Skip to content

பப்பாளி சாகுபடி செய்யும் விதம்!

ஏக்கருக்கு 1000 கன்றுகள்

தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை சட்டிக்கலப்பை மூலம் உழுது பத்து நாட்கள் காயவிட்டு, மீண்டும் சட்டிக்கலப்பை மூலம் உழுது, பத்து நாட்கள் காய விடவேண்டும். பிறகு, ரோட்டோவேட்டர் மூலம் உழுது அடுத்த நாள், கன்றுக்குக் கன்று 2 மீட்டர், வரிசைக்கு வரிசை 2 மீட்டர் என்ற இடைவெளியில் சொட்டுநீர்க் குழாய்களை அமைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு நாட்கள் காலையும் மாலையும் 2 மணி நேரம் தண்ணீர் விட்டு, மூன்றாவது நாள் மாலை, 15 சென்டி மீட்டர் அளவுக்கு குழி எடுக்கவேண்டும். குழிக்கு ஒரு நாற்று என்ற கணக்கில் நடவு செய்யவேண்டும். மாலைப் பொழுதில் நடுவதால், வெயில் பாதிப்பு இருக்காது. மறுநாள் காலையில் வரும் வெயிலை எதிர்கொள்ளும் தன்மையும் கன்றுக்குக் கிடைத்துவிடும். ஒரு ஏக்கருக்கு ஆயிரம் கன்றுகள் தேவைப்படும்.

நடவில் கவனம் தேவை

வேர்ப்பகுதி தண்டுடன் சேரும் பகுதியை ‘மோதிர வளையம்’ என்பார்கள். இந்த மோதிர வளையம் பகுதிவரைதான் செடி மண்ணுக்குள் இருக்க வேண்டும். வேர்ப்பகுதி மண்ணுக்குள்ளும் தண்டு வெளியேவும் இருக்க வேண்டும். தண்டுப்பகுதி மண்ணுக்குள் இருந்தால், ‘எர்மினியா’ என்ற நோய் தாக்கி தண்டுப்பகுதி அழுகிவிடும். நடவு செய்ததில் இருந்து இரண்டு நாட்கள் வரை தொடர்ந்து செழிம்பாக தண்ணீர் கொடுக்க வேண்டும். பிறகு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாசனம் செய்தால் போதும்.

45-ம் நாள் கன்றை விட்டு ஓர் அடி தள்ளி 2 அடி அகலம், ஓர் அடி ஆழத்தில் குழி எடுத்து ஒவ்வொரு செடிக்கும் 5 கிலோ அளவில் மட்கிய சாணத்தை, வைக்க வேண்டும். கடலைப் பிண்ணாக்கு வைத்தால் நூற்புழு வரும். அதனால், கவனம் தேவை. 200 லிட்டர் தண்ணீரில், 5 கிலோ கருப்பட்டியைத் தட்டிப் போட்டு, ஒரு லிட்டர் இ.எம் கரைசலை ஊற்றிவிட்டு ஒரு வாரம் வரை வைத்திருந்து, சொட்டுநீர் மூலமாக மாதம் ஒரு முறை கொடுக்க வேண்டும். இதை, கன்றுகளை நட்ட இரண்டாவது மாதத்திலிருந்து கொடுக்க வேண்டும். இது நல்ல வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படும்.

பூப்பூக்கும் நேரத்தில் கோழிஎரு !

90 முதல் 95 நாட்களில் (மூன்று மாதத்தில்) செடிகளில் பூப்பூக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் வேர்கள் இருக்கும் என்பதால், சொட்டு நீர்க்குழாயை ஓர் அடி தள்ளி போட்டு, ஒவ்வொரு செடிக்கும் தலா 3 கிலோ கோழிஎரு வைக்க வேண்டும். பிறகு, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து கோழிஎரு வைத்து வர வேண்டும்.

காய் பெருக்க மீன்கரைசல் !

கன்று நட்டதிலிருந்து 9 மாதம் கழித்து, முதல் பறிப்பு வரும். 11-ம் மாதத்தில் இருந்து மகசூல் படிப்படியாக அதிகரிக்கும். 200 லிட்டர் தண்ணீரில், 10 கிலோ மீன்கழிவுடன் ஒரு லிட்டர் இ.எம் கரைசலை ஊற்றி 40 நாட்கள் வைத்திருந்து, இதில் 10 லிட்டர் கரைசலை எடுத்து சொட்டுநீர் மூலம் வாரம் ஒரு முறை கொடுக்க வேண்டும். இதன் மூலம் பூக்கள் அதிகம் பூத்து, காய்களும் பருமனாவதோடு, மகசூலும் கூடும். கன்று நட்ட 15-ம் மாதம் வரை மகசூல் அதிகமாக இருக்கும். பிறகு, குறையத் தொடங்கும். 9-ம் மாதத்திலிருந்து 18 மாதங்கள் வரை.. வாரம் ஒரு முறை மீன்கழிவு, இ.எம் கரைசலும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, கோழிஎருவும் என முறையாகக் கொடுத்து வந்தால், மகசூல் குறையாமல் சீராக இருக்கும்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj