Vivasayam | விவசாயம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பிரம்மன் மாடுகள்

அமெரிக்காவில் 1885 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கலப்பின மாடுகள் இவை. இந்தியாவை சேர்ந்த கிர், குசரெத், நெல்லூர் மற்றும் கிருஷ்ணா பள்ளத்தாக்கு நாட்டு மாடுகளை, அமெரிக்க மாடுகளோடு இணைத்து இந்த கலப்பின மாடுகளை உருவாக்கியுள்ளனர். இப்பொழுதும் அமெரிக்க ஹியர்போர்டு மற்றும் குட்டை கொம்பு மாடுகளோடு கலப்பினம் செய்தே அதிக சக்தி வாய்ந்த அமெரிக்க பிரம்மன் மாடுகளை (American Brahman) உருவாக்கி வருகின்றனர்.

அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா மற்றும் பிரேசிலுக்கும் இந்த மாடுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. பிரம்மன் மாடுகள் அதிக வெப்பத்தை தாங்கும் தன்மை கொண்டவையாக இருப்பதால், ஆஸ்திரேலியாவில் மிக அதிகமாக வளர்க்கப்படும் கால்நடை வகையாக இவை மாறியுள்ளன.

பண்ணை உரிமையாளர்கள் விரும்பி வளர்க்க காரணம்

இம்மாடுகள் அதிக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பதோடு, அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை தாங்க கூடியவையாகவும் உள்ளன. இவற்றின் தோல் மிகவும் தடிமனாக இருப்பதால், பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் தாக்குதலிலிருந்து எளிதில் தப்பிக்கின்றன.

பிரம்மன் மாடுகள் பெரும்பாலும் இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகின்றன. ஆண் மாடுகள் 800 முதல் 1100 கிலோ எடை கொண்டவையாகவும், பெண் மாடுகள் 500 முதல் 700 கிலோ எடை கொண்டவையாகவும் உள்ளன. ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு லிட்டர் பாலை இம்மாடுகள் கொடுக்கின்றன. ஒரு மாட்டின் விலை 12,500 முதல் 15,000 அமெரிக்க டாலர்.

இவை மிக நீண்ட ஆயுட்காலம் கொண்ட மாடுகள். 15 முதல் 20 ஆண்டுகள் வரை இவை உயிர் வாழ்கின்றன. 15 வயதில் கூட இவை தரமான கன்றுகளை ஈனுகின்றன. இதன் காரணமாகவும் பலர் இம்மாடுகளை வளர்ப்பதற்கு விரும்புகின்றனர்.

ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டில் காளைச் சண்டைக்காக, அமெரிக்க பிரம்மன் மாடுகளை பால் மற்றும் தேன் கொடுத்து  வளர்க்கின்றனர். வெளிநாட்டினர் விரும்பும் ஒரு கலப்பின மாடு, நம் நாட்டை பூர்வீகமாகக் கொண்டது என்பதில் நமக்கும் மகிழ்ச்சி தான்.

முனைவர். வானதி பைசல்

விலங்கியலாளர்

Exit mobile version