உளுந்து உற்பத்தியிலும் அதை பயன்படுத்துவதிலும் உலக அளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. பருப்பு வகைகளுள், உளுந்து 10 முதல் 12 சதவீதம் பயிரப்படுகிறது. இதில் புரதச்சத்து அதிக அளவில் இருப்பதால் உணவின் முக்கிய அங்கமாக விளங்குகிறது. உளுந்து குறுகியகால பயிராக இருப்பதாலும், வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்தி மண்ணின் வளத்தை மேம்படுத்துவதாலும், அடுத்த பயிருக்கு தேவையான உரச்செலவை குறைப்பதோடு, அதிக மகசூல் தருவதாலும் இன்றைய சூழலில் உளுந்து பயிரிட பெரும்பாலான விவசாய பெருமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உளுந்து பயிரை பூச்சி, நோய்க்காரணிகள் தாக்குவதை போல நூற்புழுக்களும் தாக்கி சேதம் விளைவிக்கின்றன. நூற்புழுக்கள் உருவ அளவில் மிகவும் சிறியதாக இருப்பதால் இவற்றை பூச்சிகள் போல வெறும் கண்களால் நம்மால் பார்க்கமுடியாது. மைக்ரோஸ்கோப் என்றழைக்கப்படும் உருப்பெறுக்கியின் உதவியால் மட்டுமே காணமுடியும். ஆனால் நூற்புழுக்களினால் பயிரில் ஏற்படக்கூடிய அறிகுறிகளை நம்மால் காண முடியும். தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈச்சங்கோட்டை சார்பாக பூச்சி மற்றும் நோய் தாக்குதலைக் கண்டறிவதற்கான வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் திருவோணம் வட்டாரத்தில் வெட்டிக்காடு கிராமத்தில் உளுந்து பயிரில் வேர்முடிச்சு மற்றும் முட்டைக்கூடு நூற்புழுக்களின் தாக்குதல் கண்டறியப்பட்டது. இந்த நூற்புழுக்களினால் உளுந்து பயிரில் 17 முதல் 23 சதவீதம் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
நூற்புழுக்களினால் பாதிக்கப்பட்ட பயிரின் வேர்ப்பகுதியில் முடிச்சுகள் ஏற்படுவதால் மண்ணிலுள்ள நீர் மற்றும் சத்துக்களை சரிவர உறிஞ்ச முடியாததால் ஒளிச்சேர்க்கை நடைபெறுவதில் தடங்கல் ஏற்பட்டு இலைகள் மஞ்சள் நிறமாகவும், பயிர் குட்டையாகவும் காணப்படும். மேலும் நூற்புழுக்களினால் பாதிக்கப்பட்ட செடிகளில் நன்மை செய்யக்கூடிய ரைசோபியம் முடிச்சுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிடும். இதனால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இதைத்தவிர, நூற்புழுக்கள் வேரின் உள்ளே செல்வதால் ஏற்படும் காயங்களின் வழியாக தீமை செய்யக்கூடிய பூஞ்சாணங்கள் உட்புகுந்து கூட்டுநோயை உண்டாக்கும். இதனால் பயிருக்கு ஏற்படும் பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கிறது.
வேர் முடிச்சு நூற்புழுக்களின் தாக்குதல் அறிகுறிகள்
வேர்முடிச்சு நூற்புழுக்களின் எண்ணிக்கை வயலில் அதிகளவு காணப்படும்போது பயிர் குட்டையாகவும், இலைகள் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். வேர்முடிச்சு நூற்புழுக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படும்போது எந்தவொரு அறிகுறியையும் ஏற்படுத்துவதில்லை. அதாவது இலைகள் சாதாரணமாக பச்சை நிறத்திலேயே காணப்படும். மேலும் நூற்புழுக்களினால் பாதிக்கப்பட்ட பயிரின் வேர்ப்பகுதியில் முடிச்சுக்கள் காணப்படும். இந்த முடிச்சுகள் பொதுவாக பயறுவகை தாவர வேர்களில் ரைசோபியம் பாக்டீரியாவால் ஏற்படுத்தப்படும் முடிச்சுகள் போல இல்லாமல் ஒழுங்கற்ற வடிவத்துடன் காணப்படும். ரைசோபியம் பாக்டீரியாவால் ஏற்படுத்தப்படும் முடிச்சுகள் சீராக உருண்டை வடிவத்தில், வேரின் பக்கவாட்டில் காணப்படும். நன்மை செய்யும் ரைசோபியம் பாக்டீரியாவால் ஏற்படுத்தப்படும் உருண்டை வடிவ முடிச்சுகளை கை விரலினால் உருட்டும்போது அவை எளிதில் வேர்ப்பகுதியில் இருந்து பிரிந்து விடும். இவ்வேறுப்பாட்டின் மூலம் விவசாய பெருமக்கள் வேர்முடிச்சு நூற்புழுக்களின் தாக்குதலை எளிதில் கண்டறியலாம்.
முட்டைக்கூடு நூற்புழுக்களின் தாக்குதல் அறிகுறிகள்
இந்நூற்புழுக்களினால் பாதிக்கப்பட்ட பயிர் வளர்ச்சி குன்றி காணப்படும். மேலும் இலைகள் மஞ்சள் நிறத்துடனும், காய்கள் சிறுத்தும் காணப்படும். 30 முதல் 40 நாட்களுடைய செடியின் வேர்ப்பகுதியில் முத்து போன்ற வெண்மை நிறமுடைய எலுமிச்சை வடிவ பெண்நூற்புழுக்கள் ஒட்டியிருக்கும். இந்நூற்புழு முதிர்ச்சியடைந்தவுடன் வேர் பகுதியிலிருந்து பிரிந்து மண்ணில் விழுந்துவிடும். சாதகமான சூழ்நிலை வரும்போது மண்ணில் விழுந்த நூற்புழுக்களின் உடலிலுள்ள முட்டையிலிருந்து இளம்நிலை புழுக்கள் வெளிவந்து செடியைத் தாக்கும். சராசரியாக ஒரு முதிர்ந்த பெண்நூற்புழு 200 முதல் 350 முட்டைகளை இடும் திறன் கொண்டவை.
சிலநேரங்களில் முட்டைக்கூடு நூற்புழுக்கள் வாடல் நோயை உண்டாக்கக்கூடிய பியூசோரியம் உடம் என்றழைக்கப்படும் பூஞ்சாணத்துடன் இணைந்து கூட்டு நோயை உருவாக்குவதால் செடிகள் இளம்பருவத்திலேயே காய்ந்து மடிந்து விடுகிறது.
கட்டுப்படுத்தும் முறைகள்
சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா போன்ற உயிரியல் நூற்புழுக்கொல்லிகளை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்வதன் மூலமும், பயிர்சுழற்சி முறையில் காய்கறி பயிர்களை பயிரிடுவதன் மூலமும் உளுந்து பயிரைத் தாக்கக்கூடிய நூற்புழுக்களை வெகுவாக கட்டுப்படுத்தலாம். மேலும் சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா அல்லது உயிரியல் கட்டுப்பாட்டுக்காரணிகளை விதைத்த 25 – 30 நாட்களில் ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழுஉரத்துடன் கலந்து மண்ணில் இட்டும் நூற்புழுக்களின் தாக்குதலைக் குறைக்கலாம்.
கட்டுரையாளர்கள்:
முனைவர் மோ.சண்முகப்பிரியா, முனைவர் தி.செங்குட்டுவன், மற்றும் முனைவர். நெ. வினோதினி
1வேளாண்மைக் கல்லூரிமற்றும்ஆராய்ச்சிநிலையம், ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர் -614902
2வேளாண்மைக் கல்லூரிமற்றும்ஆராய்ச்சிநிலையம், குடுமியான்மலை, புதுக்கோட்டை- 622104
3 வேளாண் அறிவியல் கல்லூரி, எஸ். ஆர். எம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கல்வி நிறுவனம், காட்டங்குளத்தூர், தமிழ் நாடு – 603203
மின்னஞ்சல்: shanmugapriyam@tnau.a.in