ஒருநாட்டின் வளர்ச்சி அங்குள்ள விவசாயத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. நாட்டின் முதுகெலும்பாக இருப்பவர்கள் விவசாயிகள் என்றார் மகாத்மா காந்தி.
விவசாயம் செழிக்க வேண்டுமானால் அதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது விவசாயிகளின் முக்கிய கடமையாகும். நல்ல மகசூல் தரும் விதைகளை விவசாயிகள் தேர்ந்தெடுக்க வேண்டும். விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக தரமற்ற விதைகளை வாங்கினால் நாம் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காது.
தங்களது நிலத்தில் விளைந்த தானியத்தை விதை நெல்லுக்கு விவசாயிகள் முன்பு பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது நவீன காலமாகி விட்டதால், விதை நெல் போன்ற தானியங்களை பத்திரப்படுத்தி வைப்பதில்லை.
இதற்காக விதை விற்பனை செய்ய தனியாருக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. விதை விற்பனையாளர்கள் சட்டவிதிகளை பின்பற்றி விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்க வேண்டும். விதை விற்பனை, நர்சரி உரிமம் பெற்று விவசாயிகளுக்கு விற்பனை செய்து வரும் விதை விற்பனையாளர்கள், விவசாயிகளுக்கு விதை பற்றிய முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.
என்னென்ன விதைகள் விற்பனைக்கு உள்ளது என்ற விவரம் அடங்கிய பட்டியலை விவசாயிகள் பார்க்கும் படி வைக்க வேண்டும். என்னென்ன விதைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன் ரகம், குவியல் எண், விலை என்ற விவரத்தையும் தெரியப்படுத்த வேண்டும். விதைகளின் காலாவதி தேதியையும் அவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
இருப்பில் உள்ள விதை குவியல்களை ரகம் வாரியாக, குவியல் வாரியாக, அடுக்கி வைக்க வேண்டும். விதைகளை உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் இல்லாத இடங்களில் தனியாக இருப்பு வைத்து பராமரிக்க வேண்டும். விற்பனைக்கு வைத்திருக்கும் விதை குவியல்களுக்கு தரப்பரிசோதனை அறிக்கை வைத்திருக்க வேண்டும். தரமற்ற விதைகளை விற்பனை செய்ய கூடாது.
நல்ல முளைப்புத்திறனுடன் தேவையான பயிர் எண்ணிக்கை தந்து, சீரான வளர்ச்சியுடன் ஒரே வேளையில் பூத்து, முதிர்ந்து, ஒரே சமயத்தில் அறுவடை செய்ய ஏதுவான, கலப்பிடமில்லாத, அதிக மகசூல் தரக்கூடிய தரமான விதைகளையும், தரமான நாற்றுக்களையும் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
விவசாயிகளும் விதை உரிமம், நர்சரி உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் மட்டுமே தரமான விதைகளை வாங்கி பயன்பெற வேண்டும். அதன்மூலம் நாமும் பயனடைவோம், நாடும் பயன்பெறும்.
நன்றி
தமிழ் முரசு