Skip to content

மியாசாகி மாம்பழம்

விலை உயர்ந்த முதல் ஐந்து மாம்பழ ரகங்கள்

சர்வதேச சந்தைகளில் அதிக விலைக்கு விற்கப்படும் முதல் ஐந்து மாம்பழ ரகங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இந்தியாவில் மாம்பழம் என்று சொன்னால் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அல்போன்சா மாம்பழமாகத்தான் இருக்கும். இதுவே ஐந்தாவது இடத்தில் உள்ளது. குங்குமப்பூ நிறமுடைய இந்த ரக மாம்பழங்கள் மகாராஸ்ட்ராவின் தேவகட், ரத்னகிரி ஆகிய பகுதிகளில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் அதிக அளவில் போர்சுகீசிய காளனிகளை உருவாக்கிய அபோன்சா டீ ஆல்புகுர்கீ (Alponso de Albuquerque) என்பவரின் நினைவாக இந்த மாம்பழத்திற்கு அல்போன்சா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. அவருடையை காலத்தில் பல மாங்கன்றுகளை அல்போன்சா ரக மரங்களுடன் ஒட்டுக்கட்டி அதே சுவையுடன் மாம்பழங்களை உற்பத்தி செய்துள்ளனர். ஒரு டஜன் மாம்பழம் 3000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த ரக மாம்பழங்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேற்கு வங்கத்தின் முர்சிதாபாத் என்னும் இடத்தில் பயிரிடப்படும் கோகித்தூர் மாம்பழம் நான்காம் இடத்தில் உள்ளது. நவாப் ஆட்சி காலத்தில் 18ஆம் நூற்றாண்டில் சிராஜ் உட் டெளலா என்பவரின் ஆட்சியில் செல்வந்தர்களுக்கும் வசதிப்படைத்தவர்களுக்குமாகவே இந்த மாரகம் பயிர் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மாம்பழங்களை மூங்கில் அல்லது யானைத் தந்தத்தால் செய்த கத்தியை வைத்தே நறுக்க வேண்டும் என்றும் தங்க ஸ்பூன் கொண்டு சாப்பிட்டால்தான் அதன் உண்மை சுவை தெரியும் என்றும் கூறுகின்றனர். ஒரு மாம்பழத்தின் விலை 1500 ரூபாய். இந்த மாம்பழத்தின் புவிசார் குறியீடுக்காக மேற்கு வங்க அரசு விண்ணப்பித்துள்ளது.

மூன்றாவது இடத்தில் உள்ளது மத்திய பிரதேசத்தின் அலிராஜப்பூர் மாவட்டத்தில் கத்திவாடா என்ற இடத்தில் வளர்க்கப்பட்டு வரும் நூர்ஜஹான் என்னும் மா ரகம். இதன் ஒரு மாம்பழம் 11 இன்ச் உயரமும் 2 முதல் 5 கிலோ வரை எடையும் கொண்டுள்ளது. இந்த மா ரகம் அதிக சுவையுடையதாகும். இதன் தாயகம் ஆப்கானிஸ்தான். பலவகையான மாரகங்களை சேகரிக்கும் ஆர்வம் கொண்ட டாகூர் பர்வேந்திர சிங் என்பவர் 1968ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டுவந்து இந்த மரங்களை நடவு செய்ததாக கூறுகின்றனர். ஒரு பழத்தின் விலை ஆயிரம் ரூபாய். முன்னரே ஆர்டர் செய்பவருக்கு மட்டுமே இந்த மாம்பழங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானின் மியாசாகி என்னும் இடத்தில் பயிரிடப்படும் மியாசாகி என்ற மாரகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதில் 15% சர்க்கரை உள்ளதால் இதன் பழம் மிகவும் இனிப்புச்சுவை கொண்டுள்ளது. இந்த மாம்பழம் பழுப்பு கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இதனை ஜப்பான் மொழியில் டையானோ டமாகோ என்று அழைக்கின்றனர். இந்த மாஞ்செடிகளை பசுமைகுடிலுக்குள் மிகுந்த பாதுகாப்புடன் பயிரிடுகின்றனர். சூரியனின் முட்டை என்று அழைக்கப்படும் இந்த மாம்பழத்தின் விலை ஒரு கிலோ மூன்று லட்சம் ரூபாய் வரை சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

முதலாவது இடத்தில் இருப்பது ஆஸ்திரேலியாவின் கிழக்கு மாகானத்தில் பயிரிடப்படும் உயர் முனை மாம்பழங்கள் (Top end Mangoes). 2010ஆம் அண்டு 12 பழங்கள் கொண்ட ஒரு பெட்டி மாம்பழங்கள் 50,000 டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளன. 2001ஆம் ஆண்டு பிரிஸ்பேன் உற்பத்தியாளர் சந்தையின் மூலம் தொண்டுக்காக விடுக்கப்பட்ட ஏலத்தில் 16 மாம்பங்கள் கொண்ட ஒரு பெட்டி 20565 டாலருக்கு ஏலம்விடப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

கட்டுரையாளர்கள்:
1. எ. செந்தமிழ்,
முதுநிலை வேளாண்மை மாணவர் (உழவியல் துறை),
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலை நகர் – 608 002.
2. பூ. நந்தினி,
முதுநிலை வேளாண்மை மாணவி (தாவர நோயியல் துறை),
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலை நகர் – 608 002

Read More »விலை உயர்ந்த முதல் ஐந்து மாம்பழ ரகங்கள்