3 கிலோ தீவனம் = 1 கிலோ கறி!
வான்கோழிக்கு அரிசி நிறைய கொடுத்தால் கொழுப்பு ஏறும். ஆனால், நெல் கொடுத்தால் கொழுப்பு ஏறுவதில்லை. வான் கோழிக்கு கொழுப்பு கூடினால் முட்டை விடாது. கறிக்காக வான்கோழி வளர்ப்பவர்கள் அடர்தீவனத்துடன், காய்கறி கழிவுகள், கீரை வகைகள் போன்றவைகளைக் கொடுக்கலாம். 3கிலோ தீவனம் உட்கொண்டால் 1 கிலோ எடை உண்டாகிறது. 5 லிருந்து 6 மாத வான்கோழியில் ஆண் கோழி 6 கிலோவும் பெண் 4 கிலோவும் எடையிருக்கும்.
கண்ணுக்குத் தெரியும் கருவின் வளர்ச்சி!
கரு சிதைவடையாமல் இருக்க எப்போதும் முட்டையின் அகன்ற பாகம் மேலே உள்ளவாறு வைக்க வேண்டும். குளிர் சாதன பெட்டியில் அடைக்கான முட்டையை அளவான குளிரில் ஒரு வாரம் வரை சேகரிக்கலாம். அடைவைத்த எட்டாவது நாளுக்கு மேல் முட்டையை எடுத்து இருட்டு அறையில், முட்டையின் அகலமான பகுதியில் பேனா டார்ச் லைட்டை வைத்துப் பார்த்தால்… மஞ்சள் கருவில் கலங்கலாக வளர்ச்சி தெரியும். நாளாக நாளாக குஞ்சுகளின் அசைவும் தெரியும். இதைக் கொண்டு கரு வளரும் முட்டையை மட்டும் கண்டறிந்து அடையில் தொடர்ந்து வைக்கலாம். கூடாத முட்டையை பொரித்து மீண்டும் கோழிக்கே தீவனமாகக் கொடுக்கலாம்.
22 சதவிகிதம் புரதம்!
வான்கோழி இறைச்சியில் கொழுப்பு குறைவாகவும், புரதம் அதிகமாகவும் இருப்பதால்தான் பலராலும் விரும்பப்படுகிறது. பொதுவாக, இறைச்சிகளில் சிவப்பு இறைச்சி, வெள்ளை இறைச்சி என்று இரண்டு வகைகள் உண்டு. ஆடு, மாடுகளின் இறைச்சி சிவப்பு நிறத்தில் இருக்கும். இதில் புரதம் குறைவாகவும் கொழுப்பு அதிகமாகவும் இருக்கும். கோழி மற்றும் மீன் இறைச்சி வெள்ளை நிறத்தில் இருக்கும். வெள்ளை இறைச்சியில் புரதம் அதிகமாகவும் கொழுப்பு குறைவாகவும் இருக்கும். வான்கோழி இறைச்சி வெள்ளை இறைச்சி வகையைச்சேர்ந்தது. இதில் 22 சதவிகிதம் வரை புரதம் உள்ளது. தவிர நன்மை பயக்கும் தீங்கற்ற கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளது.
கோஸை கொடுக்கக்கூடாது!
கோழிகளுக்கு மட்டுமில்லாமல், எந்த கால்நடைகளுக்கும் முட்டைக்கோஸ், காலிபிளவர் இலைகளைப் போடக்கூடாது. மேற்படி பயிர்களில் அதிக ரசாயனம் தெளித்து விளைய வைப்பதால், அந்த இலைகளில் படிந்துள்ள ரசயானம் கோழிகளின் இறப்பு விகிதத்தை அதிகப்படுத்திடும். கால்நடைகள் கருவுறாது.
குறைந்தபட்சம் 20% லாபம்!
வான்கோழி வளர்ப்பு பற்றி அவ்வப்போது பரபரப்பாக செய்திகள் வந்தாலும், ‘அதற்கான சந்தை வாய்ப்பு பெரிய அளவில் இல்லை’ என்கிற செய்தியும் கூடவே வந்துவிடும். இதைப்பற்றி குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் தங்கத்துரையிடம் கேட்டபோது, “வான்கோழியை ‘விழாக்கால கோழி’ என்று சொல்வார்கள். தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு ஆகிய திருவிழா காலங்களில் நல்ல விலை கிடைக்கும். அதாவது… அக்டோபர் முதல் ஜனவரி வரை கிலோ 150 ரூபாய் வரை விற்பனையாகும். மற்ற காலங்களில் 100 முதல் 120 ரூபாய் வரைதான் விலை கிடைக்கும்.
தற்போது, தமிழகத்தில் வான்கோழி இறைச்சியின் நுகர்வு அதிகமாகியிருக்கிறது. அதற்கேற்ப உற்பத்தியும் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப உற்பத்தியும் அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் இருந்தும் குஞ்சுகளைக் கொண்டு வந்து விற்பனை செய்வதால், விலை குறைவாகத்தான் கிடைக்கிறது. வரும் பண்டிகைக் காலங்களில் இதன் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொதுவாக, ஒரு கிலோ வான்கோழி இறைச்சியை உற்பத்தி செய்ய, 3 கிலோ தீவனம் செலவாகும். தற்போது ஒரு கிலோ தீவனம் 22 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்தக் கணக்கீட்டின்படி ஒரு கிலோ இறைச்சிக்கான உற்பத்திச் செலவு 66 ரூபாய். பராமரிப்பு மற்றும் உடல் உழைப்புக்காக 14 ரூபாய். ஆகமொத்தம் 80 ரூபாய் ஆகும். குறைந்தபட்சம் கிலோ 100 ரூபாய்க்கு விற்றாலும் 20 ரூபாய் லாபமாகக் கிடைக்கும். விலை அதிகமாகும்போது லாபம் கூடுதலாகும். அதேபோல பசுந்தீவனங்களைக் கொடுத்து வளர்த்தால், தீவனச் செலவைக் குறைத்து லாபத்தை அதிகப் படுத்தலாம்” என்றவர், “உங்கள் பகுதியில் வான்கோழிக்கான விற்பனை வாய்ப்பு எப்படி இருக்கிறது என்கிற விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொண்டு இதில் இறங்குவது நல்லது” என்கிற ஆலோசனையையும் தந்தார்.
நன்றி
பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral