மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் வாழ்ந்த காவல் நாய்களின் வழித்தோன்றல்கள் இவை. இந்நாய்களுக்கு மஸ்டினோ நெப்போலிடனோ (Mastino Nepalitano) என்றொரு பெயரும் உண்டு. செல்லமாக மஸ்டினோ அல்லது நியோ மஸ்டீஃப் என்று அழைக்கின்றனர். பேரரசர் அலெக்ஸாண்டரின் செல்ல நாயான பெரிற்றா, நியாபாலிடன் மஸ்டீஃப் (Neapolitan Mastiff) இனத்தை சார்ந்தது தான் என்று கூறுகின்றனர்.
உருவமைப்பு
மஸ்டிப் வகையை சேர்ந்த இந்நாய்கள் 65 முதல் 75 செ. மீ உயரமும், 60 முதல் 70 கிலோ எடையும் கொண்டவையாக இருக்கும். பிறந்து 24 மாதங்களில் இவை முழு வளர்ச்சியை எட்டி விடுகின்றன. உடல் முழுவதும் சாம்பல் அல்லது கருப்பு நிறத்தில் குட்டையான பளபளப்பான முடியுடனும், கழுத்தின் அடிப்பகுதி மற்றும் கால் விரல்களில் வெண்ணிற முடியுடனும் இவை காணப்படும்.
பராமரிக்கும் முறை
இந்நாய்கள் மிகவும் அமைதியாகவும், வளர்ப்பவருக்கு உண்மையாகவும் இருப்பதால், பெரிய நாய்களை வளர்க்க விரும்புபவர்கள் இவற்றை விரும்பி வாங்குகின்றனர். மிகப்பெரிய நாய்களான இவை அதிகளவு உணவையும் உட்கொள்கின்றன. ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை மிகவும் தரமான நாய் உணவு இவற்றிற்கு அளிக்கப்பட வேண்டும். அத்துடன் இந்நாய்களை வளர்ப்பவர்கள் கண்டிப்பாக தினமும் இருமுறை, 20 நிமிடங்கள் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்தியாவில் ஒரு நாயின் விலை 25,000 முதல் 30,000 ரூபாய். இவை 10 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
சிறப்பு தகவல்கள்
இந்நாய்களின் தனித்துவ அடையாளம் அவற்றின் பெரிய உருவமும், முகத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் சதைகளும் தான். முதலில் தோன்றிய மஸ்டீஃப் வகை நாய்களில், இவ்வளவு அதிகமான சதை முகத்தில் தொங்கவில்லை என்பதை சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் மூலம் அறிய முடிகிறது. தொடர்ச்சியான தேர்ந்தெடுக்கப்பட்ட இனச்சேர்க்கையின் மூலமே இவ்வாறு அதிக தொங்கு சதையுள்ள நாய்களை நாய் பிரியர்கள் உருவாக்கியுள்ளனர். மனிதன் பெரிதும் விரும்புவது சிறப்பு குணங்களைத்தான்.
முனைவர். வானதி ஃபைசல்
விலங்கியலாளர்