அயர்லாந்து நாட்டை பூர்வீகமாகக் கொண்ட நாய் இனம் இது. அங்குள்ள மக்கள் ஓநாய், மான், கரடி போன்றவற்றை வேட்டையாடுவதற்காக ஐரிஷ் வுல்ஃப் ஹௌண்ட் நாய்களை (Irish wolf Hound) பயன்படுத்தியுள்ளனர். கி.பி இரண்டாம் நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டு வரை அயர்லாந்து ராணுவத்தில் 300 ஐரிஷ் வுல்ஃப் ஹௌண்ட் நாய்கள் பணியில் இருந்துள்ளன.
இவை சைட் ஹௌண்ட் (Sight Hound) இனத்தைச் சார்ந்த நாய்களாகும். நம்மூர் நாட்டு நாய்களான சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, ராஜபாளையம் அனைத்துமே சைட் ஹௌண்ட் இன நாய்கள் தான்.
ஐரிஷ் வுல்ஃப் ஹௌண்ட் நாய்களுக்கு கோழி, ஆடு, மாடு, இவற்றின் இறைச்சி மற்றும் எலும்புகளையும், மீன் மற்றும் முட்டையையும் சமைக்காமலேயே அளிக்கின்றனர். இவை 81 முதல் 86 செ. மீ உயரமும், 40.5 முதல் 54.5 கிலோ எடையும் கொண்டவையாக இருக்கும். ஒரு நேரத்தில் நான்கு முதல் பத்து குட்டிகளை ஈனுகின்றன. இவற்றின் ஆயுட்காலம் 7 முதல் 10 ஆண்டுகள். ஒரு நாயின் விலை 1500 முதல் 2500 டாலர்.
இந்நாய்கள் வெள்ளை, சாம்பல், கருப்பு, சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் சொரசொரப்பான முடியை கொண்டுள்ளன. பின்னங் கால்களைக் கொண்டு எழும்பி நிற்கும் போது இவற்றின் உயரம் ஏழு அடி வரை இருக்கும். உருவத்தில் பெரியதாக இருந்தாலும் மனிதர்களிடம் மிகவும் அமைதியாகவும் நட்புடனும் இந்நாய்கள் பழகுகின்றன.
முனைவர். வானதி பைசல்
விலங்கியலாளர்