Vivasayam | விவசாயம்

உலக மண்வள தினம்

உலக மண்வள தினம்

உலகத்தின் அனைத்து உயிர்களும் வாழ்வதற்கான இருப்பிடமாக விளங்கும் இந்த மண்ணை, நாம் அழிவுப்பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறோம் என்பதை மறுப்பதற்கில்லை.

அதில் முக்கியமானதாக, மண்ணில் இடப்படும் ரசாயன உரங்களும், பாலித்தீன் பொருட்களும் இருக்கின்றன. ரசாயன உரங்கள், மண்ணில் இயற்கை வளத்தை முழுமையாக பாதித்து, மண்ணில் உள்ள சத்துக்களை குறைத்து, அதற்கு நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அனைத்தையும் அழித்து, இறுதியில் மண்ணை மலட்டு தன்மை கொண்டதாக மாற்றி விடுகிறது.

அதே போல இந்த பாலித்தீன் பொருட்கள், மண்ணுக்குள் புதைந்து, மட்கிப் போகாமல், மழை நீரையும் பூமிக்குள் இறங்க விடாமல் செய்து, மண்ணின் வளத்திற்கு ஆபத்தான வேலையைச் செய்கின்றது. அதோடு சுற்றுச்சூழலுக்கும் இந்த பாலித்தீன் பொருட்கள் பேராபத்தாக விளங்குகின்றன.

தாவரங்களுக்கு மண்ணில் இருந்து, நைட்ரஜன், மக்னீசியம், கந்தகம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீசு, தாமிரம், குளோரின், மாலிப்டினம், துத்தநாகம், போரான் போன்ற சத்துக்கள் நேரடியாகக் கிடைக்கின்றன. இவை அனைத்தும் ரசாயன உரங்களால் அழிவை சந்திக்கின்றன. எனவே மக்கள் அனைவரும், மண்ணில் தூவும் ரசாயன உரங்களையும், மண்ணில் வீசும் பாலித்தீன் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.

மண்ணின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்தான், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5-ந் தேதி, ‘உலக மண் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், மண்ணில் வாழும் மனிதர்களாகிய நாம் அனைவரும், அதை காக்கும் பணியை மேற்கொள்ள உறுதி ஏற்போம். மண்வளத்தை பாதுகாத்து… நம் சந்ததிகளை காப்போம்…

 

 

Exit mobile version