கருப்பு அல்லது சாம்பல் நிறத்தில் வெள்ளை நிற திட்டுக்களுடன், கண்ணைக்கவரும் அழகோடு காணப்படும் இந்த செம்மறியாடுகள் பிரிட்டனை பூர்வீகமாகக் கொண்டவை. 350 ஆண்டுகளுக்கும் மேலாக இவை அங்கு வளர்க்கப்பட்டு வருகின்றன. ஜேக்கப் செம்மறியாடுகள் பெரும்பாலும் நான்கு கொம்புகளை கொண்டவையாக இருக்கும். ஆண் பெண் இரு ஆடுகளுக்கும் கொம்புகள் உண்டு.
பைபிளை (பழைய ஏற்பாடு) பின்பற்றியே இவற்றை ஜேக்கப் செம்மறியாடுகள் என்று அழைக்கின்றனர். பைபிளில் ஜேக்கப் மெசபடோமியாவிலிருந்து எகிப்திற்கு செல்லும் போது தன்னுடன் கருப்பு வெள்ளை திட்டுக்களுடன் கூடிய ஆட்டுமந்தையை கூட்டி சென்றதாக கூறுகின்றனர். அதே ஆடுகளின் வழி தோன்றல்கள் இவை என்று கருதுவதால், இவற்றிற்கு ஜேக்கப் செம்மறியாடுகள் என்று பெயர் வைத்துள்ளனர். இவற்றிற்கு ஸ்பானிஷ் செம்மறியாடுகள் என்றொரு பெயரும் உண்டு.
பல நூற்றாண்டுகளாக இங்கிலாந்திலுள்ள பண்ணை உரிமையாளர்கள் தங்களின் பெரிய தோட்டங்கள் மற்றும் எஸ்டேட்டுகளில் அழகுக்காக இவ்வகை ஆடுகளை வளர்த்து வந்துள்ளனர். எனவே இந்த ஆடுகளுக்கு பூங்கா செம்மறியாடு (Park Sheep) என்றொரு பெயரும் உண்டு.
இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், இங்கிலாந்திலிருந்து வட அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இன்று அங்கும் கணிசமான எண்ணிக்கையில் இந்த செம்மறியாடுகள் உள்ளன.
ஜேக்கப் செம்மறியாடுகள் இறைச்சி, கம்பளி மற்றும் தோலுக்காக வளர்க்கப்படுகின்றன. வளர்ந்த ஆடுகள் 3.5 முதல் 4.5 அடி உயரம் வரை இருக்கும். ஆண் ஆடுகள் 54 முதல் 82 கிலோ எடையும், பெண் ஆடுகள் 36 முதல் 54 கிலோ எடையும் கொண்டவையாக இருக்கும். இவற்றிற்கு தானியங்கள், காய்கறிகள் மற்றும் ஆல்ஃபால்பா ஆகியவற்றை உணவாக அளிக்கின்றனர்.
15 முதல் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழும் ஜேக்கப் செம்மறி ஆடுகள், குளிர் காலங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. முதலில் கருவுறும்போது ஒற்றை ஆட்டை ஈனும் இவ்வகை ஆடுகள், அதன் பின்னான கருவுறுதலில் 1 முதல் 2 ஆடுகளை ஈனுகின்றன. ஒரு ஜோடி ஜேக்கப் செம்மறியாட்டின் விலை ரூ 17,000.
ஆண்டுக்கு இரண்டு முதல் இரண்டரை கிலோ கம்பளியை ஜேக்கப் செம்மறியாடுகள் கொடுக்கின்றன. பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், இவற்றின் கம்பளி சிறிது சொரசொரப்பாகவும், அரிக்கும் தன்மையுடனும் இருப்பதால் பெரும்பாலும் தொப்பி, கையுறை மற்றும் ஸ்வெட்டரின் வெளிப்புறத்தை அலங்கரிப்பதற்காகவே இவற்றை பயன்படுத்துகின்றனர்.
முனைவர். வானதி பைசல்
விலங்கியலாளர்