சந்தையில் தற்போது கிடைக்கும் தின்பண்டங்கள் மாவுச் சத்து மற்றும் சர்க்கரை நிறைந்தவைகளாகவும், உடல் நலத்தை பேணும் சத்துக்கள் குறைந்தவையாகவும் உள்ளது. குளிர்பானங்கள், பிஸ்கோத்துகள், மிட்டாய் வகைகள், சிப்ஸ்கள் ஆகியவை அதிக கலோரிகள் உடையதாகவும், பழம், காய்கறிகறிகள், தானியங்கள் மற்றும் விதைகளைவிட சத்து குறைந்ததாகவும் உள்ளது. இவ்வாறு மாவுச் சத்துக்கள் அல்லது சர்க்கரைச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தொடர்ந்து உண்பதால் உடலில் கொழுப்புச் சத்துகள் மற்றும் இரத்தத்தில் குளுகோஸ் (கிளைசெமிக் இண்டெக்ஸ் அட்டவணையை காணவும்.) அளவு அதிகரிப்பதாக அமெரிக்க இருதய நல கூட்டமைப்பின் ஆய்வுகள் அறிவிக்கின்றன.
சிலவகை உணவுப் பொருட்களை 1200 C வெப்பநிலைக்கு மேல் உட்படுத்தப்படும்போது, அக்ரிலோ அமைடு மூலக்கூறுகளை வெளிவிடுவதாக ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் நடந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அக்ரிலோ அமைடு மூலக்கூறுகள் நமது உடலில் புற்றுநோயை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. உருளைக் கிழங்கு சிப்ஸ் மற்றும் ஃபிரெஞ்சு ஃபிரை ஆகிய உணவுப் பொருட்களில் மற்ற உணவுப் பொருட்களை விட அதிகமாக அக்ரிலோ அமைடு மூலக்கூறுகள் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புகளான உலக சுகாதார அமைப்பும் உணவு மற்றும் வேளாண் அமைப்பும், அக்ரிலோ அமைடு உள்ள உணவுகளை தீங்கு விளைவிப்பனவையாக வகைப்படுத்தியுள்ளது. ஆகையால் இவ்வகை உணவுகளுக்கு மாற்றாக உடல் ஆரோக்கியம் பேணும் மற்றும் மேம்படும் உணவுகளை இனம் காண்பது காலத்தின் கட்டாயம் ஆகும். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை உருவாக்கும் அடிப்படை உணவுப் பொருட்களில் தேங்காய் மிகச் சிறந்ததாகும்.
தென்னையை பற்றி…
தேங்காய் என்பது தென்னைமரத்தின் பழம்ஆகும். இதனை தெங்கம் பழம் என்றும் கூறுவதுண்டு. இது கெட்டியாக இருப்பதால், பழமாக இருப்பினும், வழக்கத்தில்காய் என்றே அழைக்கப்படுகின்றது. தேங்காயின் புறத்தே பச்சையாக இருப்பினும், பழுப்பு நிறத்தில் அடர்த்தியாக நார்கள் உள்ளே இருக்கும். இந்த நார்களை உரித்தால் உள்ளே மண்பழுப்பு நிறத்தில் மிகக்கெட்டியான ஓட்டுடன், ஒரு பெரிய கொட்டை போல் இருப்பது தான் தேங்காய். அந்த தேங்காய்க்குள் தேங்காய்நீர் இருப்பதை ஆட்டிப் பார்த்தால் உணரலாம். அளவாக முற்றிய தேங்காயை நெற்று என்பர். அந்த கெட்டியான ஓட்டை உடைத்தால் உள்ளே வெள்ளைநிறத்தில் ஏறத்தாழ 1 செ.மீ பருமனுக்கு பருப்பு காணப்படும். இந்தப் பருப்புதான் சமையலுக்குப் பெரிதும் பயன்படுகிறது. தேங்காய் மிக இளசாக இருந்தால் அதனுள் நிறைய தேங்காய்நீர் இருக்கும். இதனை இளநீர் என்பர்.கோடை காலங்களில் வெய்யிலின் வெக்கையைத் தணிக்க இளநீரை அருந்துவர்.
தேங்காய் அளவுக்கு மீறி முற்றி இருந்தால் உள்ளிருக்கும் தேங்காய் நீர் முற்றிலுமாய் வற்றி விடும், அப்படி மிக முற்றிய தேங்காயை கொப்பரைத் தேங்காய் என்பர். கொப்பரை தேங்காய் எண்ணெய் எடுப்பதற்கு பயன்படுகிறது. கொப்பரையிலிருந்து எண்ணெய் எடுத்த பிறகு உள்ள தேங்காய் கழிவு புண்ணாக்கு ஆகும். புண்ணாக்கு கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுகிறது.
தேங்காய் சிப்ஸ் தயாரிக்கும் முறை
8-9 மாதங்கள் வயதுடைய தேங்காயின் பருப்பு தேங்காய் சிப்ஸ் தயாரிக்கப் பயன்படுகிறது.
நார் எடுத்து, ஓடு நீக்கி, தொலி எடுத்து தூய நீரில் கழுவி, இரண்டாக உடைத்து .75 மிமீக்கும் குறைவான துண்டுகளாக்கி, சுடுநீரில் 50-550C வெப்பநிலையில் 4-5 நிமிடங்கள் வைத்து, சவ்வூடு கரைசலில் வைத்த பிறகு உலரவைத்து 70-800C வெப்பநிலையில் 5-6 மணி நேரம் வைத்தால் தேங்காய் சிப்ஸ் தயார்.
அரசின் நடவடிக்கை:
கைகளால் இவற்றையெல்லாம் செய்வதற்கு காலம் அதிகமாக ஆகிறது.இதனால் அரசு தேங்காய் சிப்ஸ் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் தொழில்நுட்ப செயல்முறைகளை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் அங்கமான தென்னை சார்ந்த ஆராய்ச்சி நிறுவமான ICAR – CPCRI என்றழைக்கப்படும் மத்திய தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
அந்த இயந்திரத்தின் செயல்பாடு குறித்து இங்கு காண்போம்….
- நார் நீக்குதல்:அறுவடை செய்தவுடன் தேங்காய் நார் ICAR – CPCRI –ன் மேம்படுத்தப்பட்ட தேங்காய் நார் நீக்கும் கருவி மூலம் நார் நீக்கப்படுகிறது. இக்கருவி ஒரு மணிக்குள் 350 தேங்காயை நார் உரித்து விடுகிறது.
இதில் இரு ஜோடி உருளைகள் உள்ளது.இதை இயக்கும் மின்சக்தியின் அளவு இரண்டு குதிரை சக்தி தேவை. குடுமி நார் எடுக்க உருளையின் மேல் ஊசி பொருத்தப்பட்டுள்ளது.
- ஓடு எடுத்தல்தேங்காய் உடையாமல் ஓடு நீக்குவதற்காக ICAR – CPCRI-ன் ஓடு நீக்கும் கருவி பயன்படுகிறது. இதில் ஒரு மணிக்கு 50 முறை சுழலும் கத்தி உருளைகள் உள்ளது. செயல்திறன் ஒரு மணி நேரத்தில் 125 தேங்காய் ஓடுகள் வரை நீக்குகிறது.
இந்த கருவியில் தாங்கியில் கத்தி போன்ற உருளை மீது தேங்காயை வைத்து ஓடு நீக்கப்படுகிறது.
- தோல் நீக்குதல்:ICAR – CPCRI-ன் தோல் நீக்கும் இயந்திரம் மூலம் பருப்பின் மேலுள்ள பழுப்பு நிறத் தோலை நீக்க முடியும். இதில் பயன்படும் இயந்திரத்தில் இயங்கும் உருளையின் மீது எமரி காகிதம் வைக்கப்படுவதால் பருப்பிற்கு அழுத்தம் கொடுக்கும் போது மேல்தோல் வந்துவிடுகிறது. ஒரு மணி நேரத்தில் 75 தேங்காய் வரை தோல் நீக்கும் திறன் கொண்டது.
- பருப்பை வெட்டுதல்:தோல் சீவப்பட்ட பருப்பை மூன்று அங்குலம் அளவில் முக்கோண வடிவமாக கத்திகளால் வெட்டப்படுகிறது. அப்போது தான் சிப்ஸிற்கு உகந்ததாக இருக்கும்.
- பருப்பை சிறு துண்டுகளாக்குதல்ICAR – CPCRI பெண்களுக்கு மின் சக்தி மூலம் துண்டுகளாக்கும் இயந்திரம் தையல் இயந்திரத்துடன் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இவ்வியந்திரத்தின் மூலம் ஒரே தடிமனுள்ள சிப்ஸை பெறலாம்.
எதிலும் நவீன தொழில்நுட்பம் நல்ல லாபம் தரும்.
சத்தான உணவை உண்டு ஆயுளை நீட்டிப்போம்!
நோய்க்கு காரணமான உணவை அறவே நீக்குவோம்!
வளமான சந்ததிக்கு வழிகாட்டுவோம்! வாருங்கள்!!
நன்றி
மண்வாசனை