இயற்கை உரம் என்பது தாவர மற்றும் விலங்குகளின் கழிவுகளிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்தின் மூலம் தயாரிக்கப்படுகிறது. சிதைவுறுதலுக்கு பிறகு ஊட்டச்சத்துக்கள் வெளிவருகின்றன. பயிரின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காக விலங்குகள், மனிதன் மற்றும் காய்கறிகளின் கழிவுகளைப் பயன்படுத்துதல் மற்றும் சேகரித்தல் என்பது வேளாண்மையில் தொன்று தொட்டு வழக்கத்தில் இருக்கிறது. அங்கக படிவங்களிலுள்ள தாவர ஊட்டச் சத்துக்களை உள்ளடக்கிய விலங்குகள், தாவரம், மற்றும் மனிதக் கழிவுகளிலிருந்து பெறப்பட்ட அங்ககப் பொருள்களே இயற்கை உரம் அல்லது எருவாகும், இயற்கையாக இருக்கக் கூடிய அல்லது செயற்கையான வேதிப்பொருள்களை உள்ளடக்கிய ஊட்டச்சத்துக்களை செயற்கை உரங்கள் என்று அழைக்கிறோம். குறைவான ஊட்டச்சத்துடைய இயற்கை உரம், அதிக அளவு எச்சப்பயனை உள்ளடக்கியது. அதிக ஊட்டச்சத்துக் கொண்ட செயற்கை உரங்களைக் காட்டிலும் இது மண்ணின் இயல்பு குணங்களை மேம்படுத்துகிறது.
இயற்கை உரத்தின் முக்கியமான ஆதாரங்கள்:
- கால்நடைத் தொழுவத்தின் கழிவுகள் – சாணம், சிறுநீர், சாண எரிவாயுக் கலத்தில் உள்ள சேற்றுக் குழம்பு.
- மனிதன் வாழும் இடங்களில் இருந்து வரும் கழிவுகள் – மலக்கழிவு, சிறுநீர், நகரக் கழிவுகள், கழிவு நீர், சாக்கடைக் கழிவு, கழிவுப் படிமம்.
- கோழிப்பண்ணைக் குப்பை, ஆடு, மாடுகளின் கழிவுகள்
- இறைச்சி வெட்டுமிடத்தில் உள்ள கழிவுகள் – எலும்பு எரு, இரத்தக் குருதி எரு, கொம்பு மற்றும் குளம்பு எரு, மீனின் கழிவுகள்.
- வேளாண் தொழில் துறையினுடைய துணைப் பொருட்கள் – எண்ணெய் பிண்ணாக்கு, கரும்புச் சக்கை, மற்றும் சர்க்கரை ஆலைக் கழிவு, பழம் மற்றும் காய்கறி பதப்படுத்துவதிலிருந்து வரக்கூடிய கழிவுகள் மற்றும் இன்ன பிற பொருட்கள்
- பயிர்க் கழிவுகள் – கரும்புச் சருகு, பயிர்த்தூர் மற்றும் இதர பொருட்கள்
- ஆகாயத் தாமரை, களைகள், நீர்த் தொட்டியின் படிவுகள்
- பசுந்தாள் உரப் பயிர்கள் மற்றும் பசுந்தழை உரப் பொருட்கள்
இயற்கை உரங்களை, பருமனான அங்கக உரங்கள் மற்றும் அடர்த்தியுடைய அங்கக உரங்களாக ஊட்டச்சத்தின் அடர்த்தியைப் பொருத்து வகைப்படுத்தலாம்.
தொடரும்…..
கட்டுரையாளர்கள்: பெ.சி.ர. நிவேதிதா மற்றும் கோ.சீனிவாசன், முனைவர் பட்ட படிப்பு மாணவர்கள் (உழவியல் துறை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை.