Skip to content

செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா?

கோயம்புத்தூர் வேளாண் காடுகள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் நாராயணசாமி, பதில் சொல்கிறார்.

“செம்மரம் வளர்ப்புக்கும் விற்பனைக்கும் சில கட்டுப்பாடுகள் இருப்பது உண்மைதான். உங்கள் நிலத்தில் செம்மரம் நடவு செய்தவுடன், கிராம நிர்வாக அலுவலரிடம், கிராமப் பதிவேட்டில் அதைப் பதிவு செய்யும்படி சொல்ல வேண்டும். பொதுவாக வெட்டப்பட்ட மரங்களைத் தடி மரங்கள் என்கிறோம். விவசாயி தனது பட்டா நிலத்திலுள்ள செம்மரங்களை வெட்டுவதற்கு வன அலுவலரிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும். வெட்டிய மரங்கள் இருப்பு வைக்க ‘சொத்துடைமைக் குறி’ (Property Mark) தடி மரங்கள் மீது குறியீடாக (வெட்டிய 15 நாட்களுக்குள்) அடையாளப்படுத்த வேண்டும்.

சொத்துடைமைக் குறி பதிக்கப்பெற்ற தடி மரங்களை வாகனங்களில் எடுத்துச் செல்வதற்கு முன் அனுமதி பெற வேண்டும். இதற்காக 1968-ம் ஆண்டு தமிழ்நாடு தடி மரங்கள் (Timber Transit Rules, 1965) எடுத்துச் செல்லும் விதிகளின்படி ஃபார்ம் II மூலம் வன அலுவலருக்கு உரிய கட்டணத்துடன் விண்ணப்பம் செய்து முன் அனுமதி பெற வேண்டும். வன அலுவலரிடம் எழுத்து மூலமாக அனுமதி பெற்ற பிறகே, தடி மரங்கள் எடுத்துச்செல்ல முடியும்.

செம்மரத்திற்கு வனத் துறையின் தலைவரிடமிருந்து சர்ட்டிஃபிகேட் ஆஃப் ஆர்ஜின் (Certificate Of Orgin) அதாவது செம்மரம் உற்பத்திச் சான்றிதழ், தமிழகத்தின் பூர்விக மரம் செம்மரம்தான் என்கிற சான்றிதழ் பெறப்பட வேண்டும்.

இதிலுள்ள சிக்கல் என்னவென்றால் ஆந்திர அரசு, செம்மரம் எங்கள் மாநிலத்தில் இயற்கையாக வளர்ந்த பூர்விக மரமாகும். தனிமரமாக, செம்மரம் வளர்க்க முடியாது எனவும் மற்ற மாநிலங்கள், தமிழகம் உட்பட யாருக்கும் மேற்படி சான்றிதழ் அளிக்க உரிமை என உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. உண்மையில், ஒரு காலத்தில் ஒருங்கிணைந்த சென்னை மாகாணமாக இருந்த ஆந்திர வனப்பகுதியில்தான் செம்மரங்கள் அதிகளவு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஆந்திர மாநிலம் தங்கள் பகுதியில் மட்டுமே செம்மரம் உள்ளது என்று சொல்லி வருகிறது.

ஆகவே, இயற்கையில் வளர்ந்த செம்மரம் என்கிற பூர்விகச் சான்றிதழ், தமிழகத்தில் வளர்ந்துள்ள செம்மரங்களுக்குக் கிடைப்பதில்லை. நமது விவசாயிகள் தமிழக அரசின் மூலம் ஆந்திர அரசு பூர்விக மரம் எனச் சொந்தம் கொண்டாடும் செம்மரம் உரிமையை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, தமிழகத்திலும் செம்மரங்கள் இயற்கையில் வளரும் என்றும் பூர்விகச் சான்றிதழ் தமிழக வனத்துறை வழங்கவும் அனுமதி பெற வேண்டும்.

மேலும் செம்மரங்கள் அரிய வகைத் தாவரமாக ஐயூசிஎன் (IUCN) என்கிற அமைப்பு சர்வதேச அளவில் குறியீடு செய்துள்ளது. செம்மரங்களைப் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் விவசாயிகளுக்குச் செம்மரம் வெட்டுவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது எனவும் உலகளாவிய மரப்பாதுகாப்பு அமைப்புகள் கோரியுள்ளன. இதனை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆகவே செம்மரங்களை, தடி மரங்களாக வெட்டி ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய அளவில் உள்நாட்டில் விற்பனை செய்ய முடியும். ஒரு டன் மரம் ரூ. 1 கோடிக்கு விற்பனையாகிறது என்பது கவனிக்கத்தக்கது”.

தொடர்புக்கு, செல்போன் : 94433 84746, 99432 84746

TNPSC தேர்வுக்கான புதிய குறுஞ்செயலி ExamRaja

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.ExamRaja

 

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj