Site icon Vivasayam | விவசாயம்

செம்முக குரங்குகளும் மனிதர்களும்

மனிதர்களுக்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் பரவியுள்ள குரங்கினம் செம்முக குரங்குகளே. ஆசிய கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இக்குரங்குகள் இப்போது வட அமெரிக்காவிலும் பரவியுள்ளன. மருத்துவ ஆராய்ச்சிக்காகவும், விலங்கியல் பூங்காவுக்காகவும் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்ட குரங்குகளில் தப்பியவை இன்று அங்கு பெருங்குழுக்களாக வாழ்ந்து வருகின்றன.

காடுகள், மலைகள், புல்வெளிகள், சதுப்பு நிலங்கள், பாறை பகுதிகள் என பல வகைப்பட்ட சூழலிலும் இவை வாழக் கூடியவை. பெரும்பாலும் மனித குடியிருப்புகளுக்கு அருகில் வாழ்வதையே விரும்புகின்றன.

உருவமைப்பும் வாழ்க்கை முறையும்

இளம் பழுப்பு நிறத்திலிருக்கும், இக்குரங்குகளின் முகம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கின்றது. இதனாலேயே இவை செம்முக குரங்குகள் (Rhesus Monkey) என்றழைக்கப்படுகின்றன. இவற்றின் விலங்கியல் பெயர் மெக்காக்கா முலேட்டா (Macaca mulatta). இவை பெருங்குழுக்களாக வாழக்கூடியவை. குழுக்களில் 80 முதல் 100 குரங்குகளை இயல்பாக காணலாம். சில நேரங்களில் 200 குரங்குகள் இணைந்த குழுக்களையும் காண இயலும்.

பெண் குரங்குகள் இரண்டரை முதல் மூன்று வயதுக்குள்ளாகவும் ஆண் குரங்குகள் நான்கரை முதல் 7 வயதுக்குள்ளாகவும் இன முதிர்ச்சி அடைகின்றன இவற்றின் கர்ப்ப காலம் 165 முதல் 170 நாட்கள். வளர்ந்த குரங்குகள் ஐந்தரை முதல் ஏழரை கிலோ எடை வரை இருக்கும்.

மனிதர்களால் மாறிய உணவு பட்டியல்

பல வகையான உணவுகளை செம்முகக் குரங்குகள் உண்கின்றன. இயற்கையான சூழலில் இக்குரங்குகள் பழங்கள், விதைகள், வேர்கள், பட்டைகள், பூச்சிகள், சிலந்திகள், பறவை முட்டைகள், சிறிய விலங்குகள் ஆகியவற்றை உண்கின்றன.

ஆனால் இன்றோ 95% மனிதர்களால் அளிக்கப்படும் உணவைத்தான் இவை உண்கின்றன. காடுகள், மலைகள் சார்ந்த சுற்றுலா தலங்களுக்கு செல்லும்போது உணவுக்காக, சாலையோரங்களில் இவை கையேந்தி நிற்கும் பரிதாபக் காட்சியை பல இடங்களில் நாம் காணலாம்.

வாழைப்பழம், கடலை, விதைகள், காய்கறிகள், துரித உணவுகள், ஐஸ்கிரீம், ஜூஸ் போன்றவற்றை மனிதர்கள் இவற்றிற்கு அளிக்கின்றனர். அது மட்டுமின்றி குப்பையிலிருந்தும் இவை உணவினை பொறுக்கி உண்கின்றன.

செம்முக குரங்குகளும் விவசாயமும்

மனிதர்களுடன் மிக நெருங்கி வாழும் செம்முக குரங்குகள், பல இடங்களில் விவசாயிகளுக்கு பெரும் தொல்லையாக மாறியுள்ளன. குறிப்பாக இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநில விவசாயிகள் ஆண்டுதோறும் இக்குரங்குகளால் பெரும் நஷ்டத்தை அடைகின்றனர். ஆப்பிள், பீச், மாம்பழம், கொய்யா, பேரிக்காய் போன்ற விவசாயிகளுக்கு லாபம் கொடுக்கும் பழ மரங்கள் உள்ள தோட்டங்களை குரங்குகள் முற்றிலுமாக  சூறையாடி விடுகின்றன. ஜம்மு காஷ்மீரில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 33 கோடி ரூபாய் வருவாய் இழப்பு இக்குரங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. அங்கு குரங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக, 2018 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 1,40,000 குரங்குகளுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளனர்.

உத்தரகாண்டில் 50% விவசாய நிலம், இக்குரங்குகளின் தொல்லை காரணமாக பயிரிடப்பட முடியாமல் தரிசு நிலமாக கைவிடப்பட்டுள்ளது. எனவே பல இடங்களில் விவசாயிகள், குரங்குகள் உண்ணாத பூச்செடிகளையும், மூலிகைச் செடிகளான அஸ்வகந்தா, சோற்றுக் கற்றாழை, எலுமிச்சைப்புல், துளசி, தண்ணீர் விட்டான் கிழங்கு, வல்லாரை, நிலவேம்பு போன்ற செடிகளையும் வளர்க்க துவங்கியுள்ளனர்.

செம்முக குரங்குகளும் மருத்துவமும்

செம்முக குரங்குகளில் நோய்களை குணமாக்கும் மருந்துகள் 99 சதவீதம் மனிதர்களிடமும் நோயை குணப்படுத்துகின்றன. எனவே இக்குரங்குகளில் மிக அதிக அளவில் மருத்துவ பரிசோதனைகளை விஞ்ஞானிகள் நடத்துகின்றனர். இவற்றின் மரபணு மனிதர்களை ஒத்திருப்பதும், கூண்டுகளில் எளிதாக இனப்பெருக்கம் செய்யும் இவற்றின் தன்மையும் இதற்கான காரணங்களாக கருதப்படுகிறது.

எய்ட்ஸ், காசநோய், மஞ்சள் காமாலை, புற்றுநோய், போலியோ, அம்மை நோய்கள் மற்றும் மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா போன்ற கொசுவினால் பரவும் நோய்கள் போன்ற அனைத்து நோய்களுக்குமான, மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சிகள் செம்முக குரங்குகளின் மீது நிகழ்த்தப்படுகின்றன. செம்முக குரங்குகளின்றி பெரும்பாலான மருத்துவ ஆராய்ச்சிகள் நிறைவுறுவதில்லை என்பதே உண்மை.

தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பூசிக்கான ஆராய்ச்சியை இக்குரங்குகளின் மேல் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். 1970களில் பெருமளவு குரங்குகள், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு மருத்துவத்திற்காக ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால் தற்போது அவ்வகை ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளதால், அங்கு செம்முக குரங்குகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்கு தேவையான அளவு செம்முக குரங்குகளில்லாத காரணத்தினால், 2021 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா இக்குரங்குகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிப்பதற்காக மட்டும் 29 மில்லியன் டாலர் செலவழித்துள்ளது

விலங்குகளின் மேல் மருத்துவ பரிசோதனை என்பது மிகவும் வேதனை தரக்கூடிய விஷயம்தான். ஆனாலும் நாம் இன்று பயன்படுத்தும் பெரும்பாலான மருந்துகள் செம்முக குரங்குகளின் உதவியின்றி மனிதகுலத்திற்கு கிடைத்திருக்காது என்பதே உண்மை..!

முனைவர். வானதி பைசல்,

விலங்கியலாளர்.

Exit mobile version