Skip to content

இலங்கைக்கு உதவுங்கள்…

அக்ரிசக்தி வானும் மண்ணும் 2023 மாநாட்டுக்கு இலங்கையில் இருந்து வந்து கலந்துகொண்ட உரையாற்றிய உயிர்ப்பூ அமைப்பின் சார்பில் செல்வி. நிலக்சனா அவர்கள் கலந்துகொண்டு அவர் ஆற்றிய உரை..

இங்கே கூடி வந்திருக்கும் ஐயா, அம்மா, அண்ணாக்கள் அக்காக்கள் எல்லாருக்கும் இலங்கையிலிருந்து வந்திருக்கும்  நிலக்சனாவின் அன்பு வணக்கங்கள்.

எங்களை இடர்கள் சூழும் போது எங்களோடிணைந்து எங்களை மீட்டெடுக்க உதவிக்கரம் தரும் தமிழ் நாட்டு மக்கள்,ஆன்றோர்கள் சான்றோர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் எமது சிரம் தாழ்ந்த வணக்கம்.

இந்த மேடையில் பேச கிடைத்திருக்கும் இந்த தருணத்தை எங்களுக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பாக நான் நினைக்கின்றேன். இவ்வரிய வாய்ப்பினை தந்திருக்கும் அக்ரி சக்தி செல்வ முரளி அண்ணாவுக்கும் அவரோடிணைந்து பணியாற்றும் அனைத்து பெரியோர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

நான் நிலக்சனா சுதாகரன், இலங்கையில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பினை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவள். இலங்கையில் குண்டசாலை எனுமிடத்தில் இருக்கும் Sri Lanka School of Agriculture என்னும் விவசாய கல்லூரியில் உயர் தேசிய டிப்ளமோ விவசாய உற்பத்தி தொழில்நுட்ப படிப்பை முடித்திருக்கின்றேன்.

சுவிசலாந்தில் வசிக்கும்  நிஷாந்தி பிரபாகரன் அவர்களால் நிறுவப்பட்ட உயிர்ப்பூ அறக்கட்டளை மூன்று வருடங்களுக்கும் மேலாக பேஸ்புக் ஊடாக முன்னெடுக்கும் சமுக விழிப்புணர்வு மேம்பாடு சமுக அர்ப்பணிப்பு, அக்கறை சார்ந்த பணி திட்டங்களால் ஈர்க்கபட்டு 2022 மாசி மாதம் அவர்களை தொடர்பு கொண்டு பேசி ஏப்ரல் மாதம் தொடக்கம் இலங்கையின் நிர்வாக / நிதி பொருளாளர் மற்றும் கள செயல் பாட்டு ஒருங்கிணைப்பாளராக இணைந்து இயற்கை விவசாயம் & சமுக மேம்பாட்டு திட்டங்களில் களப்பணியாளராக பயிற்சி எடுத்து கொண்டிருக்கின்றேன்.

இலங்கை நாட்டுக்குள் இரசாயன உரங்கள் தடை செய்யப்பட்டு உணவுப்பொருட்கள் விலையேற்றம், தட்டுப்பாடு மற்றும் அன்னிய செலவணி பொருளாதார நெருக்கடியான நிலையில் அதிலிருந்து நாங்கள் மீண்டு வர வேண்டும் எனும் இலக்கில் இயற்கை விவசாயம் குறித்தும் தற்சார்பு சுய தொழில் மேம்பாடுகள் குறித்து உயிர்ப்பூ அறக்கட்டளை நிர்வாகி நிஷாந்தி பிரபாகரன் அம்மாவின் வேண்டிகோளிக்கிணங்க அக்ரி சக்தி செல்வமுரளி அண்ணாவும், ஆரண்யா பண்ணை அல்லியம்மாவும் ஜூம் மூலம் கணணி வேளான் பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றார்கள். முரளி அண்ணா எங்களுக்கு கணணி – வேளாண் தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சிகளுடன் இயற்கை விவசாயம், சேதன பசளைகள், உயிர் உரங்கள் குறித்தும் அல்லியம்மா உணபு உற்பத்தி , மதிப்பூ கூட்டல், சோப் தயார் செய்வதில் இருந்து வீட்டு தேவைகளை நாம் எவ்வாறு தற்சார்பில் எமக்கு நாமே தயார் செய்து கொள்ளலாம் என்பதையும் கற்று தந்து கொண்டிருக்கின்றார்கள்.

அதனூடாக நாங்கள் பல விடயங்களை கற்று கொண்டு இளம் தொழில் முனைவோர்களாக மேம்பாடு அடைய வேண்டும் என ஊக்கம் தந்து கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்கும் எங்கள் உயிர்ப்பூ அறக்கட்டளையின் சார்பில் நன்றிகளை தெரிவிக்கின்றோம்.

உயிர்ப்பூ அறக்கட்டளை இலங்கையில் இனம், மதம் மொழி பேதமற்ற தற்சார்பு சமுக மேம்பாட்டு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

உயிர்ப்பூ அறக்கட்ட்ளையின் நிறுவனர் சுவிஸர்லாந்தில் வசிக்கும் நிஷாந்தி பிரபாகரன் அம்மா அவர்களும் அவருடன் ஒன்றிணைந்து எங்கள் சமுக மேம்பாட்டில் தம்மை அர்ப்பணித்து கொண்டிருக்கும் அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான ஆராய்ச்சியாளராக இருக்கும் முனைவர்  குமாரவேல் கணேசன்  ஐயா அவர்களும், பிரான்சில் வசிக்கும் மயூரன் கணேசலிங்கம் அண்ணா அவர்களும் இணைந்து நாங்கள் எங்கள் இடர்களில் இருந்து வெளியே வந்து உலகளாவிய தொழில் நுட்ப சிந்தனை மேம்பாடுகளுக்கு ஏற்றபடி மேம்பாடு அடைய வேண்டும் எனும் நோக்கத்தில் என்னை அக்ரி சக்தி இயற்கை வேளான் சர்வதேச மா நாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பை தந்திருக்கின்றார்கள். அம்மா, ஐயா அண்ணா மற்றும் எம்மோடிணைந்து கள செயல்பாடுகளை முன்னெடுக்கும் அனைவருக்கும் நான் இந்த மேடையில் நன்றிகளை தெரிவிக்கின்றேன்

உயிர்ப்பூ அறக்கட்டளையின் சார்பாக நிஷாம்மாவின் முழுமையான ஆதரவில் நான் இங்கே வந்திருக்கின்றேன். உயிர்ப்பூ அறக்கட்டளை ஊடாக ஒரே நேரத்தில் நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு கட்ட மேம்பாட்டு பணிகள் இனம், மொழி மதம் கடந்த தற்சார்பு சமுகம் ஒன்றை உருவாக்கும் இலக்கில் பயணித்து கொண்டிருக்கின்றோம். சிறப்பான தலைமைத்துவ கட்டமைப்பை கொண்ட உயிர்ப்பூ & STEM-Kalvi  ஊடாக பல நல்லுள்ளங்களின் ஆதரவோடு சமுக மேம்பாட்டு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன

  • நிஷாம்மா எங்களை தற்சார்பு தொழில் முனைவோர்களாக இயற்கை விவசாயம், உணவு உற்பத்தி, உணவுச்சேமிப்பு , உணவுப்பாதுகாப்பு வணிகம் சந்தைப்படுத்தல் என பல களங்களில் பயிற்று வித்து கொண்டிருக்கின்றார்கள்.
  • முனைவர் கணேசன் ஐயா கல்வி மேம்பாடு, பாடசாலைக்கல்வி, மாணவர்கள் பாதுகாப்பு சார்ந்த மேம்பாடுகளை முன்னெடுத்து கொண்டிருக்கின்றார்கள். கணேசன் ஐயா ஸ்டெம் கல்வி எனும் அறக்கட்டளை மூலமும் பாடசாலை மாணவர்களுக்குரிய கல்வி மேம்பாடு, ஆங்கில கல்வி என பல்வேறு கட்டப்பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
  • மயூரன் அண்ணா நூலக திட்டம் உடல் & உளவியல் சார்ந்த சிந்தனை மேம்பாடுகளிலும், எம்க்கான ஊட்டச்சத்து மேம்பாட்டு விழிப்புணர்வுகளிலும் முன் பள்ளி குழந்தைகளுக்குரிய உணவு திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றார்கள

உயிர்ப்பூ  அறக்கட்டளை

கல்வி , தற்சார்பு, பொருளாதாரம் பண்பாட்டு, கலை, கலாச்சார மேம்பாட்டு அமைப்பு

இலங்கை வடக்கு கிழக்கு மலையகத்தில் பல கள செயல்பாடுகளை முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.

  1. தற்சார்பு வாழ்க்கையில் அவசியம் குறித்த விழிப்புணர்வு
  2. காணி / வேளான். விவசாய தொழில் முனைவோருக்குரிய இலவச திட்ட முன் மொழிவுகள்
  3. பாடசாலை தோட்டம்  
  4. வீட்டு தோட்டம் / உணவு உற்பத்தி
  5. விதை சேமிப்பு திட்டம்
  6. உணவு சேமிப்பு / மதிப்பு கூட்டி பாதுகாக்கும் வழி முறைகள்
  7. மர நடுகை
  8. ஒருங்கிணைந்த பண்ணை முயற்சிகள்
  9. இயற்கை விவ்சாய விழிப்புணர்வு பிரச்சாரங்கள்
  10. முன் பள்ளி சிறுவர்களுக்குரிய ஊட்டச்சத்துணவு  திட்டம்
  11. பாடசாலை மாணவர்களுக்குரிய கல்வி மேம்பாடு / இடைவிலகல் மாணவர்களுக்குரிய  காரணங்களை கண்டறிந்து உதவிகள் / உளவியல் சார்ந்த ஊக்குவிப்புக்கள்
  12. பாடசாலை மாணவர்களுக்குரிய போக்குவரத்து ஏற்பாடு
  13. பாடசாலைகளில் நூலக திட்டங்கள்
  14. போதை பயன் பாடுகளிலிருந்து மீட்டெடுத்தல் முயற்சிகள்
  15. கணிணி வேளான் தொழில் நுட்பம்  – தொழில் முனைவோர் பயிற்சிக்களம்,
  16. இளம் தொழில் முனைவோருக்குரிய ஆதரவு முதலீட்டு உதவிகள்
  17. பேரிடர் கால நிவாரண உதவிகள்
  18. கைதொழில் ஊக்குவிப்பு முயற்சிகள்
  19. பெண்கள் – குழந்தைகளுக்குரிய மோட்டிவேட் பயிற்சிகள்

பாடசாலை மாணவர்களுக்குரிய தற்சார்பு பாதுகாப்பு இலக்கில்

  • மலையகத்தில்  சுமார் 150 பாடசாலைகளில் தோட்டம்,
  • கிழக்கு மாகாணத்தில்  25 க்கு மேற்பட்ட பாடசாலை தோட்டங்கள்
  • 500க்கும் மேற்பட்ட வீட்டு தோட்டங்கள்  உருவாக்க பட்டிருக்கின்றன.
  • விவசாய உபகரணங்களும் தரப்பட்டிருக்கின்றன்.

நாடு முழுவதும் சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரவள்ளி தண்டங்களும். பல ஆயிரம் வற்றாளை தண்டுகளும்,  பல இலட்சங்கள் பெறுமதி மிக்க நாற்றுக்கள், சோளம், குரக்கன் போன்ற தானியங்கள் காய்கறி, கீரை விதைகளும். பழ மரங்கள், தென்னை மரங்கள் விதைகப்பட்டிருக்கின்றன. தொடர்ந்தும் பல்வேறு கட்ட பணிகளை  காலம் சூழ நிலைகளை அவதானித்து வேகமாக அதே நேரம்  எமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புக்களை விரயம

செய்யகூடாது எனும் விவேகத்தோடு உறுதியாக பற்றி கொண்டவர்களாக  நாங்கள் ஒரு குடும்பமாக உயிர்ப்பூவுக்குள் எங்களை உயிர்ப்பித்து கொண்டிருக்கின்றோம். எமது முயற்சிகள் வெற்றி பெறவும் மேலும் வலுப்படவும், உங்கள் நல்லாதரவுகளையும் அனுசரனைகளையும் எதிர்பார்க்கின்றோம்.

கடந்த கால கதைகள் பேசி பேசி நூறாண்டுகளாக  நாங்கள் கைவிடபப்டிருக்கின்றோம், எங்களுக்குரிய கல்வி மேம்பாடு வசதிகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள், தொழில் முயற்சி திட்டங்கள் எல்லாமே மிக கடினமாக இருக்கின்றன. எங்களை போன்ற இளைஞர்கள் எதிர்காலம் பாதுகாப்பற்று  என்னாகுமோ என பயமாக இருக்கின்றது.  எங்களுக்கு உதவி செய்யுங்கள். எங்களுக்குரிய வாய்ப்புக்கள் எல்லாம் அடைபட்டிருக்கின்றன. எகிறி வரும் விலைவாசியில் நாளாந்தம் வாழ்க்கை செலவுகளை சமாளிக்கவே சிரமப்படும் நிலையில் எமது பெற்றோர்களால் மேலதிக பயிற்சிகளை தருவதுக்குரிய பொருளாதார வசதிகள் இல்லை.

 எங்கள் ஆற்றல் ஆளுமைகளை வெளிக்கொண்டு வந்து  எமக்கிருக்கும் மனித / நில வளங்களை முழுமையாக பயன் படுத்தி உலக தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு எமது உளவியல் / சமுக சிந்தனைகளை மேம்படுத்தி பொருளாதாரத்திலும் சுய தற்சார்பு சமுகமாக் மேம்பாடு அடைய உதவிகள் செய்யுங்கள். நீங்கள் எங்களுக்க்கு செய்யும் உதவிகளை உறுதியாக் பற்றிக்கொண்டு நாம் உயரும் போது அனைத்தையும்  நன்றியோடு இரண்டந்தனையாக திருப்பி தர முடியும் எனும் நம்பிக்கையோடு எங்கள் தாய்  தமிழ் நாட்டின் தமிழ் மக்களை தேடி வந்திருக்கின்றோம்.

  • எங்களுக்குரிய இயற்கை வேளாண் பயிற்சிகள்
  • உணவு சேமிப்பு பாதுகாப்புக்குரிய பயிற்சிகள்
  • விவசாய தொழில் நுட்ப உபகரணங்கள்
  • இணைய தொழில் நுட்ப பயிற்சிகள்
  • இளம் பெண்களுக்குரிய தொழில் முனைவோர் மேம்பாட்டு உதவிகள்
  • பாடசாலை நூலகங்களுக்கு நூல்கள்

தந்துதவுங்கள், எப்போதும் இரந்து வாங்கி இலவசங்களால் வாழும் நிலையை மாற்றி எங்களை நாங்கள் மீட்டெடுக்க உதவுங்கள். கடனாக தந்தாலும் திருப்பி தருவோம் எனும் நம்பிக்கையை எங்களுக்குள் விதையாகி விருட்சமாக  உங்கள் நல்லாசிகளையும் ஆதரவுகள் அனுசரனைகளையும் வேண்டி நிற்கும் உங்கள் அன்பு மகள் நிலா.  

எனக்கு இவ்வாய்ப்பிணை தந்த முரளி அண்ணா. நிஷாம்மா, கணேசன் ஐயா, மயூரண் அண்ணா, டில்சான் அண்ணா, அல்லிம்மா  மற்றும் என்னோடிணைந்த தோழிகள் உயிர்ப்பூ அறக்கட்டளை வளர்ச்சியில் உடன் வரும் யோகா ஐயா, ஜனகன் அண்ணா. வாகீசர் ஐயா, மோகனா அம்மா உட்பட  எம்முடன் இனைந்து வரும் அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

இது வரை என் பேச்சினை அமைதியாக கேட்டு கொண்டிருக்கும்  அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.   வணக்கம்.

——————————————————————————

இலங்கையில் உயிர்ப்பூ அமைப்பின் சார்பில் நடத்தப்பெற்ற பல பயிற்சிகளை அக்ரிசக்தி ஒருங்கிணைத்து இருந்தது. இனிமேலும் தொடர்ந்து அவர்களுக்குத் தேவையான நுட்ப உதவிகளை அக்ரிசக்தி வழங்கும் என்று இதன் வழியே உறுதியளிக்கிறோம்.

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj