Skip to content

தாவரங்களை மட்டும் உண்ணும் மெகல்லன் வாத்துக்கள்

சிலி, அர்ஜென்டினா மற்றும் போல்க் லேண்ட் தீவுகளின் புற்கள் நிறைந்த பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக மெகல்லன் வாத்துக்கள் வாழ்கின்றன. இவற்றிற்கு மேட்டு நில வாத்து (Upland Goose) என்றொரு பெயரும் உண்டு. இவற்றின் விலங்கியல் பெயர்  குளோயிபேகா பிக்டா (Chloephaga picta). இவை ஆறு, கடல் மற்றும் குளங்களின் அருகே தங்கள் கூடுகளை அமைக்கின்றன.

இவ்வகை வாத்துக்களில் ஆண், பெண் வேறுபாட்டினை மிக தெளிவாக காண இயலும். ஆண் வாத்துக்களின் தலை மற்றும் மார்பு பகுதி வெண்ணிறமாகவும், கால்கள் கருநிறமாகவும் உள்ளன. பெண் வாத்துக்களில் தலை மற்றும் மார்பு பகுதி சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலும், கால்கள் மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்திலும் காணப்படுகின்றன. மெகல்லன் வாத்துகள் 60 முதல் 72.5 செ. மீ நீளமும், 3.5 முதல் 4.5 கிலோ எடையும் கொண்டவையாக காணப்படும்.

இவ்வாத்துகள் தாவரங்களை மட்டுமே உட்கொண்டு வாழ்கின்றன. பெரும்பாலும் புல்வெளி பகுதிகளில் கூட்டம் கூட்டமாக இப்பறவைகள் புற்களை உண்பதை காண இயலும். விதைகள், இலைகள், தண்டுகள் போன்றவற்றையும் இவை உண்கின்றன. மெகல்லன் வாத்துகள் பயிர்களை உண்டு அழித்து விடுகின்றன என்றொரு கருத்தும் உண்டு. ஆனால் வயல்வெளிகளில் அறுவடைக்குப் பின்னரே இவை கூட்டம் கூட்டமாக வருகின்றன. எனவே பயிர்களுக்கு இவ்வாத்துக்களால் பெரியளவில் பாதிப்பு இல்லையென்று பெரும்பாலான விவசாயிகள் கூறுகின்றனர்.

ஒரே ஒரு துணையுடன் வாழும் மெகல்லன் வாத்துகள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் இனமுதிர்ச்சி அடைகின்றன. ஒரு நேரத்தில் ஐந்து முதல் எட்டு முட்டைகளையிட்டு, 30 நாட்கள் வரை அடைகாக்கின்றன. இளம் குஞ்சுகள் ஒன்பது முதல் 10 வாரங்களில் பறக்கத் துவங்குகின்றன.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அர்ஜென்டினா, மெகல்லன் வாத்துகளை சட்டபூர்வமாக வேட்டையாட அனுமதி அளித்தது.  அதன் பின்னர் எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக நடைபெற்ற வேட்டையாடுதலின் காரணமாக இவற்றின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அரசாங்கம், 2008 ஆம் ஆண்டு இவ்வாத்துக்களை அருகிய இனமாக (Endangered) அறிவித்து வேட்டையாடுதலை தடைசெய்தது. அதன் பின்னர் இவற்றின் எண்ணிக்கை படிப்படியாக உயரத் தொடங்கி, இன்று பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தால் அழிவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள் (Least concern) வரிசையில் இவை சேர்க்கப்பட்டுள்ளன.

முனைவர். வானதி பைசல், விலங்கியலாளர்

Leave a Reply

Author