’ரசாயனமோ, பூச்சிக்கொல்லியோ தெளிக்கப்படாத நிலத்தில்தான் இயற்கை விவசாயத்தை ஆரம்பிக்க வேண்டும்’ என்றே பலரும் விரும்புவர். இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம், எப்படி இருந்தாலும், அதைச் சீரமைத்து இயற்கை வேளாண்மை மூலம் வெற்றிகண்டு வருகிறார்கள். இயற்கை விவசாயிகள். இந்த வகையில் கரடுமுரடான கல் நிலத்தைச் சமன்படுத்தி. . . அதற்கு 2,000 அடி தொலைவில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து, இயற்கை விவசாயத்துக்கு பதியம் போட்டுள்ளார், விவசாயி கே. தங்கமுத்து.
திருப்பூர் மாவட்டம் கண்டியன்கோவில் அடுத்துள்ள செங்கோடம்பாளையம் கிராமத்தில் உள்ளது. தங்கமுத்துவின் 12 ஏக்கர் பூர்வீகத் தோட்டம். கரும்பு, வெங்காயம், பப்பாளி என பணப்பயிர் சாகுபடியை 7 ஏக்கரிலும் நிரந்தர வருமானம் கொடுக்கும் தென்னையை 5 ஏக்கரிலும் பயிர் செய்துள்ளார். இத்தனை வெள்ளாமையும் கிணற்றுப் பாசனத்தை நம்பியிருக்க, புதிதாக இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்கி, இயற்கை முறையில் தேக்கு பயிரிட்டு, ஊடுபயிராக கத்திரி நடவு செய்திருக்கிறார். மனைவி லட்சுமியுடன் கத்திரிக்காட்டுக்குப் பாசனம் செய்துகொண்டிருந்த தங்கமுத்துவைச் சந்தித்தோம்.
பாய்ச்சல் நிலமான மேய்ச்சல் நிலம்!
லாகவமாய் வாய்க்கால் தண்ணீரை மடை மாற்றிவிட்டு, மண்வெட்டியை வரப்பில் வைத்து விட்டு பேசத்தொடங்கினார். “நாங்க பரம்பரையா விவசாயம் குடும்பம் எப்பவும், விவசாயம் செய்றது போக மேய்ச்சலுக்காக சில ஏக்கர் நிலம் வெச்சிருப்போம். அந்த தரிசு நிலத்துல, தானாகவே முளைக்கும் கொழுக்கட்டைப் புல்லை மேய்ஞ்சு கால்நடைகள் சிறப்பா வளரும். அதுக்காகத்தான் இந்த ரெண்டு ஏக்கரை வாங்கினேன். எனக்கு புத்தங்கள் படிக்கறதுல ஆர்வம் உண்டு. பசுமை விகடன் முதல் இதழ்ல இருந்து வரி விடாம படிச்சுக்கிட்டு இருக்கேன். அதுல வெளியாகிற அறிவிப்புகளைப் பார்த்து கருத்தரங்குகள்ல கலந்துக்குவேன். ஒரு கட்டத்துல இயற்கை விவசாயம் பண்ணனுங்கிற தாக்கம் ஏற்பட்டுச்சு.
பரம்பரையா விவசாயம் செய்ற பன்னெண்டு ஏக்கர்ல முழுமையா இயற்கை விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை. கரும்பு, வெங்காயப் பயிர்களுக்கு மூட்டை, மூட்டையா உரத்தையும் லிட்டர் கணக்குல பூச்சிக்கொல்லியையும் போட்டிருக்கோம். அந்த விஷமெல்லாம் போய், மண் பழைய நிலைமைக்கு திரும்ப பல வருஷங்களாகும். அதுவரைக்கும் காத்திருக்க எனக்கு பொறுமையில்லை. அதனாலதான் சிறுசும், பெரிசுமாக கூழங்கல்லா குவிஞ்சிருக்கிற இந்த மேய்ச்சல் நிலத்தை இயற்கை விவசாயத்துக்குத் தேர்ந்தெடுத்தேன்” என்று தங்கமுத்து தொடர்ந்தார்.
“கரட்டான்கூட முட்டை வெக்க தயங்குற இந்த சரளைக் காட்டுல கத்திரியும், தக்காளியும் வெக்க போறானாம். பொழப்பத்த வேலை என்று பலரும் கேலி பேசுனாங்க. ‘இந்தக் கல் நிலத்துல கிணறுதான் தோண்ட முடியுமா. . . அப்படியே தோண்டுனாலும், தண்ணி கிடைக்குமா வெள்ளாமைக்கு மடை திருப்பினால், மண்ணுக்கு பதிலா மம்முட்டில கூழாங்கல்லுதான் வரும், அதைவெச்சு எப்படி மடை அடைப்பேனு கேள்வி எழுப்பினாங்க. அவங்க பேச்சுக்கெல்லாம் நன் அசரலை. கொள்ளும், கிளுவையும் கார்த்திகைச் செடியும் வர்ற நிலத்துல மத்த வெள்ளாமையும் வரும்னு நம்பினேன். வல்லுநர்கள் சிலர்கிட்டே ஆலோசனையும் கேட்டேன். மேல் மட்டத்தில்தான் கூழாங்கற் குவியல் இருக்கு. கீழே போகப்போக மண்வளம் இருக்கு. தைரியமா இறங்கு’னு நம்பிக்கைக் கொடுத்தாங்க.
இந்த நிலத்துக்கு எங்க தோட்டத்துக்கும் 2,000 அடி தூரம்தான். அந்தத் தோட்டத்துல ரெண்டு நிறந்த வெளிக்கிணறும், 500 அடி ஆழத்துல ஒரு போர்வெல்லும் இருக்கு. ஒன்றரை லட்ச ரூபாய் செலவுல போர்வெல்லுல இருந்து குழாய் பதிச்சு, இந்த நிலத்துக்கு தண்ணி கொண்டு வந்தேன். அடுத்து மராமத்து வேலைகளைத் தொடங்கினேன்.
ஆரம்பத்துல ஒரு ஏக்கரை மட்டும் சரி பண்ணி இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யலாம்னு முடிவெடுத்தோம். ஆனா, வீட்ல இருக்கிறவங்க, காய்கறி வெள்ளாமைங்கிற பரிசோதனை எல்லாம் வேண்டாம், அதுக்கு பதிலா ஏதாவது ஒரு மரத்தை நடுவோம்’னாங்க கோயம்புத்தூர் வனக்கல்லூரிப் பேராசிரியர் கிட்ட ஆலோசனை கேட்டேன். மரப்பயிர் நடுங்க. அதுல ஊடுபயிரா காய்கறிய போடுங்க. அஞ்சு வருஷம் வரை வெள்ளாமை எடுக்கலாம்’னு அவர் சொன்னது எல்லாருக்கும் பிடிச்சிடுச்சு.
பூசணி கொடுத்த புத்துணர்வு!
உடனே வேலையைத் தொடங்கிட்டேன். பத்து டன் தொழுவுரத்துடன், 5 டன் கோழி எருவைக் கலந்து நிலம் முழுக்க இறைச்சு விட்டேன். தொடர்ந்து நாலடி இடைவெளியில் 250 அடி நீளத்துக்கு 18 வாய்க்காலோட ஒரு கரையில் தேக்கையும், மறுகரையில் தர்பூசணியையும் நடவு செஞ்சேன். பஞ்சகவ்யாவை பாசனத்துல கலந்துவிட்டதுல ஜம்முனு தழைஞ்சு கொடிபடர்ந்திடுச்சு. மூலிகைப் பூச்சிவிரட்டி, மண்புழு உரம்னு இடுபொருட்களை நானே தயாரிச்சு கொடுத்ததுல நாலு டன் தர்ப்பூசணி கிடைச்சது. அறுவடை முடிஞ்சதும், கொடிகளை அப்படியே மட்க வெச்சு, நிலத்துக்கு உரமாக்கிட்டேன்.
தர்பூசணி தங்கம் போல் விளைஞ்சதும் வீட்டினருக்கு மகிழ்ச்சியும் கூடவே நம்பிக்கையும் வந்திடுச்சு. தர்பூசணிக்கு அடுத்த பயிரா தக்காளி நடவு செய்தேன். அதுக்கும் இயற்கை முறையில் பண்டுதம் செஞ்சதுல காய்ப்பு பின்னி எடுத்திச்சு. 20 டன்னுக்கு மேல மகசூல் எடுத்தேன். தொடர்ந்து அடியுரம் கொடுத்து நிலத்தை ஊட்டமேற்றி, இப்ப மூணாவது வெள்ளாமையா வரிக்கத்திரி நடவு செய்திருக்கிறேன். அதுவும் காய்ப்புல இருக்கு. தேக்கு நட்டு ஒண்ணரை வருஷத்துல ஊடுபயிரா மூணு வெள்ளாமை எடுத்தாச்சு” என்ற தங்கமுத்து, கத்தரிச் செடிகளைக் காட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார்.
பஞ்சகவ்யா பாதுகப்பு!
”வாய்க்கால் வரப்புல ஊடுபயிரா கத்திரியை நடவு செய்திருக்கிறதால செடிக்குச் செடி 2 அடி இடைவெளிதான் விட்டிருக்கோம். ஆனா, வாய்க்கால் அகலமா இருக்குறதால செடிகளுக்கு நல்ல காத்தோட்டம் கிடைக்குது. இது மேய்ச்சல்காடுங்கிறதால அக்கம்பக்கத்துல வேற பயிர்கள் ஏதும் இல்லை. அதனால பூச்சித்தொல்லையும் இல்லை. இதுவரைக்கும் கத்திரிக்கு எந்தப் பூச்சிக்கொல்லியையும் தெளிக்கவில்லை. பூ எடுத்த சமயத்தில இரண்டு முறை பஞ்சகாவ்யா தெளிச்சதோடு சரி. அதுக்கே பூச்சிகள் வரலை. 15 நாட்களுக்கு ஒரு தரம் பாசனத்தண்ணியில பஞ்சகவ்யாவைக் கலந்து விட்டுடுவேன்” என்ற தங்கமுத்து நிறைவாக,
“கத்திரி நட்ட 60-ம் நாள் காய்ப்புக்கு வந்துடும். காய்ப்புக்கு வந்ததுல இருந்து 7 மாசம் வரைக்கும் காய்க்கும். இப்போதைக்கு ஒரு கிலோ கத்திரி 15 ரூபாய்க்கு விலை போகுது. காங்கேயம், வெள்ளாக்கோவில் தினசரி மார்க்கெட்டில்தான் விற்பனை செய்றேன்.
இதுவரைக்கும் 1,500 கிலோ வித்தாச்சு. இன்னும் 4 ஆயிரத்து 500 கிலோ வரை மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். மொத்தமா 6 டன் மகசூல் கணக்கு வெச்சுக்கிட்டு ஒரு கிலோவுக்கு சராசரி விலையா பத்து ரூபாய்னு வெச்சுக்கிட்டா . . . மொத்தமா 60 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதுல செலவு போக 50 ஆயிரம் ரூபாய் லாபமாநிக்கும். அது ஒருபக்கம் இருந்தாலும், அத்தனை பேரு ஏச்சு பேச்சையும் மீறி. . . கூழாங்கல் குவியல் மண்டிக்கிடந்த மேட்டுக்காட்டுல சாகுபடியை ஆரம்பிச்சு. . . இயற்கை விவசாயத்துல எந்த மாதிரி நிலமா இருந்தாலும், பிரமாதமா காய்கறி சாகுபடி செய்ய முடியும்னு நிரூபிச்சதே பெரிய சந்தோஷம்தான். அடுத்த வெள்ளாமையா சின்ன வெங்காயம் நடவு போடலாம்னு இருக்கோம்” என்று சொல்லி விடைகொடுத்தார்.
தேக்குக்கும் கவாத்து அவசியம்!
கூழாங்கல் நிலத்தில் தேக்கு சாகுபடி செய்வது குறித்து, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரிப் பேராசிரியர் டாக்டர். பார்த்திபனிடம் கேட்டபோது, “மணல் கலந்த கூழங்கல் நிலத்தில் தேக்கு நன்றாகவே வளரும். ஆறடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழத்தில் குழியெடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி குழி எடுக்கும்போது, ஏக்கருக்கு 1,200 குழிகள் வரை எடுக்கலாம். ஒவ்வொரு குழியிலும் தலா 2 கிலோ வண்டல் மண், தொழுவுரம் ஆகியவற்றைக் கலந்து கொட்டி, கன்றுகளை நடவு செய்து. . . மேல் மண்ணைக் கொண்டு மூட வேண்டும்.
மாதம் ஒரு முறை தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட உரத்தை தேக்கு மரங்களுக்கு கொடுத்து பாசனம் செய்ய வேண்டும். மழை இல்லாத காலங்களில் வாரம் இரண்டு முறை ஒன்றுக்கு தலா 15 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, கட்டாயம் பக்கக்கிளைகளை ஒடித்து கவாத்து செய்ய வேண்டும். கிளை ஒடிக்கும்போது ஏற்படும் காயம் வழியே நோய்கிருமிகள் புகுந்து சேதப்படுத்த வாய்ப்புண்டு. அதனால், கிளைகள் ஒடித்த இடத்தில் வேப்பெண்ணெய் தவி விட வேண்டும்.
தேக்குக்கு இடையில் 5 ஆண்டுகள் வரை ஊடுபயிர் சாகுபடி செய்யலாம், நடவு செய்த அத்தனை மரங்களும் ஒரே சீராக வளராது. அதனால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு, சுமரான வளர்ச்சியுள்ள மரங்களை கொஞ்சம் கொஞ்சமாகக் கழித்துக் கொண்டே வர வேண்டும். அப்படிக் கழிக்கும் மரங்களையும் விற்பனை செய்ய முடியும். நன்கு வளர்ந்து வரும் மரங்களை சரியான முறையில் பாசனம் மற்றும் உரம் கொடுத்துப் பராமரித்து வந்தால் பதினைந்து, இருபது ஆண்டுகள் கழித்து நல்ல வருமானம் பெற முடியும்” என்று சொன்னார்.
தொடர்புக்கு,
கே. தங்கமுத்து,
செல்போன்: 98650-72886
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli