Skip to content

செம்மறி ஆட்டுக்குட்டிகளை போன்று தோற்றமளிக்கும் பெட்லிங்டன் டெரியர் நாய்கள்

வடகிழக்கு இங்கிலாந்தின் நார்த்அம்பர்லான்ட் நகரத்திலுள்ள, பெட்லிங்டன் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட நாய்கள் இவை. இதன் காரணமாகவே இவற்றை பெட்லிங்டன் டெரியர் (Bedlington Terrier) என்று அழைக்கின்றனர். அப்பகுதியிலுள்ள சுரங்கத் தொழிலாளர்கள் இந்நாய்களை விரும்பி வளர்த்து வந்துள்ளனர்.

முதன் முதலில் இந் நாய்களை ஜிப்ஸி நாய்கள் என்றே அழைத்துள்ளனர். அதன் பின்னர் இங்கிலாந்தின் ரோத்பரி நகர பிரபு இந்நாய்களை மிகவும் விரும்பி வளர்த்ததால்,  இவற்றை ரோத்பரி டெரியர் என்று அழைத்தனர். இவை பார்ப்பதற்கு செம்மறி ஆட்டுக்குட்டியை போன்று தோற்றமளிப்பதால் இவற்றிற்கு ரோத்பரியின் ஆட்டுக்குட்டி (Rothbury’s lamb) என்றொரு பெயரும் உண்டு. 1825 ஆம் ஆண்டுக்கு பின்னரே இவற்றை பெட்லிங்டன் டெரியர் என்று அழைக்க தொடங்கியுள்ளனர்.

சிறிய வகை நாய்களான இவை மிகச் சிறப்பாக நீச்சல் அடிக்கும் திறன் பெற்றவை. பெட்லிங்டன் டெரியர் நாய்களை பெரும்பாலும் நாய்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஓட்டப்பந்தயத்துக்காக வளர்க்கின்றனர்.

பெட்லிங்டன் டெரியர் நாய்கள் 41 முதல் 44 செ. மீட்டர் உயரமும், 7.7 முதல் 10.4 கிலோ எடையும் கொண்டவையாக உள்ளன. இவை ஒரு நேரத்தில் மூன்று முதல் ஆறு குட்டிகளை ஈனுகின்றன. இவற்றின் ஆயுட்காலம் 13.5 ஆண்டுகள்.

நாய்க்குட்டிகளின் தரத்தைப் பொறுத்து 1500 முதல் 2800 அமெரிக்க டாலர் வரை விற்கப்படுகின்றன. இவ்வகை நாய்கள் முடியை அதிக அளவில் உதிர்ப்பதில்லை. ஆனாலும் இறந்த முடிகளை நீக்குவதற்காக, வாரம் ஒரு முறை முடியை சீர்திருத்துவது (Grooming) அவசியம்.

முனைவர். வானதி பைசல் 

விலங்கியலாளர்

Leave a Reply

Author