Skip to content

பின்சம்பா நெல் – பகுதி1

இரகத்தேர்வு, விதையளவு:-

      சம்பா பருவத்திற்கு ஏடிடி 39, ஏடிடி 43, ஏடிடி 46, ஏடிடி 49, கோ 48, கோ 50, ஐ ஆர் 64 மற்றும் ஐ.ஆர். 20 ஆகியவையும், வீரியஒட்டு ரகமான கோ. ஆர்.எச்.3 மற்றும் கோ.ஆர்.எச்.4 ஆகிய இரகங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. மத்திய கால இரகங்களுக்கு ஏக்கருக்கு 16 கிலோ விதையளவும், வீரிய ஒட்டு ரகங்களுக்கு 6 கிலோ விதையளவும் போதுமானது.

விதைநேர்த்தி:-

உயிர் எதிர்காரணி

       ஒரு கிலோ விதைக்கு மேன்கோசெப் -45, 4 கிராம் அல்லது கார்பெண்டாசிம் 2 கிராம் அல்லது குளோரோதலானில் 2 கிராம் அல்லது டிரைசைக்லோசோல் 2 கிராம் அல்லது சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 10 கிராம் என்ற அளவில் நன்றாக கலந்து 24 மணிநேரம் வைத்திருந்து பின்னர் விதைப்பு செய்ய வேண்டும்.

உயிர் உரம்

      ஏக்கருக்கு தேவையான விதையினை 8 சென்ட் நாற்றங்கால் பரப்பில் விதைக்க வேண்டும். 2 பொட்டலம் அசோஸ்பைரில்லம் மற்றும் 2 பொட்டலம் பாஸ்போ பேக்டீரியா நுண்ணுயிர் கலவையை 20 லிட்டர் நீரில் கரைத்து ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகளுடன் 12 மணிநேரம் ஊறவைத்து பின்பு விதைப்பு செய்யவும். விதைகளை வடிகட்டிய பின் மீதமுள்ள நீரை நாற்றங்காலில் பாய்ச்சிவிடவும்.

 நாற்றங்கால் தயாரிப்பு:-

      ஒரு ஏக்கருக்கு 8 சென்ட் நிலம் போதுமானது. 400 கிலோ மக்கிய தொழு உரத்தை பரப்பி நீர் பாய்ச்சி இரண்டு நாட்கள் கழித்து உழுது நன்றாக சேறு கலக்கிய பின்னர் விதைக்கவும்.

 நாற்றங்காலுக்கு டி.ஏ.பி.இடுதல்:-

      நெல் நாற்றங்காலுக்கு கடைசி உழவில் சென்டிற்கு 2 கிலோ டி.ஏ.பி. உரத்தை அடியுரமாக சீராக இடவும். இது வாளிப்பான நாற்றுக்கள் கிடைக்க ஏதுவாகும். நாற்றுவிட்டு 25 நாட்களுக்குள் பறித்து நடவு செய்ய முடியுமானால் மட்டுமே டிஏபி உரத்தினை சென்டுக்கு 2 கிலோ வீதம் இடவும். டி.ஏ.பி. இடாதபட்சத்தில் சென்டிற்கு 6 கிலோ சூப்பர்பாஸ்பேட்டுடன் 800 கிராம் யூரியா கலந்து அடியுரமாக இடவும். நாற்றங்காலுக்கு அடியுரம் இடாத பட்சத்தில் நாற்று பறிப்பதற்கு 10ம் நாட்களுக்கு முன் சென்டிற்கு 2 கிலோ டிஏபி மேலுரமாக இடவும். கடினமான களிமண் பாங்கான நிலங்களில் ஒரு சென்டிற்கு 4 கிலோ ஜிப்சம் வீதம் நாற்றுப் பறிப்பதற்கு 10 நாட்களுக்கு முன் இடவும்.

நாற்றங்காலுக்கு களைக்கொல்லி இடுதல்:

       நாற்றங்கலில் களைகளை கட்டுப்படுத்த 3- வது நாளில் பிரிடிலாகுளோர் + சேப்னர் என்ற களைக்கொல்லியை ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 8 மி.லி. பூட்டாகுளோர் அல்லது 10 மிலி. பெண்டிமெத்லின் அல்லது 5 மி.லி. அனிலோபாஸ். இதில் ஏதாவது ஒன்றினை 2 கிலோ மணலுடன் கலந்து இடவேண்டும். களைக்கொல்லி இடும்போது லேசாக நீர் இருந்தால் போதுமானது. களைக்கொல்லி இட்டபின் மூன்று நாட்களுக்கு நீர் வடிக்காமலும், பாய்ச்சாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 நடவு:-

       குறுகிய கால இரகங்களுக்கு 15 செ.மீ. X 10 செ.மீ. இடைவெளியில் ஒரு சதுர மீட்டருக்கு 66 குத்துக்கள், மத்திய கால இரகங்களுக்கு 20 செ.மீ. X 10 செ.மீ. இடைவெளியில் சதுரமீட்டருக்கு 50 குத்துக்கள், குத்துக்கு 2 முதல் 3 நாற்றுக்கள் வீதம் 3 செ.மீ. ஆழத்தில் நடவு செய்ய வேண்டும்.

மேலுரமிடுதல்:-

       நெல்லில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள மேலுரத்தைக் கீழே குறிப்பிட்டுள்ளவாறு பிரித்து முதல் பாகத்தினை தூர் கட்டும் பருவத்திலும் அடுத்த பாகத்தினை கதிர் உருவாகும் பருவத்திலும் மீதியை பூக்கும் பருவத்திலும் இட வேண்டும்.

(தொடரும்…)

நன்றி!

வேளாண்மை இயக்குநர்
தருமபுரி

 

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj