அரசப்புறா
உருண்டையான உடல் அமைப்பின் காரணமாக, கோழிகளைப் போன்று தோற்றமளிக்கும் இந்த புறாக்கள் அமெரிக்காவில் (19ஆம் நூற்றாண்டு) உருவாக்கப்பட்டவையாகும். டச்சஸ், ஹோமர், ரன்ட், மால்டீஸ் ஆகிய நான்கு புறாக்களிலிருந்து உருவாக்கப்பட்ட கலப்பினம் தான் இந்த அரச புறாக்கள் (King Pigeon). இவற்றின் முன்னோர்கள் மாடப்புறாக்கள்.
பொதுவாக புறாக்களில் இறைச்சியின் அளவு மிக குறைவாக இருக்கும். அதை ஈடு கட்டும் விதமாக, அதிகளவு இறைச்சி மற்றும் முட்டையை கொடுக்கும் புறாக்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த அரசபுறாக்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இன்று இறைச்சிக்காக அல்லாமல் பெருமளவில் அழகுக்காகவும், கண்காட்சிக்காகவுமே இப்புறாக்கள் வளர்க்கப்படுகின்றன.
அரசப்புறாக்கள் 850 முதல் ஒரு கிலோ எடை வரை இவை வளர்கின்றன. இவற்றின் அதிக எடையின் காரணமாக, 15 அடிக்கு அதிகமாக இவற்றால் பறக்க இயலாது. வெள்ளை, பழுப்பு, வெள்ளி, கருப்பு, சாம்பல், மஞ்சள், சிகப்பு என பல நிறங்களில் இப்புறாக்கள் காணப்படுகின்றன.
சோளம், தினை, பார்லி, பட்டாணி, கோதுமை, சூரியகாந்தி விதை, காய்கறிகள், பழங்கள் ஆகியவை இவற்றிற்கு உணவாக அளிக்கப்படுகின்றன.
ஆறு மாதங்களில் இன முதிர்ச்சி அடையும் இப்புறாக்கள், ஒரு நேரத்தில் இரண்டு முட்டைகளை இடுகின்றன. 18 முதல் 19 நாட்கள் ஆண், பெண் புறாக்கள் இணைந்து அடைகாக்கின்றன. இவற்றின் ஆயுட்காலம் 14 முதல் 15 ஆண்டுகள்.
ஒரு ஜோடி புறா 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.
முனைவர். வானதி பைசல், விலங்கியலாளர்.