Skip to content

நன்மை செய்யும் பூச்சிகள்

மண்புழுக்கள் மட்டும் உழவனின் நண்பர்கள் அல்ல பூச்சிகளும் உழவனின் நண்பர்கள்தான். உலகில் உள்ள உயிரினங்களில் பூச்சிகளே மிகவும் அதிக எண்ணிக்கையில்  உள்ளன. பூச்சிகள் எல்லா வகையான சூழல்களிலும் வாழ்வதுடன் சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்கின்றன. பூச்சிகள் இருந்தால் மட்டும்தான் மனிதன் உள்ளிட்ட பிற உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்கும். மனித இனம் மறைந்தாலும்கூட தன்னை தக்கவைத்துக்கொள்ளும் ஆற்றல் பெற்றவை இந்தப் பூச்சிகள்.

பூச்சிகளில் இரண்டு வகை உண்டு. அவை நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள்.  இந்த நன்மை பயக்கும் பூச்சிகள் மூலம் மனித கலாச்சாரங்களும் நாகரிகங்களும் எண்ணற்ற வழிகளில் பராமரிக்கப்படுகின்றன, அவை பல தீங்கு விளைவிக்கும் பூச்சி இனங்களின் பூச்சி எண்ணிக்கையை ஒழுங்குபடுத்துகின்றன, இயற்கை பொருட்களை உற்பத்தி செய்கின்றன, தாவரங்களின் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகின்றன, மேலும் அவை கழிவுகளை அப்புறப்படுத்தி கரிம ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்கின்றன.

தாவரங்களில் பெரும்பாலானவை இனப்பெருக்கம் செய்வது பூச்சிகளின் மகரந்தசேர்க்கை மூலமாகத்தான். பொதுவாக தேனீக்கள், வண்டுகள் மற்றும் பட்டாம் பூச்சிகள் என பல்வேறு வகையான பூச்சிகள் தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. உலக நாடுகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் நூறு சதவீத தாவரங்களில் எழுபத்தியொரு சதவீத தாவரங்கள் பூச்சிகளினால் மகரந்தச் சேர்க்கை செய்யும் தாவரங்கள். பூச்சிக்கொல்லி மருந்துகளை சார்ந்து நடைபெறும் இன்றையகால விவசாயத்தால் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பூச்சியினங்களும் அழிந்து வருகின்றன. உலகின் 40 சதவீதப் பூச்சியினங்கள் அழிந்துவிட்டன என்று முன்பே ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.  இவ்வாறு பூச்சியினங்கள் அழிந்தால் உணவு உற்பத்தி உலக அளவில் பாதிக்கப்படும்.

உலகின் பல்வேறு நாடுகள் பூச்சிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களை உணர்ந்து அவற்றை பாதுகாப்பதற்காக சில அமைப்புகளை உருவாக்கி உள்ளன. எடுத்துக்காட்டாக நெதர்லாந்து “மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் அனைத்துப் பூச்சிகளைக் காக்க விருப்பம் உள்ளவர்களின் கூட்டணி”, ஜெர்மனி “மகரந்தசேர்க்கையாளர்களின் பாதுகாப்பு அமைப்பு” போன்ற அமைப்பினை உருவாக்கி மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளை பாதுகாக்கின்றன. இந்த அமைப்புகள் ஆராய்சியாளர்களுடன் ஒன்றிணைந்து ஆய்வை மேற்கொண்டு முடிவை வெளியிட்டது. இந்த ஆராய்ச்சியின் முடிவில் i) ஒற்றைப்பயிர் முறை பூச்சிகள் வாழ்வதற்கு ஏற்றதல்ல. ஒற்றைப் பயிர் முறையால் பூச்சிகளின் இயற்கை வாழ்விடங்கள் அழிக்கப்படும்போது பூச்சியினங்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படுவதுடன் பூச்சிகள் இடம் பெயர்ந்து விடுகின்றன. இதனால் உணவு உற்பத்தி மிகவும் பாதிக்கப்படுகின்றன.   ii). பூச்சிக்கொல்லிகளின் அளவைக் குறைக்க வேண்டும். சில பூச்சிக்கொல்லிகளில் உள்ள ரசாயனங்கள் முதலில் தேனீக்களின் நரம்பு மண்டலத்தை தாக்கி மூளையின் செயல்பாடுகள் மற்றும் நினைவாற்றலை செயலிழக்கச் செய்வதுடன் இனப்பெருக்கத்தையும் பாதிக்கின்றன. இவ்வாறு பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை விட நன்மை செய்யும் பூச்சிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றன.

“பூச்சிகளின் அழிவு பொருளாதாரத்தின் அழிவு” எனவே பூச்சிகளைக் காப்போம் பொருளாதாரத்தைப் பெருக்குவோம். நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இயற்க்கை வாழ்விடங்களை பாதுகாக்க வேண்டும், தரிசு நிலங்களை பூச்சிகளின் வாழ்விடங்களாக மாற்றவேண்டும், ரசாயன பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் மற்றும் பூ பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

கட்டுரையாளர்: ர.திவ்யா, முனைவர் பட்டப்படிப்பு மாணவி (பூச்சியல் துறை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம், கோயம்புத்தூர்.

மின்னஞ்சல்: divyadivi579@gmail.com

Leave a Reply

editor news

editor news