“ உழஅற உழுதால் விளைவற விளையும்.”
“ ஆழ உழுதாலும் அடுக்க உழு.”
நிலத்தைச் சீராய் உழுவதற்கு மண்ணைக் கிளறி இளக்கப்படுத்த வேண்டுவதுமல்லாமல் தோட்டத்தைக் கொத்துகிறவிதம் ஏறக்குறைய அவ்வளவு சீராய் அதைப் புரட்டவேண்டுவதும் அவசியமென்று முன்னமே விவரித்துச் சொல்லியிருக்கிறது. இவ்வண்ணம் நாட்டுக்கலப்பையால் செய்ய முடியாது. அது செய்வதெல்லாங்கூடி மண்ணைக் கிளறிக் கொஞ்சம் இளக்கப்படுத்துகிறது. மேல்மண்ணை முழுவதும் இளக்கப்படுத்த அதிக சரீரப்பிரயாசை யெடுத்துக் கொண்டாலொழிய முடியாது. ஐரோப்பிய நாடுகளில் தற்காலத்தில் உபயோகப்பட்டுவரும் கலப்பையோ , நாட்டுக் கலப்பைபோ இல்லாமல் வடிவத்தில் வித்தியாசப்படுகிறது. அதைப் பூமியில் செலுத்தும்போது படைச்சால் மண் என்று கூறப்பட்டுள்ள சம கோணமான மண் பகுதியை வெட்டிக் கிளப்பி புரட்டும்படியாய் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் அக்கலப்பையால் செய்யப்படும் வேலை, கையால் கொத்துவதை வெகுவாய் ஒத்திருக்கிறது. உழவுத் தொழிலைத் துரிதமாயும் சீராயும் நடத்துவதற்கு மேற்குறித்த கலப்பை நாட்டுக்கலப்பையை விட எப்போதும் வெகு சிலாக்கியமா யிருக்கிறதென்று அனுபவத்தால் தெரியவருகிறது.
இந்தியாவில் உபயோகப்படுத்துவதற்கு மிகத் தகுதியான அநேகம் கலப்பைகள் வடிவத்தில் ஏறக்குறைய சீமைக்கலப்பையை ஒத்திருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கின்றன. அக்கலப்பைகளும் மூன்று விதங்களை அடுத்தபக்கத்துப் படங்களில் காணலாம். 1,2 படங்களில் காட்டியவை சாதாரண வேலைக்குத் தகுதியானவைகள். அவைகளை நாட்டுக்கலப்பையைப் போலவே உபயோகப்படுத்தலாம்.
3-ம் படத்தில் காட்டப்பட்ட கலப்பையின் வடிவமோ தரிசு நிலத்தைப் பெயர்ப்பதற்கும், சில இடங்களில் வெகு ஆழம் வேரூன்றிக்கிடக்கும் கோரை. அருகு இவைகளைக் களைவதற்கும், இப்போது உபயோகப்பட்டு வரும் நாட்டுக்கலப்பைகளுக்குப் பதிலாக உபயோகப்படுத்துவதற்கும் அனுகூலமானவை. மேற்குறித்த பெருங்கலப்பைகள் அநேகம் எருதுகள் பூட்டி இழுக்கப்படுகின்றன.
3 .1 .2 படங்களில் குறிக்கப்பட்ட கலப்பைகளுள் பருமனில் நடுத்தரமான அநேகம் கலப்பைகள் இந்நாட்டில் பல இடங்களில் அனுகூலமாக உபயோகப்பட்டு வருகின்றன.
இக்கலப்பைகளுக்கெல்லாம் பிரதான பாகங்கள் இரண்டு, அவை நாவும் (D)இரக்கையுமாம் (E).
நாவு, (Share)-இது கலப்பையைப் பூமியில் செலுத்தும்போது மண்ணை நேராய்த் தகடுபோல் வெட்டுகிறது. அது பூமியில் லகுவாய்ச் செல்லும்பொருட்டு சற்றேறக்குறைய முக்கோண வடிவமாகவும் முகப்பில் முனையை உடைய ஒர் ஆப்புப்போலவு மிருக்கிறது. அது இரும்பு அல்லது எஃகினால் செய்யப்பட்டு எதிர்முனை கூர்மையாக இருக்கவேண்டும். நாவு , ஆப்பு வடிவமாக இருப்பதால், கலப்பை பூமியில் செல்லுகையில் எந்தப் பக்கத்தில் கொஞ்சம் வெட்டப்படுகிறதோ அந்த மண்ணை ஒரு பக்கத்தில்விட இன்னெரு பக்கத்தில் அதிகமாய்க் கிளப்புகிறது.
இரக்கை.(Mould board) – இது இரும்பு அல்லது உருக்கினால் செய்யப்பட்ட ஒர் இலேசாகிய தகடு, அது ஒருவாறாக அமைக்கப்பட்டிருப்பட்டிருப்பதால் கலப்பையில் நாவுக்குச் சற்றுப் பின்னால் பொருத்தி இணைக்கப்படும்போது. அந்நாவினால் கொஞ்சம் வெட்டிக் கிளப்பப்பட்ட மண்ணை மெதுவாகத் திருப்பி ஒருபுறமாகக் கொஞ்சம் வெட்டித் தள்ளுகிறது.
கலப்பையின் இவ்வின்றியமையா அங்கங்கள் ஆப்பு வடிவமாக இருப்பதால், ஒப்பிட்டுப் பார்க்கையில் எக்காலத்தில் சொல்ப அளவு மண்தான் அவைகளுக்கு எதிர்ப்படுகின்றனவாதலால் அது மண்ணில் சுலபமாய்ப் பாய்ந்து, அதிகப் பிரயாசமன்றியில் இழுக்கப்படுகின்றது. சாதாரணமாய் நாட்டுக்கலப்பையைப் போல அவைகளிடத்தில் மண்பக்கம் தட்டையானபாகம் தோன்றுவதில்லை. ஒர் தடவையில் கிளப்பப்படும் மண்ணிற்குத் தகுந்தவாறு அவைகளைத் தரையில் செலுத்துவதற்கு அவ்வளவு பலம் வேண்டியதில்லை.
மேற்குறித்த கொழுவும் இரக்கையும் கலப்பையின் பிரதான மத்திய பாகமாகிய (A)ஒர் சிறிய சட்டத்திற்கு மறை ஆணிகள் அல்லது கடையாணிகளால் இறுக்கிப் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும் இந்தச் சட்டத்திற்கு 2-ம் படத்தில் காட்டியபடி எருதுகளைப் பூட்டுவதற்கு ஒரு சிறிய ஏர்க்காலும்; (G) 3- ம் படத்தில் குறித்திருக்கிறபடி கலப்பையை இழுத்துச் செல்லுவதற்கு ஓர் பெரிய ஏர்க்காலும் அமைக்கப்பட்டிருக்கிறது. தவிர குடியானவன் கலப்பையைப் பிடித்து ஒட்டும்பொருட்டு கலப்பையில் (B) ஒன்று அல்லது இரண்டு மேழி (கைப்பிடிகள்) போடப்பட்டிருக்கின்றன.
[1 –ம் படத்தில் ஏர்க்கால் காட்டப்படவில்லை. ஆயினும் கலப்பையின் மத்தியபாகத்திற்கு (A) அது மறை ஆணிகளால் இணைக்கப்பட்டு,கழுத்துப்பட்டை போன்ற அள்ளினால் (C)நிலைநிறுத்தப்படுகிறது.]
நிலம் உழுவதற்குத் தகுந்த நிலைமையிலிருந்தால் குடியானவன் கலப்பையை நேராய் ஓட்டுவதற்கும் வேண்டும்போது அதைத் திருப்புவதற்கும் அவன் மேழிகளை மெதுவாய்ப் பிடிக்கவேண்டும். நிலத்தில் கலப்பை ஆழம் செல்லவேண்டுமானால் நாட்டுக்கலப்பையின் மேழிகளை அழுத்த வேண்டியதில்லை. உண்மையில் அமிழ்த்தவே கூடாது. ஆதலால் சீமைக்கலப்பையால் வேலை செய்வது சுலபம்.
பெரிய சீமைக்கலப்பைகளில் முன் சொல்லப்பட்ட பாகங்களைவிட இன்னும் வழக்கமாய் அநேக பாகங்கள் உண்டு: அவையாவன:-
ஏர்க்கால் :- (G) இது ஓர் பளுவான மரம் அல்லது இரும்புத்துண்டு. இதன் ஓர் பாகம் கலப்பைச் சட்டத்தில் கோர்க்கப்பட்டு. மற்றோர் பாகத்தில் கலப்பையை இழுப்பதற்கு எருதுகளைப் பூட்டுவதற்காக ஓர்வித உபாயத்தினால் அமைக்கப்பட்டிருக்கிறது.
கடிவாளம். (Bridle)-(H) இது சங்கிலியையாவது. நுகத்தையாவது மாட்டுவதற்கு ஏர்க்காலின் முனையில் இணைக்கப்பட்ட ஓர் சாதனமாகிய கொக்கி.இது சங்கிலியை வெவ்வேறு உயரங்களில் மாட்டும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. சங்கிலியை உயரப் பூட்டினால் கலப்பை ஆழ உழும்: அதைத் தாழப் பூட்டினால் கலப்பை மேலாக உழும்.
சக்கரம் :- இது சாமான்னியமாக இரும்பால் செய்யப்பட்டது. கலப்பையின் முன்னால் ஏர்க்காலுக்கு நோராய்த் தொங்கும்படி மாட்டப்பட்ட ஒர் சட்டத்தின் முனையில் இணைக்கப்பட்டிருக்கிறது.
[சில கலப்பைகளில் சடிவாளம்போன்ற கொக்கி செங்குத் தாகவும் சமகுறுக்காகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இச்சாதனத்தின் உதவியால் ஏர்க்காலைப் பூட்டுவதினால் படைக்காலின் அகலத்தை அதிகரிக்கவும் குறைக்கவும் கூடும். ]
இஷ்டப்படி அதை உயர்த்தவும் தாழ்த்தவும் கூடும். அதை உயர்த்தினால் கலப்பை ஆழ உழும். அதிகமாய் அடியில் தாழ்த்தினாலோ கலப்பை மண்ணைக் கொஞ்சங்கூட வெட்டி பெயர்க்கவே மாட்டாது. அப்போது கலப்பையை ஒரு இடத்திலிருந்து மற்றெரு இடத்துக்குச் சுலபமாய்க் கொண்டுபோகலாம். சக்கரமானது உழவின் ஆழத்தைக் குறைக்கவும் அதிகப்படுத்தவும் அனுகூலமா யிருப்பதுமன்றி கலப்பையை மாடுகள் இழுத்துச் செல்வதற்கு வேண்டிய சக்தியை லகுவாக்குகிறது.
தவிர , சக்கரமுள்ள கலப்பையை உபயோகப்படுத்துவதால், உழுகிறவனுடைய வருத்தமும் குறைவுபடும். ஏனெனில், சீராக அமைக்கப்பட்ட கலப்பையில் சக்கரமில்லாம லிருந்தால் உழும்போது அது பூமிக்குள் வெகு ஆழம் செல்லாமல் தடுப்பதற்குக் குடியானவன் மேழிகளை அடிக்கடி அமிழ்த்தவேண்டும்.
கத்தி :- இது ஏர்க்காலுக்கு நேராக கீழே இணைக்கப்பட்ட ஒர்வித கத்தி. இதன் ஒர்முனை கொழுவுக்குச் சற்று எதிராகவும் கொஞ்சம் உயரமாகவு மிருக்கும். இக்கத்தி மண்ணை செங்குததாய் வெட்டி, அம் மண் கண்டத்தை கொழுவுடன் மற்றப் பக்கத்து மண்ணிலிருந்து வேறுபடுத்துகிறது. ஆயினும் இது சாதாரண உழவுதொழிலுக்கு வேண்டியதில்லை. ஆதலால் படங்களில் இதைக் காட்டவில்லை.
சீமைக்கலப்பையால் உழும்போது அது கெட்டியான தரையினின்று ஒர் மண்பத்தையை வெட்டி மெதுவாய்க் கிளப்பி வழக்கமாய் அதை இடது பக்கத்தினின்றும் வலதுபக்கம் திருப்புகிறது. இவ்வுழவால் செய்யப்படும் வேலையை 4-ம் படத்தில் காண்பிக்கப்பட்டிருக்கிறது. படைச்சால் பத்தை என்று சொல்லப்படும் இம்மட்துண்டு , சாதாரணமாய் ஏறத்தாழ சமகோண வடிவமாகவும் . ஒருபுறம் கொஞ்சம் ஒதுக்கப்பட்டு மிருக்கிறது.