Vivasayam | விவசாயம்

அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள ஜமைக்காவின் தேசிய பழம் – அக்கி ஆப்பிள்

மேற்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட இம்மரங்கள் சோப் பெர்ரி குடும்பத்தைச் சார்ந்தவை. லிச்சி மற்றும் லொங்கன் பழங்களும் இக்குடும்பத்தைச் சார்ந்தவையே. அச்சி, அகீ, அயி, அக்கி ஆப்பிள் (Ackee Apple) என பல பெயர்களால் இம்மரம் அழைக்கப்படுகிறது.

இதன் தாவரவியல் பெயர் பிளிகியா சேப்பிடா (Blighia sapida). 1793 ஆம் ஆண்டு ஜமைக்காவில் இருந்து இப்பழங்களை இங்கிலாந்திலுள்ள கியூ ராயல் தாவரவியல் பூங்காவிற்கு எடுத்துச் சென்ற வில்லியம் பிளிக் – கை கௌரவிக்கும் விதமாக, இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது.

அக்கி மரங்கள் 30 முதல் 50 அடி உயரம் வரை வளர்கின்றன. பழுத்த பழங்கள் பளிச்சென்ற சிவப்பு அல்லது மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்தில் உள்ளன. ஒரு பழம் 100 முதல் 200 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.

நன்றாக பழுத்தவுடன் பழங்கள் வெடித்து, மஞ்சள் நிற சதை சூழப்பட்ட மூன்று கருப்பு நிற விதைகள் வெளிப்படுகின்றன. வெடிக்காத பழங்கள் விஷத்தன்மை கொண்டதாக இருப்பதால், பழங்கள் பழுத்து முழுவதுமாக வெடித்த பின்னரே பறிக்கப்படுகின்றன. பழுத்த பழங்களும் பச்சையாக உண்ணப்படுவதில்லை. நன்றாக வேகவைத்த பின்னரே உண்ணப்படுகின்றன.

A bunch of ripe Ackee on a tree in a garden in Nevis West Indies

பழங்களின் விஷத்தன்மை

பழுக்காத அக்கி பழங்களிலுள்ள ஹைபோகிளைசின் ஏ மற்றும் பி, ரத்தத்தில் சக்கரை உற்பத்தியை தடை செய்கிறது. அத்துடன் பச்சையான அக்கி பழங்களை சாப்பிடுவதன் காரணமாக கடுமையான வாந்தி, கோமா மற்றும் மரணமும் ஏற்படுகிறது. எனவே சரியாக பதப்படுத்தப்படாத பச்சையான அக்கி பழங்களின் இறக்குமதி அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட பழங்கள் கூட முறையான பரிசோதனைக்குப் பின்னரே இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகின்றன.

சிறப்புகள்

அக்கி பழங்களில் அதிகளவு விட்டமின் ஏ, புரதம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளது. இப்பழங்கள் காய்ச்சல் மற்றும் சளியை குறைப்பதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், இதயம் மற்றும் எலும்புக்கு வலு சேர்ப்பதாகவும் கூறுகின்றனர். இம்மரத்தின் இளந்தளிர்களை அரைத்து தலைவலிக்கு மருந்தாக பூசுகின்றனர்.  இவற்றின் பூ, சோப் மற்றும் நறுமண தைலங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. பழத்தோல், மீன் விஷமாக பயன்படுத்தப்படுகிறது.

அக்கிப்பழ நாடு

அக்கி மரம் மேற்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், இதன் பழங்களை அதிகமாக பயன்படுத்தும் நாடு ஜமைக்கா தான். 1778 ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஜமைக்காவுக்கு அடிமைகளை ஏற்றி சென்ற கப்பலிலிருந்த விதைகளின் மூலம் இம்மரம் ஜமைக்காவில் பரவியதாக கூறப்படுகிறது. இன்று அந்நாட்டின் தேசிய பழம் இதுவே. அக்கி மற்றும் கருவாடு சேர்த்து தயாரிக்கப்படும் உணவே, ஜமைக்காவின் தேசிய உணவாகும். விஷத்தன்மை கொண்டதாக இருந்தாலும், வறுத்த முட்டையை ஒத்த இதன் சுவைக்காக பெரும்பாலான ஜமைக்கர்களின் உணவு மேடையை அலங்கரிக்கும் பழமாக இது உள்ளது.

முனைவர். வானதி பைசல்

 விலங்கியலாளர்

Exit mobile version