Skip to content

வாத்து வளர்ப்பு : பகுதி – 2

பருவநிலை… கவனம் தேவை!

வாத்துகளுக்கு பெரிய அளவில் நோய்த் தாக்குதல் இருக்காது. இருந்தாலும் சீசன் மாறுற சமயத்துல பக்கத்துல இருக்குற மருத்துவரை அழைச்சுகிட்டு வந்து காட்டுறது நல்லது. அதே மாதிரி இடம் விட்டு இடம் மாத்தும்போது ராத்திரியிலதான் மாத்தணும். அப்பதான் றெக்கை தொங்கிப்போற நோய் வராது” என்ற நடராஜன் வருமானத்தைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு நாளைக்கு எண்ணூறு முட்டை!

“தீனி நல்லா சாப்பிட்டாத்தான் வாத்துக ஒழுங்கா முட்டை வைக்கும். அதனால மேய்ச்சல் சமயங்களில் வாத்துக அதிகமா முட்டை போடும். கோழி மாதிரி இல்லாம வாத்துக தொடர்ந்து ஆறு மாசம் வரை முட்டை போட்டு கிட்டே இருக்கும். ஒரு வாத்து சராசரியா ஒரு வருஷத்துக்கு நூறிலிருந்து நூத்தம்பது முட்டைக வரைக்கும் போடும். வாத்து ராத்திரி வேளையிலதான் முட்டை வைக்கும். அதனால முட்டைகளை எடுத்து வைக்கிறது ரொம்ப சுலபம். 1,000 வாத்துகள் இருந்தால், ஒரு நாளைக்கு ஐநூறிலிருந்து எண்ணூறு முட்டைகள் வரை கிடைக்கும். குறைச்சு வச்சுக்கிட்டாலும், ஒரு வருஷத்துக்கு, சராசரியா ஒண்ணேகால் லட்சம் முட்டைகள் கிடைக்கும். ஒரு முட்டை ரெண்டு ரூபாயிலிருந்து மூணு ரூபாய் அம்பது பைசா வரைக்கும் விலைபோகும்” என்றார் நடராஜன்.

நஷ்டமே இல்லை!

பல ஆண்டுகளாக, வாத்து விற்பனை செய்து வரும் குளித்தலையைச் சேர்ந்த நடேசன், “வாத்துகளுக்கு அடைகாக்குற பழக்கம் கிடையாது. அதனால அதிகளவுல முட்டைகளைப் பொறிக்கணும்னா, இன்குபேட்டர்லதான் வைக்கணும். குறைஞ்ச அளவு முட்டைகள்னா அடைக்கு படுக்கிற கோழிகளுக்கு அடியில் வைத்து பொரிக்கலாம். வாத்து முட்டை பொரியிறதுக்கு 28 நாள் ஆகும். கோழி முட்டைக்கு 21 நாள் ஆகும். அதனால கோழி அடைக்கு படுத்த உடனேயே வாத்து முட்டையை வச்சுகிட்டு, ஏழு நாள் கழிச்சு கோழி முட்டைகளை வைக்கணும். இப்படி செஞ்சா, ரெண்டு முட்டைகளும் ஒரே நேரத்தில் குஞ்சுகள் பொரிச்சுடும். வாத்து முட்டைகளுக்கு பொரிப்புத்திறன் ரொம்பவும் குறைச்சலாகத்தான் இருக்கும். இன்குபேட்டர்ல பொரிச்ச குஞ்சா இருந்தா பதிமூணு ரூபாய்க்கும், கோழி அடையில பொரிச்ச குஞ்சா இருந்தா பதினெட்டு ரூபாய்க்கும் கொடுத்துகிட்டுருக்கேன். அதில்லாம பெருசா வளர்த்தும் வித்துக்கிட்டுருக்கேன்.

குஞ்சுகள் பிறந்த எட்டு நாள் வரைக்கும், பச்சரிசி மாவை இட்லிக்கு கரைக்கிற மாதிரி கரைச்சு கொடுக்கணும். பதினஞ்சாவது நாள்ல இருந்து அரிசிக் குருணை கொடுக்கணும். ஒரு மாசத்துக்கு பிறகு, மேய்ச்சல் வாத்துகளோட சேர்த்து விட்டுறலாம்.

நான் கறிக்காக மாசத்துல 3,000 இருந்து 5,000 வாத்து வரை வாங்கி வித்துகிட்டுருக்கேன். முட்டைகளுக்கான தேவை அதிகமா இருக்குறதால இந்தத் தொழிலில் நட்டம் வர்றதுக்கு வாய்ப்பு ரொம்ப கம்மிதான்” என்றார், நம்பிக்கை தரும் விகிதத்தில்.

அடியுரம் தேவையில்லை!

விவசாயத்தோடு, சேர்த்து வாத்து வளர்ப்பையும் செய்துவரும் திருவாரூர் மாவட்டம், செருமங்கலத்தைச் சேர்ந்த துரை, “எங்கள் அப்பா காலத்துல இருந்தே நாங்க வாத்து வளர்க்குறோம். எனக்கு நாலு ஏக்கர் நிலம் இருக்கு. பக்கத்துல 7 ஏக்கரை குத்தகை எடுத்துருக்கேன். கூடவே 1,000 வாத்தையும் வச்சுருக்கேன்.

அறுவடை முடிஞ்சவுடன் வயல்ல வாத்தை இறக்கி விட்டுடுவேன். இங்க மேய்ச்சலுக்கு நிலம் கிடைக்காதப்ப மட்டும், வண்டி வச்சு வெளியூறுக்கு போய் பட்டி போடுவேன். வாத்தை மேய்க்கிறதால, என் நிலத்துக்கு அடியுரம் போடுறதே கிடையாது. வாத்தோட கழிவுகளே நல்ல உரமாயிடுது” என்றார்.

பத்து வருடங்களாக, கேரளாவுக்கு வாத்து முட்டை அனுப்பி வரும், தஞ்சையைச் சேர்ந்த முட்டை வியாபாரி ஜெயக்குமார், “வருஷத்துக்கு 3 லட்சம் முட்டை கேரளாவுக்கு அனுப்பிக்கிட்டு இருக்கேன். வாத்து மேய்க்கிறவங்ககிட்ட முன்னாடியே பணம் கொடுத்து வச்சுட்டு, வாரா வாரம் முட்டை எடுத்துக்குவோம். மாசத்துக்கு ஒரு தடவை பணத்தை பட்டுவாடா செய்வோம்” என்றார்.

நன்றி

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள்

2 thoughts on “வாத்து வளர்ப்பு : பகுதி – 2”

  1. வாத்து வளர்ப்பவர் தொலைபேசி எண் வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj