Vivasayam | விவசாயம்

செல்லப் பிராணியாக மாற்றப்பட்ட பாலைவன நரிகள்

செல்லப் பிராணியாக மாற்றப்பட்ட பாலைவன நரிகள்

நரி இனங்களிலேயே மிகச் சிறியவையும், பெரிய காதினை கொண்டவையும் இந்த பாலைவன நரிகள் (Fennec Fox) தான். இவற்றின் விலங்கியல் பெயர் வல்பஸ் ஸெர்டா (Vulpes zerda). ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள அல்ஜீரியா, மொராக்கோ, சேடு, லிபியா, மாலி, டுனீசியா, சினாய் தீபகற்பம், சஹாரா பாலைவனத்தின் மேற்கு பகுதி மற்றும் அரேபிய தீபகற்பத்திலும் இவை பரவலாக வாழ்கின்றன. அல்ஜீரிய நாட்டின் தேசிய விலங்கு இந்த பாலைவன நரிகள் தான்.

உணவு

அனைத்துண்ணியான பாலைவன நரிகள் இலைகள், கிழங்குகள், பழங்கள், பூச்சிகள் பல்லிகள், கொறிணிகள், சிறிய பறவைகள் மற்றும் முட்டைகளை உண்கின்றன. ஆனால் இவை மிகவும் விரும்பி உண்பது வெட்டுக்கிளிகளை தான். அதிகாலை நேரத்திலும், அந்தி சாயும் நேரத்திலும் மட்டுமே உணவை தேட வெளியே வரும் இந்நரிகள், மற்ற நேரங்களில் நிழலான இடங்களில் ஓய்வு எடுப்பதையே விரும்புகின்றன.

உருவமைப்பு

பாலைவனத்தில் வாழும் இந்த நரிகளின் முடிகள் மணல் நிறத்தில் காணப்படுவதால், எளிதாக எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்கின்றன. இந்த நரிகளுக்கு மூக்கின் நுனியும், வாலின் நுனியும் மட்டும் கருநிறத்தில் உள்ளது. இவற்றின் பெரிய காதுகள் உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்த உதவுகிறது. 20 செ. மீ உயரம் மட்டுமே கொண்ட இந்த சிறிய நரிகள், 0.68 முதல் 1.9 கிலோ எடை வரை மட்டுமே இருக்கும்.

இனப்பெருக்கம்

காடுகளில் 10 ஆண்டுகள் வரையும், பாதுகாக்கப்பட்ட வாழிடங்களில் 14 ஆண்டுகள் வரையும் இவை உயிர் வாழ்கின்றன. பெரும்பாலும் பத்து நரிகள் இணைந்த கூட்டமாகவே இவை வாழும். 9 மாதங்களில் இனமுதிர்ச்சி அடையும் பாலைவன நரிகளின் கர்ப்ப காலம் 50 முதல் 65 நாட்கள். ஒரு நேரத்தில் 1 முதல் 4 குட்டிகளை ஈனுகின்றன. 61 முதல் 70 நாட்களில் குட்டிகள் தனியே வாழ தொடங்கும்.

இன்றைய நிலை

துறுதுறுப்புடன் கூடிய அழகிய தோற்றத்திற்காகவும்,  மனிதர்களோடு எளிதாக பழகுவதன் காரணமாகவும் உலகின் பல நாடுகளில் இவற்றை செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர். ஒரு பாலைவன நரி குட்டியின் விலை 2500 முதல் 4000 அமெரிக்க டாலர்.

             மற்ற நரி வகைகளைப் போல இவை மனிதர்களையோ, அவர்கள் வளர்க்கும் கால்நடைகளையோ தாக்குவதில்லை. ஆனாலும் சுற்றுலா பயணிகளுக்கு காண்பிப்பதற்காகவும், வளர்ப்பு பிராணிகள் சந்தைக்காகவும் மிக அதிக அளவில் மனிதர்களால் வேட்டையாடப்பட்டு வருகின்றன. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கப் பட்டியலில் அழிவாய்ப்பு கவலை குறைந்த இனமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், பல இடங்களில் இவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே தான் வருகின்றது. அழகிய உயிரினம் எதையும் விட்டு வைக்க மனிதன் தயாராக இல்லை.

முனைவர். வானதி பைசல்,

விலங்கியலாளர்.

Exit mobile version