இப்பொழுதெல்லாம் இளைஞர்கள் வேலைகளைக்கூட உதறிவிட்டு இயற்கை விவசாயம், பண்ணைகள், உணவுப் பதனிடல் என்று விவசாயம் சார்ந்த வேலைகளில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதன் தாக்கமோ என்னவோ விவசாயக் குடும்பங்களில் உழவையே தொழிலாகக் கொள்ள புதிய படிப்புகள் என்ன? என்கிற தேடலும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
அந்த வகையில் பெரும்பாலான வர்களின் கவனத்தை ஈர்க்கும் படிப்பு உணவுப் பதப்படுத்துதல். ஒரு காலத்தில் கிராமங்களில், சிறு நகரங்களில் ரைஸ் மில் வைத்திருப்பது ஒரு பெரிய கெளரவம். காலம் மாறிவிட்டது. இனி அந்த இடத்தைப் பிடிக்கப் போவது, கோல்டு ஸ்டோரேஜ் எனும் உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள்தான் என்கின்றனர் பொருளா தார நிபுணர்கள். சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பை விஸ்தரிக்கும் இந்த விவசாயம் சார்ந்த படிப்புக்கு ஏன் திடீர் மவுசு?
உடல்நலம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளும், கர்ப்பிணிப் பெண்களுக்கான புரதச்சத்து நிறைந்த உணவுகளின் தேவைகளும் உணவுப் பதப்படுத்துதல் தொழிலை வளர்ச்சியடையச் செய்து வருகின்றன. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைவது மட்டுமல்லாமல், அதிக வேலை வாய்ப்புகளும் கிடைக்கும்.
புரதச்சத்து நிறைந்த உணவுகளின் தேவைகளும் உணவுப் பதப்படுத்துதல் தொழிலை வளர்ச்சியடையச் செய்து வருகின்றன!
தஞ்சையில் உள்ள இந்திய பயிர்ப் பதன தொழில்நுட்பக் கழகத்தில் உணவுப் பதனீட்டுத் துறை சார்ந்த இளநிலை பி.டெக் (உணவுப் பதனிடும் பொறியியல்), முதுநிலை எம்.டெக்.(உணவு அறிவியல் மற்றும் தொழில்நுற்பம் உணவுப் பதனிடும் பொறியியல்), முனைவர் (பி.எச்.டி.) (உணவுப் பதனிடும் பொறியியல்), மற்றும் பட்டயப் படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன இதுதவிர கோவை விவசாயப் பல்கலைக்கழகத்திலும் விவசாயம் சார்ந்த பல்வேறு நவீன தொழில்நுட்ப பாடப் பிரிவுகள் இருக்கின்றன.
தஞ்சையில் நான்கு வருட பிடெக் படிப்பில் மொத்தம் 60 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்தப் படிப்பில் சேர்வதற்கு இணை நுழைவுத் தேர்வில் (ஜே.இ.இ.) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு மதிப்பெண்களுடன் +2 மதிப்பெண்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் அகில இந்திய தரவரிசை அடிப்படையில் மத்திய சேர்க்கை கலந்தாய்வு முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க மாணவர்கள் தங்களது கலந்தாய்வின்போது இந்திய பயிர்ப் பதன தொழில்நுட்பக் கழகம் மற்றும் இளநிலை உணவுப் பதப்படுத்துதல் பொறியியல் பட்டப்படிப்பின் குறியீட்டைத் தேர்வு செய்ய வேண்டும். இந்தத் துறையில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பல்வேறு உணவுப் பதப்படுத்துதல் நிறுவனத்தில் தொடக்க நிலையிலேயே மாதம் ரூ.30,000/-க்கு அதிகமான ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்பும் கிடைக்கிறது. சுயதொழில் துவங்கவும் வாய்ப்புகள் அதிகம். பட்ட மேல்படிப்பு பயில விரும்பும் மாணவர்கள் எம்.டெக், எம்.பி.ஏ. போன்ற முதுநிலைப் பட்டப் படிப்புகளிலும் சேரலாம்.
இரண்டாண்டு கால முதுநிலை எம்.டெக் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களின் இளநிலையில் வேளாண் பொறியியல், வேளாண் பதப்படுத்துதல் பொறியியல் அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம். ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இதற்கென இந்திய பயிர்ப் பதன தொழில்நுட்பக் கழகத்தால் வாய்மொழித் தேர்வும் நடத்தப்படுகிறது. வாய்மொழித் தேர்வின் மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப் படிப்பின் மதிப்பெண்களும் கணக்கிடப்பட்டு தர வரிசை அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். இவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.
உணவு பதப்படுத்தும் கல்வி, தொழில்கள் பற்றி அறிந்திட…..
www.india.gov.in/agriculture and farmers welfare
Thanks to MANVAASANAI