Skip to content

கரும்பு

பருவம் மற்றும் இரகத்தேர்வு :-

முன்பட்டம் : டிசம்பர் – ஜனவரி

கோ.86032, கோ.சி.(கரும்பு) 6,கோ.கு5, கோ.க.(கரும்பு) 22, கோ.க.(கரும்பு)  23 & 24, கோ.வி.94101, கோ.க.90063, கோ.சி.95071 மற்றும் கோ.403 ஆகிய இரகங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. செவ்வழுகல் நோய் பாதிப்பு உள்ள பகுதிகளில் கோ.க.671 மற்றும் கோ.க.(கரும்பு) 24, கோ.63032 ஆகிய இரகங்களைத் தவிற்கவேண்டும்.

நீடித்த நவீன கரும்பு சாகுபடி

நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையானது கரும்பு சகுப்படியில் ஒரு புதிய அணுகுமுறை மற்றும் நீர் சேமிப்பு வழிகளில் ஒரு புதிய முயற்சி இந்த முறையில் விளைச்சலை அதிகபடுத்தும் உத்திகளோடு, தண்ணீர் சேமிப்பு குறித்தும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது எனவே உற்பத்தி அதிகரிப்பதோடு நீர் நிலை ஆதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கும் உறுதுணையாய் இவை இருக்குமென்பது உறுதியாகிறது நீடித்த நவீன கரும்பு சாகுப்படியானது குறைந்த அளவு பரு நாற்றுகள் மற்றும் குறைந்த அளவு தண்ணீரை உபயோகிப்பது, சரியான அளவு ஊட்டச்சத்து மற்றும் பயிர் பராமரிப்பின் மூலம் அதிக மகசூல் பெற வழிவகை செய்யும் சாகுபடி முறை.

முக்கிய கோட்பாடுகள் :

  • ஒரு விதைப்பரு சீவல்களிலிருந்து (BUD  CHIPS) நாற்றங்கால் அமைத்தல்.
  • இளம் (23-25 நாட்கள் வயதான) நாற்றுகளை எடுத்து நடவு செய்தல்.
  • வரிசைக்கு வரிசை 5 அடி இடைவெளியும், நாற்றுக்கு நாற்று 2 அடி இடைவெளியும் பராமரித்தல்.
  • சொட்டு நீர்பாசனத்தின் வழி உரமிடுதல்.
  • இயற்கை சார்ந்த உரங்கள், பயிற்பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகளுக்கு போதிய அளவு முக்கியத்துவம் அளித்தல்.
  • ஊடு பயிரிட்டு மண் வளம் மற்றும் மகசூல் அதிகரிக்க செய்தல்.

நீடித்த நவீன கரும்பு சகுப்படியின் பயன்கள் :

  • தண்ணீர் உபயோகிப்பு திறன் கூடுகிறது.
  • சரியான அளவு உரங்களை உபயோகிப்பதன் மூலம் பயிர்களுக்கு ஊட்டச்சத்து பராமரிப்பு சிறப்பாக அமைகிறது.
  • காற்று மற்றும் சூரிய ஒளி அதிக அளவு பயிர்களுக்கு கிடைக்கிறது அதனால் கரும்பில் சக்கரை கட்டுமானம் அதிகரிக்கிறது.
  • மொத்த சாகுப்படி செலவு குறைகிறது.
  • விவசாயிகளுக்கு ஊடுபயிர் மூலம் இரட்டை வருமானம் கிடைக்கிறது.
  • மகசூல் அதிகரிப்பு .

சாதாரண மற்றும் நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறைகளுக்கு இடையேயான ஒரு ஒப்பு நோக்கல் :

செயல் முறைகள் சாதாரண முறை நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறை
விதைக்கருணைகள் 60,000 விதை பருக்கள் (30,000 இரு விதைப்பரு கருணைகள்) ஏக்கருக்கு  4  டன் 5000 ஒரு விதைப்பரு சீவல்கள் (ஏக்கருக்கு 50 கிலோ)
நாற்றங்கால் தயாரிப்பு இல்லை உண்டு
நடவு முறை விதைக் கருணைகள் நேரடியாக நிலத்தில் நடவு செய்தல் 25-35 நாட்கள் வயதுடைய நாற்றுகளை நடவு செய்தல்
இடைவெளி (வரிசைக்கு வரிசை) 2.0 – 3.0 அடி குறைந்தது 5.0 அடி
தண்ணீர் தேவை அதிகம் (தேவைக்கு அதிகமான நீர்ப்பாசனம்) குறைவு (தேவையான அளவு ஈரப்பதம் மட்டும் அளித்தல், சொட்டு நீர் உறப்பசனம்)
விதை முளைப்பு திறன் குறைவு அதிகம்
ஒரு பயிரிளிருந்து கிளைவிடும் முலைகளின் எண்ணிக்கை குறைவு(6-8) அதிகம்(12-15)
காற்று மற்றும் சூரிய ஒளி புகுவத்ற்கான சாத்தியக்கூறு குறைவு அதிகம்
ஊடுபயிர் பராமரிப்பதற்கான சாத்தியக் கூறு குறைவு அதிகம்

நாற்று தயார் செய்ய கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் :

ஆறு மாதம் வயதுள்ள உயர் விளைச்சல் தரும் ரகங்களிலிருந்து விதைப் பருக்களை சேகரிக்க வேண்டும் விதைப்பருக்களின் முளைப்புத் திறனை தூண்டும் வகையில் 1 கிலோ யூரியா, 50 கிராம் கார்பெண்டாசிம், 200 மி.லி. மாலத்தியான் ஆகியவைகளை 100 லி. நீரில் கலக்க வேண்டும் அதில் 5000 விதைப் பருக்களை நன்கு நனையும்படி 15 நிமிடம் ஊறவைத்து பின் நிழலில் உலர வைக்க வேண்டும்.

இரசாயனமுறையினை தவிர்த்து உயிரியல் முறையிலும் விதை நேர்த்தி செய்யலாம். இதற்கு டிரைக்கோடெர்மா விரிடி 2 கிராம் 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து பின் விதைப் பருக்களை 15 நிமிடம் ஊற வைத்து நிழலில் 15 நிமிடம் உலர வைக்கவும்.

விதை நேர்த்தி செய்த விதைப் பருக்களை கோணிப்பையில் இறுக கட்டி நிழலில் அடுக்கி வைக்க வேண்டும். இவற்றை கற்று புகாவண்ணம் நன்கு மூடிய கொநிப்பைகளின் மீது பாரம் ஏற்றி 5 நாட்கள் அப்படியே இருத்தல் வேண்டும். இடையில் தண்ணீர் தெளிக்க வேண்டியதில்லை.

முதலில் குழி தட்டுகளின் பாதியளவில் கோகோ பீட் கொண்டு நிரப்ப வேண்டும். பின்பு விதைப் பருக்களை மேல் நோக்கி இருக்குமாறு சற்று சாய்வாக அடுக்கி மீதி குழிகளை கோகோ பீட் கொண்டு நிரப்பிட வேண்டும்.

தண்ணீர் தெளிக்க வசதியாக குழி தட்டுகளை வரிசையாக வைக்க வேண்டும்.தினசரி தண்ணீர் தெளிப்பது அவசியம். 1 ஏக்கருக்கு சுமார் 300 சதுர அடி தேவை. நிழல்வலை அல்லது மர நிழலிலோ நாற்றுக்கள் வைக்க வேண்டும்.

நடவு செய்தல் மற்றும் இதர பராமரிப்புகள் :

நாற்றுகளை 5 * 2 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.நட்ட 10, 20 வது நாள் சிறிதளவில் மேலுரம் இட்டு மண்  அணைக்க வேண்டும் (யூரியா அல்லது அம்மோனியம் சல்பேட்) பிறகு களை எடுத்தல், மண் அணைத்தல்,உரம் தண்ணீர் நிர்வாகம் போன்ற அனைத்து பராமரிப்பு வேலைகளையும் முறையாக செய்ய வேண்டும்.15க்கும் ம் மேற்பட்ட தூர்கள்-2 மாதத்திற்குள் உருவாகும்.

2 அல்லது 3 தூர்கள் வந்தவுடன் முதலில் வந்த தாய்ச்செடியை வெட்டி நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கினால் அதிக பக்க தூர்கள் வெளிவரும் மற்றும் அணைத்து பயிர்களும் ஒரே சமயத்தில் கருப்பாக மாறும்.

நீடித்த நவீன கரும்பு சாகுப்படியில் அதிக இடைவெளியில் இருப்பதால் ஊடுபயிராக காய்கறிகள் பயறுவகைகள், வெள்ளரி,தர்பூசணி, பசுந்தாள் உர பயிர்களை பயிர் செய்யலாம். மேலும் ஊடுபயிர் செய்வதால் அதிக லாபம், களை கட்டுப்பாடு, மண் வளம் பெருக்க முடியும்.

மண் அணைத்தல் மற்றும் சோகை உரித்தல் :

  • நடவு செய்த 45வது நாள் மற்றும் 90வது நாள் மண் அணைப்பு செய்தல்.
  • ஒளிச்சேர்க்கைக்கு, மேற்புறமுள்ள 8-10 இலைகளே தேவைப்படுகின்றன. எனவே, கீழ்புறமுள்ள காய்ந்த மற்றும் சில காயாத இலைகளை 5 மற்றும் 7-வது மாதத்தில் உரித்து பார் இடைவெளியில் இட வேண்டும்.

சோகை உரிப்பின் பயன்கள் :

  • சுத்தமான பயிர் பராமரிப்பு.
  • பயிர்களுக்கிடையே காற்றோட்டம் அதிகரிப்பு.
  • பூச்சி தாக்குதல் குறைவு.
  • மற்ற பயிர் பராமரிப்பு பணிகள் எளிதாகின்றன.

சொட்டு நீர் உரப்பாசனம் :

நீடித்த நவீன கரும்பு சாகுபடியின் மகசூல் அதிகரிக்க சொட்டு நீர் உரப்பாசனம் சாலச் சிறந்தது. மண்ணின் தன்மைக்கேற்ப நாள்தோறும் அல்லது அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு ஒரு முறை சொட்டு நீர் பாசனம் அளிக்கலாம்.இவ்வகையில் 45 சதவீதம் பாசன நீரை (1200 மி.மீ.) சேமிக்க உதவும்.

சொட்டு நீர் உரப்பாசனம் – மேற்பரப்பு நீர் பாசனம் ஓர் ஒப்பீடு

      விவரம் மேற்பரப்பு நீர் பாசனம் சொட்டு நீர் உரப்பசானம்
பாசன நீர் தேவை 2200 மி.மீ. 1000 மி.மீ.
பாசன காலம் 250 நாட்கள் 250 நாட்கள்
பாசன இடைவெளி 7 நாட்கள் 1 நாள்
பாசனங்களின் எண்ணிக்கை 36 250
ஒவ்வொரு பாசனத்திற்கான நீர் தேவை (லி) 6.1 இலட்சம் 0.4 இலட்சம்
கரும்பு மகசூல் 92-105 டன்/ஏக்கர் 150-200 டன்/ஏக்கர்
உர உபயோகிப்பு திறன் 30 சதவீதம் 60 சதவீதம்
வரவு-செலவு விகிதம் 1.97 4.1

சொட்டு நீர் உறப்பாசனம்

ஊட்டச்சத்துக்களின் அளவு (கிலோ கிராம் / எக்டர் ) (நாட்களில்)

பயிற்காலம் (கரும்பு நட்டபின்) தழை சத்து மணி சத்து சாம்பல் சத்து
0-30 39.40 0.00 0.00
31-60 50.60 26.25 9.00
61-90 56.50 20.50 14.50
91-120 60.20 16.25 16.00
121-180 57.80 0.00 40.50
181-220 10.5 0.00 35.00
மொத்தம் 275.00 63.00 115.00

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் சரியாக கடைபிடித்தால் ஒரு மொட்டிலிருந்து குறைந்தது 30 கிலோ கரும்பு கிடைக்க வைய்ப்பு இருக்கிரது. ஒரு ஏக்கருக்கு 5000 மொட்டுக்கள் கணக்கிடும் போது 150 டன் மகசூல் பெற வாய்ப்பு உள்ளது.

 

நன்றி

மதுபாலன்

வேளாண்மை உதவி இயக்குநர்

தருமபுரி

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj