Skip to content

இந்தியாவின் 63 மில்லியன் மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை!

வைல்ட் வாட்டர் என்ற அமைப்பு எடுத்த கணக்கெடுப்பின்படி, உலகிலேயே சுத்தமான குடிநீர் வசதியில்லாமல் இந்தியாவில்தான் அதிகமான மக்கள் (63.4 மில்லியன்) கிராமப் புறங்களில் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது பஞ்சாப்,ஹரியானா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள மொத்த மக்கள் தொகையை விட அதிகமாகும் .உலகளவில் எடுத்துக் கொண்டால், ஆஸ்திரேலியா,ஸ்வீடன் மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் வாழும் மக்களை விட அதிகமாகும்.

”இந்தியாவில் உள்ள 35 மாநிலங்களில் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அழிவைச் சந்தித்து கொண்டிருக்கின்றன. கால நிலை மாற்றத்தினால் தண்ணீர் உற்பத்தியிலும் மிகப்பெரிய சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.” என வாட்டர் எய்ட் இந்தியா அமைப்பைச் சேர்ந்த மாதவன் தெரிவிக்கிறார்.

இந்தியாவின்  67 சதவீத மக்கள் கிராமப் புறங்களில் தான் வாழ்ந்து வருகின்றனர். இதில் 7 சதவீதம் பேருக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை. கால நிலை மாற்றம் மற்றும் தட்ப வெட்பநிலை மாற்றம் ஆகிய காரணங்களினால் கிராமப் புறங்களில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து இந்த பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.

கடந்த மார்ச் 22-ஆம் தேதி உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் தொடர்ந்து சீரழிந்து வரும் கால நிலை மற்றும் தட்ப வெட்ப நிலை மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய கிராமப்புறங்களில் வசிக்கக்கூடிய 167.8 மில்லியன் மக்களில் 26.9 மில்லியன் மக்கள் மட்டுமே(16%) குடிநீர் குழாய் வசதியை பெற்றுள்ளனர்.தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்தின் கீழ் 1.7 மில்லியன் கிராமப்புற பகுதிகள்  மட்டுமே பயன்பெற்றுள்ள. இதில் 1.3 மில்லியன் (77%) கிராமப்புறங்களில் ,ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 40 லிட்டர் தண்ணீர்  மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கிறது.இதில் இரண்டு வாளி நீரை மட்டுமே சுத்தமான நீராக குறிப்பிட முடியும்.

19.3 சதவீதம் பகுதிகள் (கிட்டத்தட்ட 3 லட்சம் கிராமப்புற பகுதிகள்) ஓரளவுக்கு மட்டுமே தண்ணீர் வசதியை பெற்றுள்ளனர். 3.73 சதவீதம் பகுதிகள் (60,000 கிராமப்புற பகுதிகள்) சுத்தமான தண்ணீர் என்பது இன்னும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

சுத்தமில்லாத தண்ணீரில் இரும்புச் சத்து அதிகம் இருக்கும். இதன் காரணமாக அந்த நீரை குடிப்பவர்களுக்கு சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.இந்தியாவில் உள்ள 30 சதவீத கிராமப் புறங்களில் இரும்பு கலந்த நீரே கிடைத்து வருகிறது.

அதே போல் புற்றுநோய் மற்றும் தோல் நோய்களுக்கு காரணமான அர்செனிக் என்ற நச்சுத் தனிமம் இந்தியாவின் 21 சதவீத கிராம மக்கள் வாழும் இடங்களில் கிடைக்கும் நீரில் கலந்துள்ளது.

வரும் 2017-ஆம் ஆண்டு இறுதிக்குள், 50 சதவீத கிராமப்புறங்களுக்கு குடிநீர் குழாய் வசதிகளை அளிக்க வேண்டும் எனவும் 35 சதவீத கிராமப்புறங்களுக்கு வீடுதோறும் தண்ணீர் குழாய் அளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது.

ஆனால் அதிகரித்து வரும் மக்கள் தொகையினால் ஒரு தனி நபருக்கு கிடைக்கக் கூடிய தண்ணீரின் அளவு குறைந்து கொண்டுதான் இருக்கிறது.

2001-ஆம் ஆண்டு ஒரு தனி நபருக்கு 1,820 கியூபிக் மீட்டர் அளவுக்கு கிடைத்த தண்ணீரின் அளவு, 2011-ஆம் ஆண்டு 1,545 கியூபிக் மீட்டராக குறைந்துள்ளது. இதற்கு இந்த காலகட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 17.6 சதவீதமாக அதிகரித்ததே காரணம். இதே நிலை நீடித்தால் தனி நபருக்கு கிடைக்கும் நீரின் அளவு 2025-ஆம் ஆண்டு 1,341 கியூபிக் மீட்டராகவும், 2050-ஆம் ஆண்டு 1,140 கியூபிக் மீட்டராகவும் குறையும்.

மழை பொய்த்தது நீர் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்தியாவில் உள்ள  91 முக்கிய அணைக்கட்டுகளில் நீர் மட்டம் மிகவும் குறைந்துள்ளது. ”தனி நபருக்கு கிடைக்கக் கூடிய நீரின் அளவு இதே போல குறைந்து கொண்டிருந்தால், நாட்டில் பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.” என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj