இதன் தாவரப் பெயர் டெக்டோனா கிரான்டிஸ். இது வெர்பினேசி குடும்பத்தைச் சார்ந்தது. இது மரமாக நெடிதுயர்ந்து வளரும் இலையுதிர் தாவரமாகும். செல் பூச்சிகளின் தாக்குதலை எதிர்த்து நிற்கக்கூடியது. அதாவது செல் பூச்சியினால் இதன் மரக்கட்டை அரிக்கப்படுவதில்லை. சாற்றுக்கட்டை வெண்மையானது, மையக்கட்டை அல்லது வைரக்கட்டை பசுமையானது; மணமுடையது. இத்தாவரத்தின் கட்டை நீண்ட நாட்களுக்கு மணத்துடன் உள்ளது. இது உறுதியானது; நீண்ட காலம் உழைக்கக்கூடியது; மெருகேற்கும் தன்மைபெற்று. இந்தியாவில் தேக்குமரம் நாற்காலி, மேசை, கட்டில் போன்ற பொருட்கள், கட்டிடப் பொருட்கள், ஒட்டுப்பலகைகள், இரயில்வே ஸ்லீப்பர் கட்டைகள் முதலியவற்றை செய்வதற்குப் பயன்படுகின்றன. கப்பல்கள் மற்றும் பாலங்கள் இந்த மரத்தைப் பயன்படுத்தி கட்டப்படுகின்றன.
பொருளாதார முக்கியத்துவம்:
*தேக்குமரம் நீடித்து உழைக்கக்கூடியது. வெப்ப மண்டல நாடுகளில் இது முக்கியமான மரக்கட்டையாகும். பக்குவப்படுத்தப்பட்ட தேக்கு மரக்கட்டை சுருக்கமடைவதில்லை; வெடிப்புறுவதில்லை மற்றும் இதன் வடிவம் மாறுவதில்லை. வீட்டு மரச்சாமான்களைச் செய்வதற்கு இது அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
*கப்பல் படகு முதலியவற்றைக் கட்டுவதற்குப் பயன்படுகின்றன.
*கட்டிடத்தின் உள் அலங்கார வேலைகளுக்கு இது பயன்படுகிறது.
*மரப்பலகைகளைத் தயாரிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.