கரும்பு, இந்தியாவின் மிக முக்கியமான பணப்பயிராகும். கரும்பில் இளம் பருவத்தில் (3 மாதங்களுக்குள்) தாக்க கூடிய பூச்சிகளில் இளங்குருத்து புழு மிகவும் முக்கியமான பூச்சியாகும். கரும்பில், இளங்குருத்துப் புழுவானது 25 முதல் 30 விழுக்காடு அளவிற்கு சேதம் விளைக்கும்.
தாக்குதலின் அறிகுறிகள்:
- இப்பூச்சியானது 1-3 மாத வயதுடைய இளம் பயிர்களை அதிகமாகத் தாக்கும். நிலமட்டத்திற்கு மேலே இளந்தண்டுகளில் பல சிறு துளைகள் குருத்தில் காணப்படும்.
- புழுக்கள் நிலமட்டத்தின் அருகில் உள்ள இளந்தண்டுகளை துளைத்து உள்ளே சென்று திண்பதால் நடுக்குருத்து காய்ந்து அழுகி துர்நாற்றம் வீசும். இதனை இழுத்தால் எளிதில் வந்துவிடும்.
வளர்ச்சி பருவங்கள்:
- முட்டை: முட்டைகள் கூட்டமாகக் சோகையின் அடிப்புறத்தில் 3-5 வரிசைகளாக 4-100 காணப்படும். இக்கூட்டங்கள் டைல்ஸ்கள் போன்று ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்திருக்கும். இது 4-6 நாட்களில் பொரித்து புழுக்கள் வெளிவரும்.
- இளம்புழு: இது பழுப்பு கலந்த வெண்மை நிறத்தில் 5 ஊதா நிறக் கோடுகளுடன் காணப்படும். தலை அடர் பழுப்பு நிறத்துடனும் 16-30 வாழ்நாள்களை கொண்டது.
- கூட்டுப்புழு: கூட்டுக்குள் செல்லும் முன் புழுவானது பயிரின் தண்டில் ஒரு பெரிய துளையிட்டு அதனை பட்டு நுால் கொண்டு மூடிவிடும். பின் நீண்ட கூட்டுக்குள் அடைந்திருக்கும்.
- அந்துப்பூச்சி: வெளிர் சாம்பல் பழுப்பு நிற பூச்சியில் கருப்பு நிற புள்ளிகள் முன் இறக்கைகளில் காணப்படும். பின் இறக்கைகள் வெண்ணிறத்தில் இருக்கும்.
பொருளாதார சேத நிலை: 15% வெண்கதிர் அறிகுறிகள்
மேலாண்மை முறைகள்
- இளக்குருத்துப் புழுவின் எதிர்ப்பு இரகங்கலான, கோ 312, கோ 421, கோ 661, கோ 917 மற்றும் கோ 853 போன்றவகளை பயிரிடலாம்.
- சாகுபடிப் பருவத்தில், டிசம்பர்–ஜனவரி முன்பட்டத்தில் பயிர் செய்தால் இளக்குருத்துப் புழுவின் தாக்குதலை குறைக்கலாம்.
- புழு தாக்கப்பட்ட நடுக்குருத்துகளை சேகரித்து அழித்து விடவேண்டும்.
- நடவு செய்த 3 நாட்கள் கழித்து காய்ந்த சோகையினை 10-15 செ.மீ உயரத்திற்கு பரப்பி நிலமட்ட மூடாக்கு ( Mulching) அமைக்க வேண்டும்.
- மண்ணின் வெப்பத்தினைக் குறைக்க போதுமான நீர் பாய்ச்சுதல் மற்றும் ஈரப்பதத்தினை அதிகரிப்பது இளங்குருத்துப் புழுப் பெருக்கத்தினை தடுக்க இயலும்.
- மண் அணைப்பதால் (45வது நாளில்) இளக்குருத்துப் புழுவின் தாக்குதலை குறைக்கலாம்.
- இனக்கவர்ச்சி பொறியை 10 வீதம் ஒரு ஏக்கருக்கு, 45 செ.மீ உயரத்தில் வயலில் பொருத்த வேண்டும்
- கிரானுலோசிஸ் வைரஸ்களை (GV) நடவு செய்த 35 வது மற்றும் 50 வது நாட்களில் தெளிக்க வேண்டும்.
- ஒட்டுண்ணியான, ஸ்டர்மியோப்சிஸ் இன்பெரன்ஸ்ன் என்ற கிராவிட் பெண் பூச்சிகளை வயலுனுள் (125 வீதம்/ஏக்கர்) விடலாம்
- கார்டாப் ஹைட்ரொகுளொரைடு என்ற மருந்தினை (ai: 1 கிலோ / ஹெக்டர்) அடியுரமாக இட வேண்டும்.
- குலொரன்ட்ரனலிபுரொல் 18. 5 EC என்ற மருந்தினை – 150 மிலி /ஹெக்டர் என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
கட்டுரையாளர்கள்:
முனைவர் செ. சேகர்#, கு. திருவேங்கடம்# மற்றும் சூரியா. ச*
#உதவிப் பேராசிரியர்கள் (பூச்சியியல் துறை), RVS வேளாண்மை கல்லூரி, தஞ்சாவூர்.
மின்னஞ்சல்: sekar92s@gmail.com
*முதுநிலை வேளாண் மாணவர், (பூச்சியியல் துறை), வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம், கிள்ளிகுளம், தூத்துக்குடி.