Skip to content

வல்லாரைக் கீரை (Centella asiatica)

சித்தர் பாடல்

அக்கர நோய் மாறும் அகலும் வயிற்றிழிவு

தக்கவிரத் தக்கடுப்புத் தானேகும் – பக்கத்தில்

எல்லாரையு மருத்தென் றேயுரைத்து நன்மணையுள்

வல்லாரையை வளர்த்து வை.

                                 (பதார்த்த குணசிந்தாமணி)

பொருள்

வாய்ப்புண், கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, ரத்த பேதியால் உண்டாகும் கடுப்பு போன்றவை தீரும். இவைதவிர, நினைவாற்றல் அதிகரிக்கும். காய்ச்சல் குணமாகும். வேறு பல நோய்களையும் தீர்க்கும் தன்மை கொண்டது.

சரஸ்வதி மூலிகை – வல்லாரை

அறிவு முதிர்ச்சியையும் நினைவாற்றலையும் வழங்கக்கூடிய வல்லாரைக் கீரையை, கல்விக்கும் அறிவுக்கும் உரிய கடவுளான சரஸ்வதிக்கு நிகரான இதை, சரஸ்வதி மூலிகை என்று சொல்வார்கள். மூளையின் செயல்திறனை அதிகப்படுத்தி, நினைவாற்றலை மேம்படுத்துவதில் வல்லாரைக்கு நிகர் எதுவுமில்லை.

வல்லாரையை உணவாகக் கொண்டால், வாயு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் குணமாகும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். பலவகையான விஷக்கடிகள் சரியாகும். வயிற்றில் கிருமிகள், காக்காய் வலிப்பு, இதய நோய்கள், குஷ்டம், சர்க்கரை நோய், தோல் நோய்கள், மாதவிலக்குக் கோளாறுகள், சிறுநீரகக் கோளாறுகள், உடல் பலவீனம் போன்ற பலவகையான நோய்களைக் குணப்படுத்துவதில் வல்லாரை முன்னிலையில் உள்ளது. வல்லாரைக் கீரையில் நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து மற்றும் வைட்டமின்கள் மிகுதியாக உள்ளன.

வல்லாரைக் கீரையின் தன்மை

உடல் தேற்றி – Alterative

உரமாக்கி – Tonic

சிறுநீர்ப்பெருக்கி – Diuretic

வெப்பம் உண்டாக்கி – Stimulant

சூதகம் உண்டாக்கி – Emmenagogue

வல்லாரைக் கீரையின் மருத்துவப்பயன்கள்

  1. வல்லாரை இலையில் இருந்து பால் எடுத்து தினமும் அதிகாலையில் 30 மி.லி அளவில் சாப்பிட்டால் குஷ்ட நோய்கள், தோல் நோய்கள், ரத்தத்தில் ஏற்படும் பாதிப்புகள் குணமாகும்.
  2. வல்லாரை, வெள்ளெருக்கு, ஆடுதின்னாப்பாலை மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவுக்குத் தொடர்ந்து சாப்பிட்டால், எப்படிப்பட்ட குஷ்ட நோய்களும் குணமாகும்.
  3. அதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளைப் பறித்து நன்றாக மென்று தின்று அடுத்த நான்கு மணி நேரத்துக்கு எதுவும் சாப்பிடாமல் இருந்தால், எந்தவிதமான அச்சம், பயம் போன்ற பலவகையான மனநோய்களும் விலகும்.
  4. வல்லாரை சாறு (15 மி.லி.), கீழாநெல்லி இலைச்சாறு (15 மி.லி.), பசும்பால் (100 மி.லி.) ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், முற்றிய மஞ்சள் காமாலைகூட குணமாகும்.
  5. வல்லாரைச் சாறில் பெருஞ்சீரகத்தை ஊறவைத்து எடுத்து பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் சரியாகும்.

 

100 கிராம் வல்லாரைக் கீரையில் உள்ள சத்துகள்

நீர்ச்சத்து – 84.5 கிராம்

புரதம் – 2.1 கிராம்

கொழுப்பு – 0.5 கிராம்

தாது உப்புகள் – 2.7 கிராம்

நார்ச்சத்து – 4.2 கிராம்

சர்க்கரைச்சத்து – 6.0 கிராம்

சுண்ணாம்புச்சத்து – 224 மி.கி

பாஸ்பரஸ் – 68.8 மி.கி.

கலோரித்திறன் : 37 கலோரி

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

 

1 thought on “வல்லாரைக் கீரை (Centella asiatica)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj