டிஸ்னி திரைப்படங்களில் வரும் கலிபோர்னிய காடைகள்
அழகிய கொண்டை வைத்துள்ள இந்த சிறிய காடைகளை, கலிபோர்னிய பள்ளத்தாக்கு காடை மற்றும் பள்ளத்தாக்கு காடை என்றும் அழைக்கின்றனர். ஒன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை உயிர் வாழும் இக்காடைகளின் விலங்கியல் பெயர் கேலிபெப்லா கலிபோர்னிகா (Callipepla californica).
அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த காடைகள் இப்போது கொலம்பியா, ஹவாய், சிலி, உருகுவே, பிரேசில், அர்ஜென்டினா, பெரு, தென் அமெரிக்கா நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிலுள்ள சில தீவுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஊசியிலை காடுகள், புதர்காடுகள், புல்வெளிகள், விளைநிலங்கள் மற்றும் நகரங்களில் உள்ள பூங்காக்களிலும் இவை வாழ்கின்றன.
விசித்திர முட்டையிடும் பழக்கம்
கலிபோர்னிய காடைகள் 150 முதல் 190 கிராம் எடை கொண்டவையாக இருக்கும். இவை குழுவாக வாழக்கூடியவை. இக்குழுக்களை கவி (Covey) என்று அழைக்கின்றனர். ஒரு நேரத்தில் 12 முட்டைகளை இட்டு, 22 முதல் 23 நாட்கள் அடைகாக்கின்றன. இளம் குஞ்சுகள் 3 முதல் 4 வாரங்களில் தனித்து வாழ துவங்குகின்றன.
இந்த காடைகளில் ஒரு விசித்திர பழக்கம் உள்ளது. பெண் காடைகள் தம்முடைய கூட்டில் மட்டுமின்றி, மற்ற காடைகளின் கூடுகளிலும் சென்று மூட்டையை இட்டு செல்கின்றன. இவ்வாறு முட்டையிடும் முறையை, முட்டை குவித்தல் (Egg Dumping) என்று கூறுகின்றனர். இதன் காரணமாக சில கூடுகளில் 15 முதல் 28 முட்டைகளை பார்க்க முடிகிறது.
சிறப்பு தகவல்கள்
கலிபோர்னிய காடைகளின் தலையிலுள்ள ஆறு சிறகுகளாலான கொண்டை முடிக்கொத்து இவற்றை தனித்துவப்படுத்தி காட்டுகிறது. இதன் காரணமாகவே பிரபலமான வால்ட் டிஸ்னி திரைப்படங்களில் கார்ட்டூன் கதாபாத்திரங்களாக இக்காடைகளை பயன்படுத்தியுள்ளனர்.
1932 ஆம் ஆண்டிலிருந்து, அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தின் மாநில பறவையாக இந்த காடைகள் உள்ளன.
முனைவர். வானதி பைசல்,
விலங்கியலாளர்.