Skip to content

பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் ஏரிகளை ஆக்கிரமித்து விவசாயம்

ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு சட்டம் இயற்றியும், அகற்றாததாலும், ஏரியின் மதகுகள் பராமரிக்கப்படாததாலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகளில் தற்போது பெய்த மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், மொத்தம் 1,436 ஏரிகள் உள்ளன. இதில், பொதுப்பணித் துறை பராமரிப்பில் 787 ஏரிகள், 14 ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் 649 ஏரிகள் உள்ளன. தவிர, 2,000க்கும் மேற்பட்ட சிறு குளம், குட்டைகள் உள்ளன.

பெரும்பாலான ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கையில் சிக்கியுள்ளன. ஏரியை ஆக்கிரமித்து விவசாயம், வீடுகள் கட்டியுள்ளனர். மழைக்காலங்களில் ஏரிகளில் தேங்கும் மழைநீரை தங்களது வீடு, பயிர்களை காக்க இவர்கள் ஏரியை உடைத்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
திருத்தணி, பொன்னேரி, திருவள்ளூர், பள்ளிப்பட்டு என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஏரி நீரை வெளியேற்றும் சம்பவங்கள், ஒவ்வொரு மழைக்காலங்களின் போதும் நடைபெறுவது வாடிக்கையான ஒன்று.

ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக, தமிழக அரசு 2007ம் ஆண்டு அக்டோபரில் சட்டம் இயற்றி, உடனடியாக அமல்படுத்த உத்தரவிட்டது. ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அகற்றாவிடில், ஏரிகளை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் ஆகியோர் இச்சட்டத்தின்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்’’’’ என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சட்டம் இயற்றி ஒன்பது ஆண்டுகளாகியும், ஒரு ஏரியில் கூட ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித் துறையினர் முன்வரவில்லை. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் சமீபத்தில் பெய்த மழைநீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, திருவள்ளூர் ஒன்றியம் புல்லரம்பாக்கம் ஏரியில், அம்பேத்கர் நகர், காந்தி நகர், புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த சிலர், ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். ஏரிக்குள் வாகனங்கள் செல்ல கரையையும் உடைத்துள்ளனர்.

இதனால், ஏரியில் முழுமையாக நீர் தேங்க முடியாத நிலை ஏற்பட்டு, ஏரியை சுற்றியுள்ள விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இதேபோல், மாவட்டத்தில் ஏராளமான ஏரிகளும் ஆக்கிரமிப்பில் உள்ளன.பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள், தமிழக அரசின் ஏரிகளை பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் சட்டத்தின்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டு விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை சேமிக்க முடியும் என, விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj