கௌதாரி இனங்களிலேயே மிகப்பெரியவை இந்த காட்டு கௌதாரிகள் (Wood Grouse) தான். இதனை மேற்கு கேப்பர்கேலி, யுரேஷிய கேப்பர்கேலி, காட்டுச் சேவல் மற்றும் புதர் சேவல் என்று பல பெயர்களால் அழைக்கின்றனர். இதன் விலங்கியல் பெயர் டெட்ராவோ உரோகேலிஸ் (Tetrao urogallis)
ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டத்தின் வடக்கு பகுதியிலுள்ள ஊசியிலை காடுகளில் பரவலாக காணப்படும் வலசை போகாத பறவை இது.
கற்களை தின்னும் விசித்திர பறவை
காட்டு கௌதாரிகளின் விருப்பமான உணவு மொட்டுகள், இலைகள், பெரி வகை பழங்கள் மற்றும் பூச்சிகளாகும். குளிர்காலங்களில் இவை ஊசியிலை மரத்தின் இலைகளை உண்கின்றன. அந்நேரங்களில் ஊசி போன்ற இலைகளை ஜீரணிப்பதற்காக சிறிய கற்களையும் தேடி உண்கின்றன.
இனப்பெருக்கம் மற்றும் வாழ்க்கை முறை
உருவம் மற்றும் நிறத்தை வைத்து ஆண் பெண் இரு கௌதாரிகளையும் மிக எளிதாக வேறுபடுத்தி அறியலாம். பெண் பறவைகளை விட ஆண் பறவைகள் இரண்டு மடங்கு அளவில் பெரியதாக இருக்கும். பெண் கௌதாரிகள் 1.5 முதல் 2.5 கிலோ எடையையும், ஆண் கௌதாரிகள் 4.1 முதல் 7.2 கிலோ எடையையும் கொண்டதாக இருக்கும்.
காட்டு கௌதாரிகள் ஒரு நேரத்தில் 12 முட்டைகளை இட்டு 20 முதல் 28 நாட்கள் வரை அடை காக்கின்றன. காடுகளில் பத்து ஆண்டுகள் வரையும், பாதுகாக்கப்பட்ட வாழிடங்களில் 18 ஆண்டுகள் வரையும் இவை உயிர் வாழ்கின்றன.
உலகளவில் 30 முதல் 50 லட்சம் காட்டு கௌதாரிகள் இருப்பதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. எனவே பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இவற்றை அழிவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள் (Least Concern) வரிசையில் இணைத்துள்ளது.
ஆனால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக, மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பாவில் விளையாட்டுக்காக வேட்டையாடுபவர்களின் விருப்பமான பறவையாக இந்த காட்டு கௌதாரி இருந்துள்ளது. இதன் காரணமாக அயர்லாந்து, பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து இப்பறவை முற்றிலுமாக அழிந்துவிட்டது. குறைந்து வரும் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, ஐரோப்பா மற்றும் ஆசியாவிலுள்ள பெரும்பாலான நாடுகள் காட்டு கௌதாரிகளை வேட்டையாடுவதை தடை செய்துள்ளன.
முனைவர். வானதி பைசல்,
விலங்கியலாளர்.