Skip to content

வாழைப் பயிரில் சிகடோகா இலைப்புள்ளி நோய்

என்னுடைய வாழைத் தோப்பில் நிறைய கன்றுகளில் இலைல புள்ளிப்புள்ளியா வந்து அப்டியே காயுதுங்க.. அதை போட்டோ எடுத்து அனுப்பிருக்கன், இது என்ன பிரச்சனை? இதை எப்படி சரி பண்ணலாம்னு சொல்லுங்க?

பதில்: இதுகுறித்து தொன் போஸ்கோ வேளாண்மைக் கல்லூரியின் உழவியல் துறை உதவிப் பேராசிரியர் மு. ஜெயராஜ் கூறியதாவது, இது வாழைப் பயிரில் பொதுவாக ஏற்படக்கூடிய சிகடோகா இலைப்புள்ளி நோயாகும். இது முதன்முதலில் பிஜி தீவில் உள்ள சிகடோகா பள்ளத்தாக்கில் உருவாகி 50 சதவீதம் வரை மகசூல் இழப்பை ஏற்படுத்தி மற்ற பகுதிக்கு பரவியதால் இதனை சிகடோகா இலைப்புள்ளி நோய் என்று கூறுகிறோம். இந்த நோயானது முதலில் நீள்வட்ட புள்ளிகளுடன் மஞ்சள் நிறத்திலிருந்து காப்பி நிறத்தில் ஆரம்பமாகும். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக இலை முழுவதும் பரவி இலைகள் காயத் துவங்கும். எனவே பாதிப்பு தென்படும் இலைகளை முதலில் அப்புறப்படுத்தி எரிக்கலாம் அல்லது உயிர்பூஞ்சாணக் கொல்லி கலந்து மற்ற கழிவுகள் கம்போஸ்ட் செய்வதில் சேர்த்து இதையும் மக்க வைக்கலாம். வயலில் களைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், அதோடு அடிக்கடி தேவையற்ற இடைக்கட்டைகளை நீக்கிவிட வேண்டும். வயலில் நீர் தேங்குவது இந்த நோய் பரவ வழிவகுக்கும் எனவே சரியான முறையில் வடிகால் வசதி அமைக்க வேண்டும். இதனைக் கட்டுப்படுத்த பூஞ்சாணக்கொல்லியான கார்பண்டசிம் 2 கிராம் ஒரு லிட்டர் நீருக்கு என்றளவில் அல்லது ப்ரோபிகானசோல் 2 கிராம் ஒரு லிட்டர் நீருக்கு என்றளவில் அல்லது மான்கோசப் 2.5 கிராம் ஒரு லிட்டர் நீருக்கு என்றளவில் கலந்து 15 நாளுக்கு ஒரு முறை என மூன்று முறைத் தெளிக்கும் போது நோயின் தாக்கம் குறையும்.

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj