நமது நாட்டில் 95% பயிர்கள் வயல் வெளிகளிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் சில பயிர்களை எல்லாவித தட்பவெட்ப சூழ்நிலைகளிலும் வளர்க்க இயலாது. பருவமழையும் சில சமயங்களில் பொய்த்துப் போவதால் விவசாயிகள் பெருமளவில் நஷ்டம் அடைகின்றனர். இதைத் தடுக்கவே ஒரு புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. அதுவே பசுமைக் குடில் தொழில்நுட்பம் ஆகும். வளர்ந்த நாடுகளான இஸ்ரேல், ஸ்பெயின், நெதர்லாந்து, சவூதி அரேபியா முதலிய நாடுகளில் இத்தொழிலில்நுட்பம் பின்பற்றப்படுகிறது.
பசுமைக் குடில் தொழில்நுட்பம் என்பது பயிர்களுக்கு சாதகமான சுற்றுபுறச் சூழலை வழங்குவதேயாகும். காற்று, குளிர், மழை, அதிகப்படியான சூரிய ஒளி, அதிக வெப்பநிலை, பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களிலிருந்து செடிகளை பாதுகாக்க இந்த தொழில்நுட்பம் உதவுகின்றது.
பசுமைக் குடில் என்பது என்ன?
பசுமைக் குடில் என்பது ஒளி ஊடுருவக்கூடிய (அ) பிளாஸ்டிக் கூரையினால் போர்த்தப்பட்ட அமைப்பாகும். இந்தக் கூடாரத்தினுள் பயிர் வளர்ச்சி மற்றும் விளைச்சலுக்குத் தேவையான தட்பவெட்ப நிலை எளிதில் கிடைக்கும். கரியமிலவாயு உள்புறத்திலேயே தங்கி விடுவதால் தாவாரத்தின் ஒளிச் சேர்க்கைக்கு அதிகப்படியான கரியமிலவாயு கிடைக்கிறது. இதன் மூலம் பயிர்களில் 5 முதல் 10 மடங்கு அதிக ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது. இதன் காரணமாக விளைச்சல் அதிகமாகவும், தரமான விளைபொருள்களும் கிடைக்கின்றன. மேலும், மண்ணிலிருந்து ஆவியாகும் நீரும் உள்புறத்திலேயே தங்கி விடுவதால் ஈரப்பதமும் அதிகமாகிறது. குறைந்த நீர்ப்பாசனமே தேவைப்படும். சொட்டு நீர்ப்பாசனம் முறையில் நீர்ப்பாசனம் செய்வது மிகவும் சிறந்த முறையாகும்.
பசுமை குடில் கட்டமைப்பு:
அவரவர் தேவைக்கு ஏற்ப பசுமை குடில் கட்டமைப்பு மாறுபடும். இதில் மூன்று பிரிவுகள் உள்ளன.
1) குறைந்த மதிப்பு (அ) குறைந்த நுட்ப பசுமைக்கூடம்:
கட்டமைப்புக்கு மூங்கில், மரக்கட்டைகள் முதலியவற்றை பயன்படுத்தலாம். இதில் தானியங்கி சிறப்பு கருவிகள் எதுவும் இருக்காது. மேலும் வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பதத்தை கட்டுப்படுத்தும் நுட்பம் வைக்கப்பட்டிருக்கும். இது குளிர்காலத்தில் பயிர்களுக்கு ஏற்ற சுற்றுபுறத்தை ஏற்படுத்தும்.
2) மிதநுட்ப பசுமைக்கூடம்:
இதில் கட்டமைப்புக்கு இரும்பு தாது பூசப்பட்ட கம்பிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். பெரும்பாலான விவசாயிகள் குறைந்த முதலீடு மற்றும் தானியக்க முறையில் இயங்கும் கருவி வசதிகளையே விரும்புகின்றனர். இதில் வெப்பச்சீர் நிலை கருவி மற்றும் வெப்பத்தை வெளியேற்றும் விசிறி பொருத்தப்பட்டிருக்கும். இம்மாதிரி கூடம் வறண்ட நில பகுதிக்கு ஏற்றதாக இருக்கும்.
3) உயர்நுட்ப கூடம்:
இதில் வெப்பம், சூரிய ஒளி, கரியமிலவாயு அளவு, காற்றின் ஈரப்பதம், நீர்த்தேவை முதலியவற்றை கட்டுப்படுத்தும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
குடில் அமைக்கும் முறை:
தோட்டத்தில் கிழக்கு மேற்காக குடிலையும், வடக்கு தெற்காக பாத்திகளையும் ‘ஏரோ டைனமிக்’ முறையில் அமைக்க வேண்டும். அப்பொழுது தான் பயிர்களுக்கு போதுமான காற்று வசதி கிடைக்கும். நிழலுக்கு கொசுவலை பயன்படுத்துவதன் மூலம் தட்பவெட்ப நிலையைக் கட்டுப்படுத்தலாம். நுண்ணீர் தெளிப்பான் மூலம் பனிப்புகை போன்று சிறு துகள்களாக தண்ணீர் தெளிக்கப்படுவதால் 4 டிகிரி வெப்பநிலை வரை குறைக்கப்படுகிறது.
பசுமை குடில் அமைப்பதின் நன்மைகள்:
குடிலின் உள்கட்டமைப்பால் பயிரில் சரியான ஈரப்பதத்துடன் ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது. வயல் வெளியில் 5 ஏக்கரில் எடுக்கும் மகசூலை குடிலுக்குள் ஒரே ஏக்கரில் எடுக்கலாம்.
1) கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பயிர்கள் வளர்வதால் பயிர்களுக்கு எவ்வித சேதமும் இருக்காது.
2) ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். பருவத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் அவசியம் இல்லை.
3) பூச்சிகள் மற்றும் நோய்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது.
4) தரமான காய்கறி, பழம், கீரை வகைகளை சாகுபடி செய்யலாம்.
5) மகசூல் 5 மடங்கு அதிகரிக்கும். விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும்.
6) குறைந்த காலத்தில் பயிர்கள் செழித்து வளரும்.
7) நுண்ணீர் பாசன முறை பின்பற்றுவதால் நீர்த்தேவை குறையும்.
8) செயற்கை உரங்கள், ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் அதிக விளைச்சல் பெறலாம்.
பசுமைகுடிலில் என்ன பயிர்கள் வளர்க்கலாம்?
பப்பாளி, தர்பூசணி, வெள்ளரிக்காய், பீன்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய், மிளகு, கேரட், இஞ்சி, மஞ்சள், முட்டைகோஸ், வெங்காயம், மிளகாய், தக்காளி, பாகற்காய், கீரை வகைகள் மற்றும் பூ வகைகளில் மல்லிகை, ரோஸ், ஆர்க்கிட் முதலியன.
தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை பசுமைக் குடில் அமைக்கும் விவசாயிகளுக்கு 50% மானியம் வழங்குகிறது. பசுமை குடில் திட்டத்தின் பயனை அனைத்து விவசாயிகளும் பெற வேண்டும் என்கிற அடிப்படையில் இம்மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். வறட்சி ஆன இடங்களிலும் நிறைந்த விளைச்சல் காணலாம். இதைப்பற்றிய தகவல் அறிய மாவட்ட தோட்டக்கலைத்துறை, நபார்டு வங்கி முதலிய இடங்களை அணுகலாம்.
கட்டுரையாளர்: க.பா.சந்திரரூபினி, இளநிலை வேளாண்மை மாணவி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மின்னஞ்சல்: visitkbc@gmail.com