குவது வெள்ளைக்கழிசல் மற்றும் ரத்தக்கழிசல் நோய்தான். வெள்ளை , பச்சை அல்லது வெள்ளையும் பச்சையும் கலந்த நிறத்தில் கோழிகள் மலத்தைக் கழிந்தால் அது வெள்ளைக்கழிசலுக்கான அறிகுறி. காபி நிறத்தில் கழிந்தால் அது ரத்தக்கழிசலுக்கான அறிகுறி.

இந்த நோய்கள் நச்சுயிரிகள் மூலமாகப் பரவுகின்றன. தீவனம், தண்ணீர், காற்று மூலமாக நச்சுயிரிகள் கோழிகளைத் தாக்கும். இவற்றைத் தடுக்க ஆங்கில வைத்திய முறையில் சொட்டு மருந்துகள் மற்றும் ஊசி மூலமாகச் செலுத்தும் தடுப்பு மருந்துகள் உள்ளன. கடைகளில் இவற்றை வாங்கி நாமே கோழிகளுக்குக் கொடுக்கலாம். அல்லது சனிகிழமைதோறும் அரசு கால்நடை மருத்துவமனைகளில் இலவசமாகப் போட்டுக்கொள்ளலாம். தடுப்பு மருந்துகளைக் குஞ்சுப் பருவத்திலிருந்து அட்டவணைப்படித் தவறாமல் கொடுத்து வர வேண்டும். நாட்டு மருத்துவம் மூலமும் நோய்த் தாக்குதலை விரட்டமுடியும்.

பண்ணையில் உள்ள பெரிய கோழிகளுக்கு அவ்வப்போது சின்ன வெங்காயத்தை நறுக்கித் தீவனமாகக் கொடுத்து வந்தால், இந்த நோய்கள் தாக்காது. அதையும் மீறித்தாக்கினால் அதற்கும் கைவைத்தியம் உண்டு.

10 சின்ன வெங்காயம், ஒரு கரண்டி புளிக்காத தயிர், ஒரு தேக்கரண்டி(டீ ஸ்பூன்) சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, அரைத் தேக்கரண்டி மஞ்சள்தூள், ஐந்து ஈர்க்குக் கிழாநெல்லி ஆகியவற்றை அரைத்துக் கரைசலாக்கிக் கொள்ள வேண்டும். இதைக் காலை, மாலை இரண்டு வேளைகளும் நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு வாயில் ஊற்றி விடவேண்டும். கோழிகள் குடிக்கும் வரை கொடுக்க வேண்டும். குடிக்க முடியாமல் திமிரும்போது ஊற்றுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் நோய்கள் குணமாகும். பன்றி நெய்யைச் (பன்றியின் தோலில் உள்ள கொழுப்பு) சூடான சாதத்தில் கலந்து, பிசைந்து கோழிகளுக்குக் கொடுத்தாலும் வெள்ளைக்கழிசல் நோய் குணமாகும்.

கோழிகளைத் தாக்கும் மற்றொரு நோய் அம்மை, பெரும்பாலும் நாட்டுக்கோழிகளை அம்மை தாக்காது அப்படியே தாக்கினாலும் வேப்பிலை, மஞ்சள் தூள் கலந்து உடம்பில் தடவிவந்தால் அம்மை நோய் குணமாகும். சில கோழிகள் வைக்கும் முட்டையில் ஓடுகள் பலமாக இருக்காது. இப்படி இடப்படும் முட்டைகளை ‘தோல் முட்டை’ என்பார்கள். தோல் முட்டை வைக்கும் கோழிகள் வீட்டுக்கு ஆகாது என்று கிராமங்களில் சொல்வார்கள். உண்மையில், கால்சியம் பற்றாக்குறையால்தான் கோழிகள் தோல்முட்டை வைக்கின்றன. முட்டை வைக்கும் கோழிகள், கால்சியம் சத்துக்காகத் தாமாகவே சுண்ணாம்புச் சுவரைக் கொத்துவதைப் பார்க்கமுடியும். முட்டையிடும் கோழிகளின் தீவனத்தோடு கிளிஞ்சல் தூளைச் சேர்த்துக் கொடுத்துவந்தால், போதுமான கால்சியம் கோழிகளுக்குக் கிடைக்கும். நிலக்கடலையைத் தூளாக்கிக் கோழிகளுக்கு அவ்வப்போது கொடுத்து வந்தால், உடல் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருப்பதுடன் அதிக எண்ணிக்கையிலான முட்டைகளும் கிடைக்கும்.

                                                    கோழிப்பேன்

கோழிப்பேன் எனப்படும் செல்வகைப்பூச்சிகளால் கோழிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். இவை கோழிகளுக்கு அரிப்பை உண்டாக்கும். பெரும்பாலும் அடைக்கோழிகளைத்தான் இது தாக்கும். ஹாலோபிளாக் கற்களால் அமைக்கப்படும் கட்டடத்தில் கோழிகளை அடை வைக்கும் போது, பேன் தாக்குதல் அதிகமாக இருக்கும். எனவே ஹாலோபிளாக் கட்டடங்களைத் தவிர்க்க வேண்டும். பேன் தாக்கிய கோழிகளுக்கு வசம்பைத் தூளாக்கி, அதில் சிறிது சாம்பல் சேர்த்து, வெயில் நேரத்தில் உடம்பு முழுவதும் தேய்த்து, விடவேண்டும். அல்லது சீத்தாப்பழக் கொட்டையைப் பொடியாக்கி, கோழியின் உடம்பு முழுவதும் தேய்த்து விடலாம். எருக்கன் இலைகளின் பின்பக்கத்தில் சிறிது விளக்கெண்ணெய் தடவி, கொட்டகையில் ஆங்காங்கே போட்டு வைத்தால் அதில் செல்கள் ஒட்டிக்கொள்ளும், அந்த இலைகளைச் சேகரித்து எரித்து விட வேண்டும்.

இயற்கை முறையில் அடை!

நாட்டுக்கோழிகளை இயற்கை முறையில் அடைக்கு விட்டால், தரமான குஞ்சுகள் கிடைக்கும். இன்குபேட்டர் பயன்படுத்தினால் 80 சதவிகிதம் வரைதான் பொரிப்புத் தன்மை இருக்கும். அதிக கோழிகள் வைத்திருப்பவர்கள் முட்டைகள் வீணாகாமல் இருக்க இன்குபேட்டரைப் பயன்படுத்தலாம். செலவே இல்லாமல், தரமான குஞ்சுகளைப்பெற இயற்கை முறைதான் ஏற்றது.

ஒரு நாட்டுக்கோழி அதிகபட்சம் 15 முட்டைகள் வரை இடும். முதல் ஆறு நாள்கள் இடும் முட்டைகளை விற்பனைக்கோ, உண்பதற்கோ பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஏழாம் நாள் முதல் பதினைந்தாம் நாள் வரை இடும் ஒன்பது முட்டைகளை மட்டுமே அடை வைக்க வேண்டும். இப்படி வைக்கும்போது ஒன்பது முட்டைகளும் பொரிந்துவிடும். கோழி முட்டையிட்ட ஆறு முதல் ஒன்பது நாள்களுக்குள் அடை வைத்தால்தான் பொரிக்கும். அதற்கு மேல் முட்டைகளுக்குப் பொரியும் திறன் இருக்காது. அதனால், ஆரம்பத்தில் இட்ட முட்டைகளைத் தவிர்த்துவிட்டுக் கடைசி ஒன்பது நாள்கள் இட்ட முட்டைகளை அடை வைக்க வேண்டும். ஆனால், இன்குபேட்டரில் அத்தனை முட்டைகளையுமே பொரிக்க வைக்கலாம்.

அடை வைக்க பிரம்புக்கூடைகளைப் பயன்படுத்துவதான் சிறந்தது. பிரம்புக்கூடையைச் சாணத்தால் மெழுகி விட்டால் ஓட்டைகள் அடைபட்டுவிடும். கூடையில் சிறிது சாம்பல் கலந்த செம்மண்ணைக் கொட்ட வேண்டும். கூடையின் விளிம்பிலிருந்து ஐந்து விரற்கடை அளவு கீழே இருக்குமாறு மண்ணால் கூடையை நிரப்பவேண்டும். அதன்பிறகு. கூடையில் ஒர் இரும்புத்துண்டு (இடி தாக்காமல் இருக்க), மூன்று காய்ந்த மிளகாய்கள் (பூச்சிகளை விரட்ட), நான்கு கரித்துண்டுகள் (ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொள்ள) ஆகியவற்றைப் போட்டு, முட்டைகளை அடுக்கிக் கோழியை அடைக்குப் படுக்க வைக்க வேண்டும். மணல் வெப்பத்தைக் கீழே கடத்திவிடும் என்பதால், மணலைப் பயன்படுத்தக்கூடாது. செம்மண் வெப்பத்தைத் தக்க வைக்கும் என்பதால் செம்மண்ணைத்தான் பயன்படுத்த வேண்டும்.

குஞ்சுகள் கவனம்!

ஒரு நாள் வயதுடைய குஞ்சுகளை வாங்கி வந்தால் அவற்றுக்குப் புரூடர் அமைப்பில் செயற்கையாக மின்சாரப் பல்புகள் மூலம் வெப்பம் கொடுத்து வளர்க்க வேண்டும். புரூடர் அமைப்பில் குஞ்சுகளை அதிகபட்சம் 30 நாள்கள் வரை வைக்கலாம். முப்பது நாள்களுக்குள்ளாகவே சில குஞ்சுகள் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும். இந்த குஞ்சுகள் மற்ற குஞ்சுகளின் இறக்கையைக் கொத்திக் காயம் ஏற்படுத்தும். அதனால், அவற்றைத் தனியாகப் பிரித்து விட வேண்டும். தீவனத்தில் நார்ச்சத்துப் பற்றாக்குறை இருந்தாலும் கோழிகள், மற்ற கோழிகளின் இறக்கையைக் கொத்தலாம். இப்படிப்பட்ட நிலையில், தீவனத்தில் தவிட்டை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தனது அனுபவங்களைப் பகிர்ந்துச்கொண்டார் பாலு.

5 Comments

5 Comments

 1. Undefined

  October 23, 2017 at 9:03 am

  really useful.. thank you

 2. Undefined

  November 8, 2017 at 8:40 pm

  best

 3. john

  May 20, 2018 at 1:33 pm

  lot of thanks sir

 4. Ganesamoorthy

  June 27, 2018 at 10:42 pm

  Very Useful

  Thanks,
  Ganes

 5. Undefined

  August 6, 2018 at 7:57 am

  Super

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படிக்கப்பட்டவை

To Top