Skip to content

கின்னஸ் சாதனை படைக்கும் பிரம்மாண்ட வளர்ப்பு பூனைகள்

கின்னஸ் சாதனை படைக்கும் பிரம்மாண்ட வளர்ப்பு பூனைகள்

          வீட்டில் வளர்க்கப்படும் பூனை வகைகளிலேயே மிகப்பெரியவை மெய்ன் கூன் (Maine Coon) வகை பூனைகள் தான். இப்பூனைகள் அமெரிக்காவின் மெய்ன் மாகாணத்தை பூர்வீகமாகக் கொண்டவை. 1985 ஆம் ஆண்டிலிருந்து மெய்னின், மாகாண பூனையாக இவை உள்ளன. இப்பூனைகளை கூன் பூனை, மெய்ன் பூனை, அமெரிக்க நீள முடி பூனை, அமெரிக்க கூன் பூனை, அமெரிக்க காட்டு பூனை என பல பெயர்களில் அழைக்கின்றனர். ஆனாலும் இவற்றின் பிரம்மாண்டத்தை பார்த்து பெரும்பாலானவர்கள் அழைப்பது ஜென்டில் ஜெயன்ட் (Gentle Giant) என்னும் செல்லப் பெயரால் தான்.
             மெய்ன் கூன்கள் மென்மையான பளபளப்பான நீள முடிகளைக் கொண்டவை. இவற்றின் உடலிலுள்ள இரண்டடுக்கு முடிகள் தண்ணீர் ஊடுருவாத தன்மை கொண்டவையாக இருப்பதோடு, குளிரிலிருந்தும் பாதுகாப்பளிக்கின்றன. மனிதர்களுடன் மிகவும் நட்பாக பழகுவதோடு, புத்திசாலித்தனமாகவும் இப்பூனைகள் உள்ளதால், நாய்க்கு மாற்றாக பெரும்பாலானவர்கள் இவற்றை வளர்க்க விரும்புகின்றனர். இந்தியாவில் மெய்ன் கூன் பூனை குட்டிகள் ரூபாய் 40,000 முதல் 45,000 வரை விற்கப்படுகின்றன.
             25 முதல் 40 செ.மீ உயரம் கொண்ட இப்பூனைகள் 3 அடி நீளம் வரை வளரக்கூடியவை. மெய்ன் கூன்களில் ஆண் பூனைகள் 5.9 முதல் 8.2 கிலோ எடையும், பெண் பூனைகள் 3.6 முதல் 5.4 கிலோ எடை கொண்டவையாகவும் இருக்கும்.
            ஹிப் டிஸ்ப்ளேசியா (Hip Dysplasia) என்னும் இடுப்பு எலும்பு பாதிப்பு நோய் மெய்ன் கூன் பூனைகளில் மிக அதிகமாக உள்ளது. தரவுகளின் படி இந்நோயினால் பாதிக்கப்படும் பூனைகளில் 99.1% மெய்ன் கூன்கள் தான். அத்துடன் இதயம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளாலும் இவை
பாதிக்கப்படுகின்றன.
கின்னஸ் சாதனைகள்
            இதுவரை உலகில் வாழ்ந்த பூனைகளிலேயே மிகவும் நீளமான பூனை என்னும் கின்னஸ் சாதனை படைத்தது ஸ்டீவி என்னும் மெய்ன் கூன் வகை பூனை தான். இதன் நீளம் 4.4 அடி. புற்றுநோய் காரணமாக 2013 ஆம் ஆண்டு ஸ்டீவி இறந்து விட்டது. தற்போது உலகில் வாழும் பூனைகளில், நீளமான பூனை என்னும் சாதனையை இத்தாலியைச் சேர்ந்த 3.11 அடி நீளம் உள்ள பேரிவெல் என்னும் மெய்ன் கூன் வகை பூனை பெற்றுள்ளது.
அமெரிக்காவின் தொன்மையான பூனையினம்
             இப்பூனைகளின் பிரம்மாண்ட உருவத்தை பார்த்து, இவை எப்படி உருவாகியிருக்கும் என்பது பற்றி பல விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. நார்வே காட்டு பூனை அல்லது சைபீரிய காட்டு பூனையின் வழித்தோன்றல்களாக இப்பூனைகள் இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். மேலும் சிலர் வைக்கிங் மனிதர்கள், நார்வே காட்டுப் பூனையை அழிந்துபோன ஒரு வளர்ப்பு பூனை இனத்துடன் கலப்பினம் செய்ததால், இந்த பூனைகள் உருவானதாக கூறுகின்றனர். இன்னும் சிலர் ரக்கூன்களையும், பூனைகளையும் இணைத்து உருவாக்கிய கலப்பினம் இது என்று கூறுகின்றனர். எப்படி இருந்தாலும் அமெரிக்காவின் மிகப் தொன்மையான பூனை இனம் இது என்பதில் ஐயமில்லை.
முனைவர். வானதி பைசல்,
விலங்கியலாளர்

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj