கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தை ஆண்டு முழுவதும் தொடர்ந்து அளிப்பதன் மூலம் சீரான உற்பத்தியினை பெறலாம். பசுந்தீவனத்தில் ஊட்டச் சத்துக்கள் இயற்கையான தன்மையிலேயே உள்ளதால் அவற்றின் செரிமானத் தன்மை அதிகம். மழைக்காலங்களில் தேவைக்கு மேல் கிடைக்கும் பசுந்தீவனத்தை பதப்படுத்தி கோடையில் கால்நடைகளுக்கு அளிப்பதன் மூலம் பசுந்தீவனப் பற்றாக்குறையையும் கால்நடைகளின் உற்பத்தி இழப்பையும் தவிர்க்கலாம்.
பசுந்தீவனத்தை இரண்டு முறைகளில் பதப்படுத்தி சேமித்துக் கொள்ளலாம்.
(i) காய்ந்த புல் அல்லது உலர் புல்
(ii) சைலேஜ் அல்லது ஊறுகாய்ப்புல்
உலர் புல் தயாரிப்பு
பசுந்தீவனப் பயிரை அதன் பூ பூக்கும் தருணத்தில் அறுவடை செய்து சூரிய ஒளியில் உலர வைத்து அதன் ஈரப்பதத்தை 15 சதவிகிதத்திற்கு குறைவாக குறைத்து சேமித்து வைத்துக் கொள்ளலாம். காலையில் பனி விலகியவுடன் தீவனப் பயிரை அறுவடை செய்து அந்த நிலத்திலேயே சூரிய ஒளியில் உலர வைக்க வேண்டும். சூரிய ஒளியின் தன்மையைப் பொறுத்து 3 முதல் 5 மணி நேரத்திற்கு ஒரு முறை தீவனப் பயிரை தலைகீழ் திருப்பி வைக்க வேண்டும். மாலையில் அதன் ஈரப்பதம் சுமார் 30 முதல் 40 சதவிகிதமாக இருக்கும். அவற்றை சிறு கட்டுகளாக கட்டி அடுத்த நாள் காலையில் மீண்டும் பிரித்து உலர வைக்க வேண்டும். நல்ல சூரிய ஒளியிருந்தால் மாலையில் அதன் ஈரப்பதம் 20 சதவிகிதமாக குறைந்திருக்கும். மூன்றாவது நாள் காலையில் கூம்பு வடிவத்திலோ அல்லது குதிர் போட்டு சேமித்து வைக்க வேண்டும். தரமான உலர்புல் வெளிறிய பச்சை நிறத்தில் பூஞ்சை காளான் இல்லாமல் இருக்கும்.
சைலேஜ் தயாரிப்பு
பசுந்தீவனங்களை அவற்றின் பசுமை மாறாமல் மிகவும் குறைந்த ஊட்டச்சத்து இழப்புடன் சைலோ எனப்படும் காற்றுப் புகா குழியில் பதப்படுத்தி சேமிக்கும் முறைக்கு சைலேஜ் அல்லது ஊறுகாய்ப்புல் தயாரிக்கும் முறை என்பது பெயர்.
சைலேஜ் தயாரிக்க அறுவடை செய்ய வேண்டிய தருணம்:
வீரிய புல் வகைகள் – பூக்கும் தருணம்
பயறுவகைத் தீவனங்கள் – 25 முதல் 30 சதவிகிதம் பூக்கும் தருணம்.
சோளம் கம்பு தானியங்கள் – பால் பிடிக்கும் தருணம்
மக்காச்சோளம் தானியங்கள் – பால் பிடித்த பிறகு
சைலோ
சைலேஜ் தயாரிக்க பசுந்தீவனங்களை காற்று புகாத இடத்தில் மூடி வைத்து சேமிக்க வேண்டும். இதற்கு பயன்படும் அமைப்புகள் சைலோ எனப்படுகின்றன. குழி சைலோ, கோபுர சைலோ, சரிவு சைலோ அல்லது காண்கிரீட் வளையங்கள், குதிர் மற்றும் பாலிதீன் பைகள் ஆகியவற்றையும் இதற்காகப் பயன்படுத்தலாம். குழி சைலோவை நீர் புகாத மேட்டுப் பகுதியில் பக்க வட்டில் மண் சரிவு ஏற்படாமல் அமைக்க வேண்டும். குழியின் சூலம் விட்டத்தைப் போல் இரு மடங்கு இருக்க வேண்டும்.
சைலேஜ் தயாரிக்கும் முறை
பசுந்தீவனத்தை சுமார் 2 முதல் 3 மணி நேரம் சூரிய ஒளியில் உலர்த்தி ஈரப்பத அளவை 75 முதல் 80 சதவிகிதத்திலிருந்து 60 முதல் 65 சதவிகிதம் குறைத்து அவற்றை 2 – 3 அங்குலம் கொண்ட சிறு சிறு துண்டுகளாக வெட்டி சைலோவில் இட்டு அடுக்கடுக்காக அடுக்கி வர வேண்டும்.
சுமார் 20 முதல் 30 செ மீ அடுக்கிய தீவனத்தை நன்கு அழுத்தி இடையே உள்ள காற்றை வெளியேற்றி பிறகு அதன் மீது 2 சதவிகிதம் சர்க்கரை பாகு கரைசலையும் 1 சதவிகிதம் சாதாரண உப்புக் கரைசலையும் தெளிக்க வேண்டும். பிறகு மீண்டும் பசுந்தீவனத்தை அடுக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து அடுக்கி சைலோவின் மேல் மட்டத்தை விட 1 முதல் 1 .5 மீ உயரம் வரை நிரப்ப வேண்டும். அதன் மேல் பகுதியில் வைக்கோல் அல்லது உபரியாகக் கிடைக்க கூடிய புல் போன்றவற்றைக் கொண்டு மூடி அதன் மேல் ஈர மண்ணை பூசி காற்று மற்றும் நீர் புகாமல் செய்ய வேண்டும். பாலிதீன் பைகளையும் பயன்படுத்தலாம். இதன் பிறகு 20 நாட்களில் தரம் மிக்க சைலேஜ் உருவாகி விடும். சைலோவை திறக்கும் முன்பாக மேற்பகுதியில் உள்ள பயன்படாத பதம் குறைந்த தீவனத்தை அகற்றி விட வேண்டும்.
தரமான சைலேஜ் பழ வாசனையுடன் கூடிய நறுமணம் உடையதாகவும் பசுமை நிறத்துடனும் சாறு கலந்தும் இருக்கும். அமில தன்மை 3.5 முதல் 4.2 வரை இருக்கும்.
பூஞ்சை பாதித்த சைலேஜை கால்நடைகளுக்கு அளிக்க கூடாது. அதிக புளிப்புச் சுவையுடனுள்ள சைலேஜை ஆடுகளுக்கு கொடுக்கக் கூடாது. நாள் ஒன்றிற்கு கால்நடைகளுக்குத் தேவைப்படும் சைலேஜின் அளவு கறவை மாடு – 15 – 20 கிலோ, கிடேரி- 5 – 8 கிலோ, வளர்ந்த ஆடு – 200 – 300 கிராம். பசுந்தீவனம் பற்றாக்குறை ஏற்படும் கோடை காலத்தில் இவ்வாறு பதப்படுத்திய தீவனத்தை அளிக்கலாம்.
கட்டுரையாளர்கள்: ஜெ.சுபாஷினி மற்றும் வை.ஹரிஹரசுதன், உதவி பயிற்றுநர்கள், வேளாண்மைக் கல்வி நிறுவனம், குமுளூர், திருச்சி. மின்னஞ்சல்: tnauhari@gmail.com
சைலேஜ் முக்கியதுவம்& நன்மைகள்