தெரிந்த செடிகள்! தெரியாத பயன்கள்!!
ஒவ்வொரு தாவரமும் ஒரு மருத்துவ பண்பை கொண்டிருக்கும்.சுய மருத்துவம் செய்ய இந்த மருத்துவ குறிப்புகள் உதவிகரமாக இருக்கும்.
இதில் முள் சங்கன் பற்றி காண்போம்.
முள் சங்கன்
இதுவும் அனைத்து பக்கங்களிலும் கிளை பரப்பி உயரமாகவும் படர்ந்து வளரக்கூடியதாகவும் உள்ள புதர்த் தாவரம். ஒவ்வோர் இலைக் கோணத்திலும் நான்கு முள்கள் இருக்கும். எனவேதான் ‘டெட்ராகேன்தா‘ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதுவும் மிகச்சிறந்த வேலித்தாவரம். இதைக்கொண்டு வேலி அமைத்துவிட்டால் எவரும் உள்ளே நுழைய முடியாது. அந்தளவுக்கு அடர்த்தியாகவும் முள்கள் நிறைந்த புதராகவும் காணப்படும். இதன் இலை, வேர், வேர்ப்பட்டை ஆகியவை சிறந்த மருத்துவப் பயன் வாய்ந்தவை.
பயன்கள்
இதன் இலைகள், சளி சம்பந்தமான கப நோய்களை முழுவதுமாக குணமாக்குகின்றன. முள் சங்கன் இலை, தூதுவளை இலை ஆகிய இரண்டிலும் கைப்பிடியலவு எடுத்து நன்கு அரைத்து ஐந்து கிராம் அளவு உட்கொண்டு வந்தால் நாள்பட்ட சளி நோய்கள் குணமாகின்றன. இந்த இலைகளை அம்மைப் புண்கள் மீது பூசினால், எரிச்சல் குணமாகும். கரப்பான் புண்கள் மீது பூசி வர, புண்ணில் உள்ள செதில்கள் நீங்கும்.
பிரசவித்த நாள் தொடங்கி ஏழு நாள்கள் வரை முள் சங்கன் இலை,வேப்பிலை ஆகிய இரண்டையும் ஒரு கைப்பிடியளவு பறித்து வந்து, நன்கு அரைத்து ஐந்து கிராம் அளவு வெறும் வயிற்றில் காலை, மாலை என இரு வேளைகள் சாப்பிட்டு, வெந்நீர் குடித்து வந்தால் கர்ப்பசாய அழுக்குகள் தடையின்றி நீங்கும். தாய்க்கு ஜன்னி இழுப்பு வராது. இம்மருத்துவமுறை நரிக்குறவ மக்களிடம் இன்று வரை புழக்கத்தில் உண்டு. இயற்கையோடு இணைந்து வாழ்ந்துவரும் அம்மக்களில் குழந்தை பிரசவித்த மூன்று மணி நேரத்திலேயே வழக்கமான வாழ்க்கை முறைக்குத் திரும்பி விடுகிற பழக்கம் உள்ளது.
முள் சங்கன் இலை, வேர்ப்பட்டை ஆகியவற்றைச் சம எடையளவு எடுத்துத் தண்ணீர் விட்டு அரைத்து சுண்டைக் காயளவு மாத்திரையாக உருட்டி நிழலில் காய வைத்துக் கொள்ள வேண்டும். காலை, இரவு உணவுக்குப் பிறகு ஒரு மாத்திரை வீதம் உண்டு வந்தால் பக்கவாத நோயால் உறுப்புகளில் ஏற்படும் விறைப்புத்தன்மை குறையும்.
முள் சங்கன் வேர்ப்பட்டையை குடிநீர் செய்து நல்லெண்ணெயுடன் காய்ச்சி தைலமாக வைத்துகொண்டு தலையில் தேய்த்தால் தலையில் ஏற்படும் காளாஞ்சகப்படை, தலைமுடி உதிர்தல், புழு வெட்டு, செம்பட்டை முடி ஆகியவை குணமாகும்.
பக்கவாதம், சரவாங்கிவாதம் போன்ற பெரும் வாத நோயாளிகளின் உடல் முழுவதும் ஒரு மதமதப்பு, எரிச்சல், திமிர் காணப்படும். இதனால் சில நோயாளிகள் கண்ணீர் விட்டு அழுவதும் உண்டு. முள் சங்கன் வேர்ப்பட்டையை நன்கு அரைத்து மூன்று முதல் ஐந்து கிராம் அளவு எடுத்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடித்துவர இந்த நோய்கள் குணமாகும். கன்னப்புற்றுநோயைக் குணமாக்கும் சித்திரமூலக் குளிகை தயாரிக்க முள் சங்கன் இலைச்சாறு பயன்படுத்தப்படுகிறது.
உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து வாதநோய்கள், தோல் நோய்கள், மகப்பேறு நோய்கள், காசநோய், தலையில் தோன்றும் நோய்கள் ஆகியவற்றில் சேர்க்கப்படுகின்ற முள் சங்கன் தாவரம் இன்று அழிவின் விளிம்பில் உள்ளது. இவற்றைப் பயன்படுத்தினால் இத்தாவரத்தைக் காப்பாற்ற முடியும்.
நன்றி
பசுமைவிகடன்