Skip to content

மருத்துவ குணம் குன்றாத குதிரைவாலி சாகுபடி தொழில்நுட்பங்கள்

குதிரைவாலி (Barnyard Millet) உலகின் எல்லா இடங்களிலும் பயிரிடப்படும் ஒரு சிறுதானியம். இது மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவாக பயன்படுகிறது. குதிரைவாலியானது வறட்சி, வெப்பம் மற்றும் சாதகமற்ற நிலையை எதிர்க்கும் தன்மை கொண்டவை. குதிரைவாலி பல மருத்துவ பயன்களை கொண்டுள்ளதால், ஆயுர்வேதத்திலும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குதிரைவாலியானது இரும்புச்சத்து, புரதம், மற்றும் நார்ச்சத்துக்கள் ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. இந்தியளவில் மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம் தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், கர்நாடாக, மகாராஷ்டிரம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழ் நாட்டில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், திருச்சி, பெரம்பலூர்,கரூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனீ, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது

குதிரைவாலியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

வ.எண் ஊட்டச்சத்து அளவு

(100 கிராம்)

1 கலோரிகள் 300 kcal
2 கொழுப்பு 3.6 கிராம்
3 நார்ச்சத்து 13.6 கிராம்
4 புரதம் 11 கிராம்
5 கார்போஹைட்ரேட் 55 கிராம்
6 கால்சியம் 22 மி.கி
7 வைட்டமின் பி 1 0.33 மி.கி
8 இரும்புச்சத்து 18.6 மி.கி
9 வைட்டமின் பி 2 0.10 மி.கி
10 வைட்டமின் பி 3 4.2 மி.கி

மருத்துவ நன்மைகள்

குதிரைவாலியில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகம் உள்ளது.எனவே, கோதுமை மற்றும் பிற தானியங்களை விட இது சர்க்கரை நோய்க்கு அதிக பலன் தரும். குதிரைவாலியானது 41.7 என்ற குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. எனவே, இது இரத்த சர்க்கரை அளவை விரைவாக உயர்த்தாது. குதிரைவாலியில் பாலிஃபீனால்கள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள்  நிறைய உள்ளன இவை உடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றும் பண்புகளை கொண்டுள்ளன. மேலும்,  இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள், நீரிழிவு நோய், மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.

குதிரைவாலியில் கார்போஹைட்ரெட்  மற்றும் கொழுப்பு குறைவாகவே உள்ளன. 100 கிராம் குதிரைவாலியில் வெறும் 3.6 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளது. இதனால், அன்றாட வாழ்க்கையில் குதிரைவாலி தொடர்ந்து உண்டு வருவதால் ஆரோக்கியமாக இதயத்தை வைத்துக் கொள்ளலாம்.மேலும், இது உடலில் உள்ள மொத்த கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவுகிறது. எனவே, குதிரைவாலி உடல் எடையைக் குறைப்பதற்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது. குதிரைவாலியில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் மிக அதிகமாக உள்ளன. இந்த நார்ச்சத்துக்கள் நம் உடலில் செரிமானம் ஆகாமல் முழுவதுமாக அப்படியே வெளியேற்றப்படுகின்றன.இதன் விளைவாக, கழிவுப்பொருட்களின் செரிமானம் மற்றும் வெளியேற்றத்திற்கு அவை உதவுகின்றன. எனவே, குதிரைவாலியை செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவும்.

குதிரைவாலியில் இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் மிக அதிகமாக உள்ளன. துத்தநாகம் மற்றும் இரும்பு இவை இரண்டும் நமது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அவசியம்.எனவே, குதிரைவாலி உண்டு வருவதனால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி தொற்று நோய்களிலிருந்து விரைவாக விடுபடமுடியும். குளூட்டன் என்கிற பசையம் என்பது கோதுமை மற்றும் பார்லி ஆகியவற்றில் காணப்படக் கூடிய ஒருவகை புரதம் ஆகும். குளூட்டன் ஒவ்வாமை நோய் கொண்டவர்களுக்கு இந்த குளூட்டன் நல்லது அல்ல.குதிரைவாலி உட்பட அனைத்து சிறுதானியங்களிலும் குளூட்டன் இல்லை. எனவே, குளூட்டன் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு குதிரைவாலி ஒரு தகுந்த உணவாகும்.

சாகுபடி தொழில்நுட்பங்கள்

காலநிலைகள்: குதிரைவாலியானது வறட்சி, வெப்பம் மற்றும் சாதகமற்ற நிலையை எதிர்த்து வளரும் தன்மை கொண்டதால் மானவாரி பயிராக பயிரிடப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் வரை பயிரிடப்படுகிறது. குதிரைவாலி வெப்பம் மற்றும் வெப்பம் சார்ந்த காலநிலைகளில் நன்கு வளரக்கூடியது. குதிரைவாலி மற்ற பயிர்களை காட்டிலும் மாறுபட்ட சீதோஷ்ண நிலைகளை தாங்கி வளரக்கூடியது.

 இரகங்கள்: கோ 1,கே 1,கே 2,கோ கே வி 2, எம்.டி.யு 1

நிலம் தயாரித்தல்: குதிரைவாலி  தண்ணீர் தேங்கிய ஆற்றுப் படுக்கையில் ஒரளவிற்கு வளரக்கூடியது. இது மணல் கலந்த களிமண்நிலங்களில் நன்கு வளரக்கூடியது. கற்கள் நிறைந்த மண் மற்றும் குறைந்த சத்துக்கள் உடைய மண் சாகுபடிக்கு ஏற்றதல்ல. நிலத்தை இரண்டு முறை கலப்பை கொண்டு உழுது சமப்படுத்தி விதைப்படுக்கையை தயார்படுத்துதல் வேண்டும்.

 பருவம் : மானாவாரி (செப்டம்பர் -அக்டோபர்)  மற்றும் இறவை (பிப்ரவரி -மார்ச்)

 விதை அளவு மற்றும் விதைப்பு செய்தல்: குதிரைவாலி ஒரு ஹெக்டேருக்கு வரிசை விதைப்புக்கு 8-10 கிலோ விதை தேவைப்படும், கை விதைப்புக்கு 12.5 கிலோ எக்டேருக்கு தேவைப்படும். விதைகளை தெளித்தல் (அ) வரிசைக்கு வரிசை 25 செ.மீ செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளி விட்டு விதைக்கலாம்.

 விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

உர மேலாண்மை: ஒரு  ஹெக்டேருக்கு 5-10 டன்கள் தொழு உரம் இடலாம். தழை, மணி மற்றும் சாம்பல் சத்தினை 40:30:50 கிலோ ஒரு  ஹெக்டேருக்கு என்ற விகிதத்தில் இடவேண்டும். உரம் முழுவதையும் விதை விதைப்பின்போது அளிக்க வேண்டும். நீர்பாசனப் பகுதிகளில் பாதியளவு தழைச்சத்தை விதைத்த 25-30 நாட்களுக்கு பிறகு இடலாம்.

 நீர் மேலாண்மை: பொதுவாக குதிரைவாலிக்கு நீர்பாசனம் தேவையில்லை வறன்ட சூழ்நிலை நிலவினால் ஒருமுறை நீர்பாசனம் பூங்கொத்து வரும் தருனத்தில் அளிக்கவேண்டும். அதிகப்படியான மழை பொழியும் காலங்களில் வடிகால் வசதி ஏற்படுத்தி நீரை வெளியேற்றவேண்டும்.

 களை மேலாண்மை: குதிரைவாலி வயலில் விதைத்த 25-30 நாட்கள் வரைகளை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் இரண்டு முறை களை எடுத்தல் போதுமானது. கைகொத்து அல்லது சக்கர கொத்தி மூலம் களை எடுக்கலாம்.

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை: குதிரைவாலியில் பூச்சி மற்றும்  நோய் தாக்கம் குறைவாகவே உள்ளது. கீழ்கண்ட முறைகளை கடைபிடிப்பதன் மூலம் அவற்றை  கட்டுப்படுத்தலாம்

பூஞ்சாண காளாண் நோய்: இது ஓரு பூஞ்சாண காளாண் நோயாகும். பாதிக்கப்பட்ட செடியினை பிடுங்கி எறிவதன் முலம் கட்டுப்படுத்தலாம். விதைகளை ஆரோக்கியமான செடிகளில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

கரிப்பூட்டை நோய்: இதுவும் ஓரு வகை பூஞ்சாண காளாண் நோயாகும். இதனை விதை நேர்த்தி மூலம் அக்ரோசன் 2.5 கிராம் ஒரு கிலோ விதைக்கு என்ற விகிதத்தில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். சுடுதண்ணீரில் நனைத்தும் (55 செல்சியஸ் 7 – 12 நிமிடங்களில்) விதைக்கலாம்.

துரு நோய் :இதுவும் ஓரு வகை பூஞ்சாண காளாண் நோயாகும். டைத்தேன் எம்-45 2 கிலோவை 1000 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

தண்டு துளைப்பான் : திமெட் குருணை 15 கிலோ  ஒரு ஹெக்டருக்கு என்ற விகிதத்தில் இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

 அறுவடை மற்றும் மகசூல்: வயல் அறுவடைக்கு தயாரானவுடன் அரிவாள் கொண்டு அறுத்து வயலில் அடுக்கி வைக்கப்பட வேண்டும். கதிர்களை காளைகளின் கால்களில் போட்டு நசுக்கி தானியங்களைப் பிரித்தெடுக்கலாம்.

சராசரியாக ஒரு ஹெக்டருக்கு 400-600 கிலோ தானியமும் 1200 கிலோ வைக்கோலும் கிடைக்கும். மேம்படுத்தப்பட்ட சாகுபடி முறைகளால் 10 – 12 குவிண்டால் வரை தானிய மகசூல் பெறலாம்.

இரகம் மகசூல்

(கிலோ /எக்டேர் )

கோ 1 1750
கே 1 1000
கே 2 1250
கோ கே வி 2 2100
எம்.டி.யு 1 1700

கட்டுரையாளர்கள்:

.வேணுதேவன்1, மு.வ. கருணா ஜெபா மேரி2, ஜெ.ராம்குமார்1 மற்றும் மா.ஞானசேகரன்3

வேளாண்மை அறிவியல் நிலையம், அருப்புக்கோட்டை, விருதுநகர்1

ஆராய்ச்சியளர், வேளாண்மை விரிவாக்கவியல்2

மண்டல ஆராய்ச்சி நிலையம்,அருப்புக்கோட்டை,விருதுநகர்3

Leave a Reply

editor news

editor news