Skip to content

பெல்டட் கேலவே – ஓரியோ மாடுகள்

300 ஆண்டுகளுக்கு முன்பு இறைச்சிக்காக ஸ்காட்லாந்தில் உருவாக்கப்பட்ட இனம் இது. ஸ்காட்லாந்தின் பூர்வீக மாடாகிய கேலவே மாட்டிலிருந்து இந்த கலப்பின மாட்டை உருவாக்கியுள்ளனர். 1921 ஆம் ஆண்டு இது தனி இனமாக  அங்கீகரிக்கப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, இங்கிலாந்து, நியூஸிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இவை ஏற்றுமதி செய்யப்பட்டன. இன்று அந்த நாடுகளிலும் குறிப்பிட்ட அளவு பெல்டட் கேலவே (Belted Galloway) மாடுகள் உள்ளன.

கொம்புகளற்ற இந்த கருநிற மாடுகளின் வயிற்றுப் பகுதியில் அமைந்துள்ள வெண்பட்டை நிறம் இதற்கு தனித்துவத்தை அளிக்கிறது. இந்நிற அமைப்பு பார்ப்பதற்கு ஓரியோ பிஸ்கட்டை போன்ற தோற்றத்தை கொண்டிருப்பதால், அமெரிக்காவில் இவற்றை ஓரியோ மாடுகள் என்றழைக்கின்றனர்.

இம்மாடுகள் 15 முதல் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. வளர்ந்த மாடுகள் 400 முதல் 955 கிலோ எடை வரை இருக்கும். ஒரு மாடு 1,20,000 முதல் 3,20,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

உயர்தரமான இறைச்சி

அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இம்மாடுகள், கன்றுகளையும் மிகச் சிறப்பாக பேணுகின்றன. அது மட்டுமின்றி வெறும் புல்லையும் வைக்கோலையும் மட்டும் உண்டு, மிகவும் உயர்தரமான இறைச்சியை கொடுக்கின்றன. இக்காரணங்களால் பலரும் இவற்றை விரும்பி வளர்க்கின்றனர்.

இவற்றின் இறைச்சியில், கோழி மற்றும் மீனில் உள்ள அளவு மிகக் குறைந்த அளவு மட்டுமே கொழுப்பு உள்ளது. மேலும் பெல்டட் கேலவே மாடுகளின் இறைச்சி மிகவும் மென்மையாகவும் சுவையாகவும் உள்ளதால், 2003-ல் நடந்த சிட்னி ராயல் ஷோவில் மிகச் சிறந்த மாட்டிறைச்சி என்னும் பரிசை பெற்றுள்ளது. அரை கிலோ இறைச்சியின் விலை 1920 ரூபாய்.

மினியேச்சர் பெல்டட் கேலவே

இவை பெல்டட் கேலவே மாடுகளை, சிறிய வகை மாடுகளான டெக்ஸ்டர் இன மாடுகளுடன் கலப்பினம் செய்து உருவாக்கப்பட்டுள்ள குட்டியான மாடுகளாகும். இறைச்சியுடன், பாலையும் கொடுக்கக்கூடிய மாடுகளாக இந்த மினியேச்சர் கேலவேக்கள் உள்ளன. மிகவும் சிறிதான இம்மாடுகளுக்கு குறைந்த அளவு உணவும், சிறிய இடமும் போதுமாக உள்ளதால் இப்போது பலரால் விரும்பி வளர்க்கப்படுகின்றன. ஒரு மாட்டின் விலை 1,12,000 முதல் 2,80,000 ரூபாய்.

முனைவர். வானதி பைசல்,

விலங்கியலாளர்.

Leave a Reply

Author